வெளிப்படுத்தின விசேஷம் 6-  விளக்கவுரை


6ம் அதிகாரம்: துன்ப காலத்தின் ஆரம்பம் முத்திரைகள் உடைக்கப்படல்

முதலாம் முத்திரை ஆட்டுக்குட்டியானவர் முதலாம் முத்திரையை உடைக்கும் பொழுது ஒரு ஜீவன் யோவானை வந்து பார் என்றது, யோவான் ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டான். அதின் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருத்தான்; அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் ஜெயிக்கிறவனாகவும், ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.

வெள்ளைக்குதிரை வெற்றிக்கு அடையாளம், அப்படியானால் அதில் ஏறியிருந்தது மேசியாவா? அது மேசியாவாக இருக்க முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் கூறலாம்:

1. முத்திரைகளை உடைப்பதே ஆட்டுக்குட்டியாகிய மேசியாதான். பின் எப்படி அவர் குதிரையில் ஏறிப்போவார்?

2. இரண்டாவதாக, முதலிலேயே அவர் வெற்றி வீரனாக வந்துவிட்டால் யுத்தங்களும், மற்ற சம்பவங்களும் நடப்பதில் அர்த்தமே கிடையாதே!

அப்படி அது மேசியா இல்லை என்றால், பின் அது யார்?அது அந்திக்கிறிஸ்துவின் ஆவி, அவனிடம்வில் இருந்தது,பூமியிலே வில் ஒரு யுத்த ஆயுதம், அது அவனிடமிருந்தது. ஆனால் அவனிடம் அம்புகளில்லையே! பின் எப்படி யுத்தம்பண்ணுவான்? எப்படி ஜெயிப்பான்? அவன் யுத்தம் பண்ணவேமாட்டான். ஆனால் ஜெயிப்பான் தானி. 8:23 - 25 வாசித்தால் அது விளங்கும், மூர்க்க மூகமும், சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ராஜா எழும்புவான். தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி ஜெயிப்பான், அவன் சாத்தானின் பிரதிநிதி. சாத்தானுக்கு தேவ பிள்ளைகள் மேல் வல்லமை கிடையாது. ஆனால் வஞ்சகத்தில் வல்லமையுள்ளவன். சாத்தானின் அந்திக்கிறிஸ்துவும் அப்படியே இருப்பான். சாத்தானுக்கும், அவனால் அதிகாரம் பெற்ற அந்திக்கிறிஸ்துவுக்கும் பூமியை ஆளுவதே நோக்கம், பரலோகத்தில் சேவகம் புரிவதைவிட நரகத்தில் ஆளுகை செய்வதே மேல். சாத்தானுக்கு பரலோகம் பிடிக்காது. நீ போவதும் பிடிக்காது. தடுக்கப் பார்ப்பான். விழித்திருந்து ஜெபம்பண்ணு,

இரண்டாம் முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் இறந்தபோது, இரண்டாம் ஜீவன் யோவானை, வந்து பார்! என அழைத்தது. அப்பொழுது யோவான் சிவப்பான ஒரு குதிரையையும் அதின மேல் ஏறியிருந்தவனையும்கண்டான். அவனுக்கு பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

சிகப்பு நிறம் சாதாரணமாக ஆபத்தைக்குறிக்கும், ஒரு தனி மனிதனோ, குடும்பமோ, சமுதாயமோ, தேசமோ சமாதானமில்லையென்றால் எப்படி இருக்குமென சிந்தித்துப் பாருங்கள். தற்கொலைகள், கற்பழித்துக் கொலை செய்தல், நகைக்காக கொலை, இவைகள் பெருகிக் கொண்டே போகிறது, காரணமென்ன? சாத்தான் மக்கள் நடுவிலிருந்து சமாதானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகநீக்கிவிட்டு, வன்முறைகளையும், சாதிக்கலவரங்களையும், மதத்தின் பெயரால் கொலைகளையும், இனப்படுகொலைகளையும் அந்திக்கிறிஸ்துவின் ஆவியையும் அவிழ்த்து விட்டிருக்கிறான். மனைவி அரிவாளால் கணவனை வெட்டிக்கொலை செய்யும் காலத்திலிருக்கிறோம். இது ஆரம்பம்தான். போகப் போக எப்படியிருக்குமோ? பட்டயம் தண்டனையையும், சாபத்தையும் தாங்கொணொ வேதனையையும் குறிக்கும்.

