1chronicles 28:9-21

9 என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

10 இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக்கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.

11 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானம் இருக்கவேண்டிய மாதிரியையும்,

12 ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்,

13 ஆசாரியரையும் லேவியரையும் வரிசைகளாக வகுக்கிறதற்கும், கர்த்தருடைய ஆலயப்பணிவிடை வேலை அனைத்திற்கும், கர்த்தருடைய ஆலயத்து வேலையின் பணிமுட்டுகள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான்.

14 அவன் பற்பல வேலைக்கு வேண்டிய சகல பொற்பாத்திரங்களுக்காக நிறையின்படி பொன்னையும், பற்பல வேலைக்குவேண்டிய சகல வெள்ளிப்பாத்திரங்களுக்காக, நிறையின்படி வெள்ளியையும்,

15 பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளில் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய வெள்ளியையும்,

16 சமுகத்தப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி மேைஐகளுக்கு வேண்டிய வெள்ளியையும்,

17 முள்குறடுகளுக்கும் கலங்களுக்கும் தட்டுகளுக்கும் வேண்டிய பசும்பொன்னையும், பொன் கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும், வெள்ளிக்கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும்,

18 தூபங்காட்டும் பீடத்திற்கு நிறையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, செட்டைகளை விரித்துக் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து,

19 இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.

20 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.

21 இதோ, தேவனுடைய ஆலயத்துவேலைக்கெல்லாம் ஆசாரியர் அவருடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லாக் கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும், உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், சகல ஜனங்களும் என்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.

Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.