9:1 சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.
9:2 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான்; அவளுக்கு விடுவிக்காதபடிக்கு ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.
9:3 சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய பானபாத்திரக்காரரையும், அவர் அரமனையையும்,
9:4 அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவர்கள் வஸ்திரங்களையும், கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,
9:5 ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று.
9:6 நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது.
9:7 உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.
9:8 உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கப்பண்ண, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்குச் சிநேகிக்கிறதினாலே, அவர் நியாயமும் நீதியும்செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள்
9:9 அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக்கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருக்காலும் வரவில்லை.
9:10 ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும் சாலொமோனின் வேலைக்காரரும் வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.
9:11 அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை.
9:12 சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைப்பார்க்கிலும் அதிகமாய் அவள் ஆசைப்பட்டுக்கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடுங்கூட தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.