வெளிப்படுத்தின விசேஷம் 10- விளக்கவுரை
அதிகாரம் - 10 ‘இனி காலம் செல்லாது’ ‘…பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்… “இனி காலம் செல்லாது” …என்று…ஆணையிட்டுச் சொன்னான். வச 1- 4: இந்த பலமுள்ள தூதன் மற்ற தூதர்களிலும் வித்தியாசமானவனாகவும் தேவனுடைய செய்தியை இடிகளின் சத்தத்தைப்போல அறிவிக்க அதிகாரம் உடையவனாகக் காட்சியளித்தான். ஆனால், நிச்சயமாக இந்த தூதன் கிறிஸ்து அல்ல. ஏனென்றால், யோவான் மற்ற தரிசனங்களில் கிறிஸ்துவை கண்டபோது வணங்கி தொழுதுகொண்டதுபோல இந்த தூதனைக் கண்டபோது செய்யவில்லை. அவன் கையிலிருந்த புத்தகம் திறந்திருந்தது, அப்புத்தகத்தில் எழுதப்பட்டவை எல்லா மக்களும் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று உணர்த்துகிறது. மேகம் வானவில், சூரியன் போன்ற இயற்கை படைப்பகளால் சூழப்பட்டும், சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்பதுமாக இந்த தூதன் காணப்பட்டது, இவன் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையுள்ள ஊழியன் என்பதையும், இந்த தூதன் அறிவிக்கும் செய்தி பூமியின் எல்லா பகுதிகளையும் பாதிக்கப்போவதையும் தெரிவிக்கிறது. வச 6, 7 : ‘இனி காலம் செல்லாது’ என்று இந்த பலமுள்ள தூதன் தான் சொன்னதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆணையிட்டு சொன்னான. அந்திக் கிறிஸ்துவின ஆட்சி முடிவுக்கு வரவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சி இந்த பூமியில துவங்கவும் காலம் நெருங்கிவிட்டது. மேலும் அந்த பலமுள்ள தூதன், ஏழாம் தூதன் எக்காள் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்றும் சொன்னான். தேவன் தமது தீர்க்கதரிசிகள் மூலமாக சத்திய வேதத்தில் உரைத்துள்ள கீழ்படியாத தேசங்கள் மேல் தமது நியாயத்தீர்ப்பின் கோபாக்கினை ஊற்றப்போகும் தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறி முடியும். வச 8- 10: அந்த பலமுள்ள தூதனுடைய கையிலிருந்த திறந்த புத்தகத்தை வாங்கி புசிக்கும்படியாக கட்டளை பெற்றான். யோவன் அதை வாங்கி புசித்தபோது அது அவன் வாய்க்கு மதுரமாகவும் வயிற்றுக்கோ கசப்பாகவும் இருந்தது. ஆம், கர்த்தருடைய கட்டளைகள் கேட்பதற்கு இனிமையாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஆனால், அவற்றை கடைபிடிக்கும்போது அவை சற்று கடினமாகவும், சில கசப்பான அனுபவங்களினூடே செல்ல வேண்டியதாகவும் இருக்கும். வச 11: யோவான் தான் ஒதுக்கப்பட்ட ஒரு தீவில் தப்பிக்க வழியில்லாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால் தனது எல்லா ஊழியங்களும் முடிந்துவிட்டது என்றே நினைத்தான். ஆனால், இங்கே தேவன் யோவானிடம் இன்னும் உனக்கு ஊழியங்கள் உண்டு என்று சொன்னார். திறக்கப்பட்ட அந்த புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனங்களை இப்பொழுது யோவான் புறஜாதிகளிடம் சென்று அறிவிக்க வேண்டும். அந்த புத்தகத்தை யோவான் புசியாதிருந்தால் அதில் எழுதப்பட்டவற்றை தீர்க்கதரிசனமாக உரைக்க முடியாதவனாக இருந்திருப்பான். Author: Rev. Dr. R. Samuel
‘There will be no more delay.’
ஏழு இடி முழக்கங்களாக இந்த தூதன் பேசியதை எழுதவேண்டாம் என்று யோவான் தடுக்கப்பட்டான்.(வச 4), ஏனென்றால், அந்த அறிவிப்பால் வரப்போகும் நிகழ்வுகள் உடனே நிகழாமல் சற்று தாமதமாகும் என்பதே.
Author: Rev. S.C. Edison