19:1 அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
19:2 ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
19:3 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
19:4 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
19:5 இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
19:6 அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.
19:7 அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்.
19:8 சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
19:9 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
19:10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
19:11 அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
19:12 பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வரும்படி தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.
19:13 புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
19:14 அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
19:15 அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
19:16 அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
19:17 எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
19:18 அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
19:19 அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
19:20 பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.
19:21 நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
19:22 அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
19:23 பின்னே ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி;
19:24 சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
19:25 அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
19:26 அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19:27 அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்