வ 5-6: மூன்றாம் முத்திரை
மூன்றாம் முத்திரை திறக்கப்படும் பொழுது, மூன்றாம் ஜீவனானது யோவானை அழைத்து வந்து பார் என்றது. யோவான் ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டான். அதின்மேல் ஏறியிருந்தவன் தன் கையிலே ஒரு தராசைப் பிடித்திருந்தான் அப்பொழுது ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும் ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன் 

கறுப்புக்குதிரை பஞ்சத்தைக் குறிக்கும், பஞ்சம் தேவனுடைய தண்டனையைக் குறிக்கும், எசேக், 14:21ஐ வாசிப்போமென்றால், “நான் மனுஷரையும், மிருகங்களையும் நாசம்பண்ணும்படி, எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும் போது எவ்வளவு அதிக சங்காரமாகும்? பஞ்சம் ஒரு தேவ தண்டனை.

ஒரு பணம் ஒரு யூதனின் ஒருநாள் சம்பளம், அதில் ஒருபடி கோதுமை வாங்கினால் அது அவனுக்கு மட்டும்தான். பத்தும், குடும்பத்திற்கு ஒன்றும் வாங்க முடியாது. மிருகங்களுக்குப்போடும் வாற்கோதுமை மூன்று படி வாங்கினால் குடும்பத்திற்குப் போதும். ஆனால் எண்ணெயோ, திராட்சரசமோ வாங்க முடியாது, அவை விலை அதிகமானவை. ஏழைகள் வாங்க முடியாது, பஞ்சம் பணக்காரர்களைப் பாதிக்காது. ஆனால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். லேவி, 26:26ஐ வாசியுங்கள். உங்கள் அப்பம் எனும் ஆதரவு கோலை நான் முறித்துப்போடும் போது பத்து ஸ்திரிகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தை சுட்டு, அதை திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள், நீங்கள் திருப்தியடைய மாட்டீர்கள்.”

பாடுபடும் ஏழைகள் மனந்திரும்பி தேவனை நோக்கிக் கூப்பிட்டு ரட்சிக்கப்படுவார்கள், பணக்காரர்களோ திருப்தியாயிருப்பதால் தேவனைத் தேடாமல் நியாயத்தீர்ப்படைந்து, நரகத்திலே தள்ளப்படுவார்கள். (லூ. 16; லாசரு ஐசுவரியவான் யாக், 2:5) பஞ்சம் துன்ப காலத்தின் ஆரம்பத்திற்கோர் அடையாளம்.

வ 7,8: நான்காம் முத்திரை மங்கின நிறமுள்ள குதிரை நாலாம் ஜீவன் யோவானை அழைத்து நான்காம் முத்திரை உடைப்பதைப் பாரென்றது. ஒரு மங்கின நிறமுள்ள குதிரை. அதின்மேலிருந்தவனுக்கு மரணம் என்று பெயர், பாதாளம் அவன் பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக்கொடுக்கப்பட்டது. (எசேக், 14:21)

மரணம் முடிவல்ல - ஒரு தற்காலிக பிரிவே, ஆத்துமா சரீரத்தை விட்டு பிரிவது சரீர மரணம்; ஆத்துமா தேவனை விட்டுப் பிரிவது ஆவிக்குரிய நித்திய மரணம், நியாயத்தீர்ப்பிற்குப் பின் மரணமும், பாதாளமும் அக்கினிக்கடலாகிய நரகத்திலே தள்ளப்படுவார்கள். (வெளி. 20:14)

இன்றும் பூமியில் கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது, தற்கொலைகள்,நகைக்காக, பணத்திற்காக, இச்சைவெறிக்காக, சாதி மத வைராக்கியத்திற்காக நடக்கும் கொலைகள் கூடிக் கொண்டேபோகின்றன. எதையும் தடுக்கவோ, குறைக்கவோ யாராலும் முடியவில்லை! இது நாம் கடைசிக்காலத்தில் இருக்கிறோம் என்பதற்கான அடையாளம், இதோ இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும் என்பது நிறைவேறிக்கொண்டிருக்கிறது..

