மத்தேயு அதிகாரம் 8 - விளக்கவுரை


முக்கியக் கருத்து: இயேசு நோய்களையும், புயலையும், பிசாசுகளையும் கட்டளையிடுகிறார்.

 

மலைப்பிரசங்கம் முடிந்தது. ஆனால் இயேசு வெறும் வார்த்தைகளால் மட்டும் கற்பித்தவர் அல்ல — அவரது வார்த்தைகளுக்கு வல்லமை இருக்கிறது என்று செயலில் காட்டினார். மத்தேயு 8-ல் ஒன்றன்பின் ஒன்றாக அற்புதங்கள் வருகின்றன.

 

1. (வச.1-17) — தொட்டு சுகமாக்கினார்

குஷ்டரோகி வந்தான். அக்காலத்தில் குஷ்டரோகி என்பவன் சமுதாயத்திலிருந்து தள்ளப்பட்டவன். யாரும் தொடக்கூடாது. ஆனால் அவன் இயேசுவிடம் வந்து சொன்னான் — ஆண்டவரே, உமக்கு மனசு இருந்தால் என்னை சுத்தமாக்க வல்லவர். இயேசு கை நீட்டி தொட்டார் — மனசு இருக்கிறது, சுத்தமாகு என்று.

 

தொட்டார். யாரும் தொடாத ஒருவனை. இது வெறும் சுகமளித்தல் அல்ல — இது அன்பின் வெளிப்பாடு. தேவன் நம்மை தொட விரும்புகிறார் — நம் வலியில், நம் தனிமையில், நம் அவமானத்தில்.

"இயேசு கை நீட்டி அவனை தொட்டு: மனசு இருக்கிறது, சுத்தமாகு என்றார்."  — மத்தேயு 8:3

சங்கீதம் 34:18 — இருதயம் நொறுங்கினவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

இன்று நமக்கு: இன்று நீங்கள் தொடப்படாதவரைப்போல் உணர்கிறீர்களா? இயேசு உங்களையும் தொட விரும்புகிறார்.

 

2. (வச.18-27) — புயலை அதட்டினார்

படகில் கடலை கடக்கும்போது பெரிய புயல் வந்தது. சீஷர்கள் பயந்தார்கள் — ஆண்டவரே, இரட்சியும், மடிந்துபோகிறோம் என்று. இயேசு எழுந்தார். காற்றையும் கடலையும் அதட்டினார். பெரும் அமைதி உண்டாயிற்று.

 

சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள் — இவர் எப்படிப்பட்டவர், காற்றும் கடலும் இவருக்கு கீழ்படிகிறதே! நம் வாழ்வின் புயல்களும் இயேசுவின் அதிகாரத்திற்கு கீழ்ப்படியும். அவர் படகில் இருக்கும்வரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

"அவர் எழுந்து காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே பெரும் அமைதி உண்டாயிற்று."  — மத்தேயு 8:26

சங்கீதம் 107:29 — புயலை அமைதியாக்கி அலைகள் அடங்கும்படி செய்தார்.

இன்று நமக்கு: உங்கள் வாழ்வில் புயல் வருகிறதா? இயேசு அதை அதட்ட வல்லவர் — அவரை அழையுங்கள்.

 

3. (வச.28-34) — பிசாசுகளை துரத்தினார்

கதரேனர் தேசத்தில் இரண்டு பிசாசு பிடித்தவர்கள் வந்தார்கள். கல்லறைகளிலிருந்து வந்தார்கள். மிகவும் கொடிய மனிதர்கள் — யாரும் அந்த வழியே போக முடியாதிருந்தது. ஆனால் இயேசுவை பார்த்தவுடன் பிசாசுகள் கதறின — தேவகுமாரனே, எங்களை வருத்தப்படுத்த வந்தீரோ?

 

இயேசு கட்டளையிட்டார். பிசாசுகள் போயின. மனிதர்கள் சுகமடைந்தார்கள். யாரும் மீட்க முடியாதவர்களை இயேசு மீட்கிறார். எந்த வலியும், எந்த அடிமைத்தனமும் இயேசுவின் அதிகாரத்திற்கு மேலானதில்லை.

"பிசாசுகள் அவரை வேண்டிக்கொண்டது: நீர் எங்களை அனுப்புவதாயிருந்தால் பன்றிகளின் கூட்டத்தினுள் அனுப்பும்."  — மத்தேயு 8:31

கொலோசெயர் 2:15 — அவர் துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் போர்க்களத்தில் வெட்டுண்டவர்களைப்போல் காட்டி வெற்றிக்கொண்டார்.

இன்று நமக்கு: எந்த கட்டுகளிலும் இருந்தாலும் — இயேசு விடுவிக்க வல்லவர். அவரை நம்புங்கள்.


Author: Tamilbiblesearch