3:16 அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
3:17 அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன்.
3:18 நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே, இந்த ஸ்திரீயும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒருமித்திருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை.
3:19 இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று.
3:20 அப்பொழுது, உமது அடியாள் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள்;
3:21 என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்த போது, அது செத்துக்கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்று பார்க்கும் போது, அது நான் பெற்றபிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள்.
3:22 அதற்கு மற்ற ஸ்திரீ: அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள்.
3:23 அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,
3:24 ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.
3:25 ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான்.
3:26 அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள்.
3:27 அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான்.
3:28 ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.