வ 9-11: ஐந்தாம் முத்திரை பரலோகத்தில் ரத்தசாட்சிகள்

நான்கு முத்திரைகள் உடைக்கப்படும் போதும், நான்கு ஜீவன்களும் யோவானை அழைத்தன. ஆனால் ஐந்தரம் முத்திரை உடைக்கும் பொழுது யோவான் தான் இருந்த இடத்திலிருந்தே பலிபீடத்தின் கீழ் ரத்த சாட்சிகளாக மரித்த ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டான். பழைய ஏற்பாட்டில் பலியாக கொல்லப்பட்ட மிருகங்களின் ரத்தம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றப்பட்டது. மாம்சத்தின் உயிர் அதின் ரத்தத்திலிருக்கிறது ஆகவே ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் அடியில் யோவான் கண்டான். பூத பாரம்பரியத்தின்படியேயும் ஆத்துமாக்கள் பலிபீடத்தினடியில் தான் கரக்கப்படுகின்றன. அந்த ஆத்துமாக்கள் 7 வருட அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் கொல்லப்பட்ட விசுவாசிகளின் ஆத்துமாக்களாக. இருக்கலாம். அந்த ஆத்துமாக்கள் தேவனை நோக்கி எங்கள் ரத்தத்திற்காக எதுவரைக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமலும், பழிவாங்காமலும் இருப்பீர்?” என்று கூப்பிட்டன அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் ரட்சிக்கப்படாத ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்புக்குப் பயந்து “எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்?” என்று கதறின. நாம் எப்படி? துதிப்போமா அல்லது அலறுவோமா? (வ10)

வ 11: ரத்த சாட்சிகளானாலும் கேட்டது கிடைக்கவில்லை. “இன்னும் கொஞ்சக்காலம் காத்திருங்கள்' என்ற பதில் கிடைத்தது. அதை உறுதிப்படுத்தி ஆறுதல்படுத்த பரலோகத்தின் ஆடையாகிய வெள்ளை அங்கி கொடுக்கப்பட்டது.

வ 12-17: யோவான் ஆறாம் முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைக்கக் கண்டான். பூமி மிகவும் அதிர்ந்தது. சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று, ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்டபொழுது இதுபோன்ற காட்சி காணப்பட்டதாகச் சொல்லுகிறார்கள், ஏதோ ஒரு பயங்கரமான வெடி வெடித்திருக்க வேண்டும் அதனால்தான் நட்சத்திரங்களும் அத்திக்காய்கள் போல உதிர்ந்திருக்க வேண்டும்.

வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போல (அளவு சுருங்கி) விலகிற்று.. மலைகளும், தீவுகளும் இடம் பெயர்ந்தன. எவ்வளவு பயங்கரமான சத்தம் உண்டாயிருந்திருக்கும்! சீனாய் மலையில் கற்பனைகளை அன்பின் தேவன் அன்பாகக் கொடுத்த போது உண்டான சத்தத்தைக்கேட்ட இஸ்ரவேலர் என்ன சொன்னார்கள்? தேவன் எங்களோடே பேச வேண்டாம்! அவ்வளவு பயந்தார்கள். இப்பொழுதோ தேவன் கோபமாக: சராசரங்களை அசைக்கும் பொழுது எவ்வளவு பயங்கரமான சத்தம் உண்டாகும்? இதைக் கேட்கிற யார்தான் பயப்படாமல் இருக்க முடியும்? பூமியின் ராஜாக்களும்,பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும் பர்வதங்களின் குகைகளிலும், கன்மலைகளிலும் ஒளிந்துக்கொண்டு எங்களை மறைத்துக் கொள்ளுங்கள் என்று அலறுவார்கள். இரட்சிக்கப்பட்டு விசுவாசிகளான நமக்கோ ஒரு புகழிடமுண்டு! அதுதான் கல்வாரிச்சிலுவை! மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னை "விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

Author: Rev. S.C. Edison


Author: Rev. S.C. Edison