ஞானம் Vs புத்திசாலித்தனம்

ஒரு பதின்ம வயதினன் (teenager), தந்தை ஸ்மார்ட்போன் வாங்கிதர மறுத்ததற்காக ஆத்திரமடைந்தான். அதனால் மனமுடைந்து, பின்னர் தற்கொலையும் செய்து கொண்டான். ஸ்மார்ட்போன் இருந்தால் தான் புத்திசாலி ஆக முடியும்; அப்படி புத்திசாலி ஆக விடாமல் தன் தந்தை தடுத்து விட்டதாக எண்ணினான். ஆனால், உண்மை என்னவென்றால், ஒருவரை புத்திசாலியாக மாற்றுவது ஸ்மார்ட்போன் அல்ல; கர்த்தருக்கான பயமே ஞானத்தின் ஆரம்பம் என்று வேதாகமம் கூறுகிறது (நீதிமொழிகள் 9:10). ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கே கூட ஞானம் அத்தியாவசியம்.

ஞானம் எளிதாகக் கிடைக்கக்கூடியது:
இப்போது அனைவரும் எங்கே சென்றாலும் Wi-Fi கிடைக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால், ஞானம் எங்கே வேண்டுமானாலும் இலவசமாகக் கிடைக்கிறது என வேதாகமம் கற்பிக்கிறது (நீதிமொழிகள் 1:20–21). ஒரு பெண்ணைப் போல் உருவகப்படுத்தப்பட்ட ஞானம், பாவிகள், நேர்மையற்றவர்கள், சந்தேகிகள், நையாண்டிகாரர்கள், தன்னைத்தான் புத்திசாலி என நினைப்பவர்கள், மற்றும் அறியாமையில் இருப்பவர்களையும் மனந்திரும்பி தேவனை ஏற்க அழைக்கிறது. முதலில், ஞானம் எளிதாகக் கிடைக்கிறது; அது தெருக்களில் உரக்கக் கூவி அழைக்கிறது. தேவனுடைய வார்த்தையான இந்த ஞானம், அனைத்து இடங்களிலும், டிஜிட்டல் உலகத்தில்கூட, எளிதாகக் கிடைக்கும். இரண்டாவது, ஞானம் சந்தைகள், மால்கள் மற்றும் வாணிப மையங்களிலும் தன் சத்தத்தை உயர்த்துகிறது. மூன்றாவது, பலவிதமான சத்தங்களின் நடுவிலும், ஞானத்தின் குரல் தெளிவாகவும் வலிமையாகவும் கேட்கப்படுகிறது. போலி ஞானம், உலகியலான ஞானம், தவறான கருத்துகள், புராணக் கதைபோன்ற உண்மையற்ற வார்த்தைகள், பீதிகள், புரளிகள் என்று ஏராளமான குரல்கள் போட்டியிடுகின்றன. நான்காவது, ஞானம் பொதுத் தளங்களில், மக்கள் விவாதங்களில் கேட்கப்படுகிறது.
மாறாகச் சொன்னால்,  ஞானம் இல்லாததற்கான எந்தவொரு காரணமும் அல்லது சாக்குபோக்கும் இல்லை.

எளிமையாக இருக்கத் தேர்ந்தெடுங்கள்:
நீதிமொழிகள் 1:22-23 இவ்வாறு கூறுகிறது,  ஞானம் சொல்கிறதாவது, “நீங்கள் முட்டாள்கள், நீங்கள் தொடர்ந்து எவ்வளவுகாலம் முட்டாள்தனமாக செயல்படுவீர்கள்? நீங்கள் எவ்வளவு காலம் ஞானத்தைக் கேலிச் செய்வீர்கள்? நீங்கள் தொடர்ந்து எவ்வளவு காலத்துக்கு அறிவை வெறுப்பீர்கள்? ஞானத்தை ஏற்க வேண்டும் என்ற அழைப்புக்கு பதிலாக, இவர்கள் தங்களுடைய யோசனைக்கும் ஆலோசனைக்கும் ஏற்ப ஞானத்தைத் தவிர்த்துவிடுகிறார்கள். சத்தியத்தை அறியாமை என்பது மன்னிக்கத்தக்கது அல்ல, ஏனெனில் தேவனுடைய வல்லமையும் தெய்வீகத்தன்மையும் படைப்புகளில் வெளிப்படையாகவே காணப்படுகிறது (ரோமர் 1:20) என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஞானத்தை நிராகரிப்பது என்பது தேவனையே நிராகரிப்பது. அதுபோலவே, ஞானத்தை மதிப்பது என்பது தேவனையே மதிப்பதாகும்.

வஞ்சனை, ஆசை மற்றும் அழிவு:
ஞானத்தை நிராகரிக்கிறவர்கள், வஞ்சகம் என்ற கசப்பான கனியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் (நீதிமொழிகள் 1:24–33). உலகியலான ஞானம், இறுதியில் மோசடியிலும், மரணத்திலும் முடிகிறது. ஆசை மற்றும் பேராசை, ஞானத்தைத் தவிர்க்கும்; பயனற்ற காரியங்கள் இவர்கள் மனதை ஆட்கொள்கின்றன. நித்திய நோக்கமின்றி, தாழ்ந்ததும், நிலைகெட்டதும், அர்த்தமற்றதும் ஆகிய இவ்வுலகச் சம்பத்தையே அவர்கள் தேடுகிறார்கள். ஞானத்தின் குரலுக்கு செவிமடுக்க மறுப்பதனால், அவர்களின் அலட்சியம் அவர்களை அழிக்கிறது. வருந்தவேண்டியது என்னவென்றால், அவ்வித ஞானம் பரலோகத்தில் இருந்து வருவதில்லை. சுயநல வேட்கைகளிலிருந்தும், பேய்த்தனத்திலிருந்தும் உருவாகும் இந்த உலகத்திலிருந்து அது வருகிறது (யாக்கோபு 3:15).

எனக்கு கர்த்தருக்குப் பயப்படும் பயமும் ஞானமும் இருக்கிறதா? 

Rev. Dr. J.N. Manokaran