exodus 5:6-14 Read full chapter: 5 6 அன்றியும், அந்நாளிலே பார்வோன் ஜனங்களின் ஆளோட்டிகளையும் அவர்கள் தலைவரையும் நோக்கி: 7 செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி ஜனங்களுக்கு வைக்கோல் கொடுக்க வேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும். 8 அவர்கள் முன்செய்து கொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்க வேண்டாம், அவர்கள் சோம்பலாய் இருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள். 9 அந்த மனிதர் மேல் முன்னிலும் அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்: வீண் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க விடாதிருங்கள் என்று கட்டளையிட்டான். 10 அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப் போய் ஜனங்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை; 11 நீங்களே போய் உங்களுக்கு அகப்படுகிற இடங்களில் வைக்கோல் சம்பாதியுங்கள்; ஆனாலும் உங்கள் வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார் என்றார்கள். 12 அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள். 13 ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள். 14 பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன் செய்தது போல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.