1:1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
1:2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
1:3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
1:4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
1:5 பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,
1:6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.
1:7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
1:8 அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.
1:9 காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,
1:10 தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எனக்கு அறிவித்தார்.
1:11 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,
1:12 தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.
1:13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
1:14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.