உங்கள் இலக்கு என்ன

தேவன் ஆபிரகாமை அழைத்தபோது, அவர் செல்ல வேண்டிய இடம் எது என்பதை அறியாமலேயே கர்த்தரைப் பின்பற்ற வேண்டியிருந்தது. அவர் பயணத்தைத் தொடங்கியபோது லோத்தும் அவருடன் இணைந்தான். அப்போது அவரது உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் அனைவரும், “நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கலாம். ஆனால் அந்த இலக்கை ஆபிரகாம் அறிந்திருக்கவில்லை. இன்றைய காலத்தில் இதை, GPS, Google Maps அல்லது வரைபடம் எதுவுமின்றி ஒரு புதிய நகரத்தில் வாகனம் ஓட்டுவதற்கு ஒப்பிடலாம். இருந்தாலும், ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார். அந்தக் கீழ்ப்படிதல் விசுவாசத்தின் நீதியாக எண்ணப்பட்டது (எபிரெயர் 11:8). தேவனின்றி உலகத்தில் மேற்கொள்ளப்படும் ஆவிக்குரிய பயணம் இறுதியில் மரணத்தில் முடியும்.

கலக்கம் (Disturbed):
ஒருவர் அறிமுகமில்லாத புதிய இடத்திற்குச் செல்லும்போது, மனதில் கலக்கம் ஏற்படுவது இயல்பு. அங்கு நண்பர்களோ, உறவினர்களோ இல்லாததால் கவலை, அச்சம், பதட்டம் அவரைச் சூழ்ந்துகொள்ளலாம். ஆனால் ஆபிரகாம் தேவனையும், அவருடைய வாக்குத்தத்தங்களையும், இரக்கத்தையும் நம்பினார். தேவன் தம்மை வழிநடத்துவார் என்ற உறுதியான விசுவாசம் அவருக்கிருந்தது.

திசைதிருப்பப்படுதல் (Distracted):
சரியான பாதையிலிருந்து விலகிச் செல்லும் அபாயம் எப்போதும் உள்ளது. மனித ஞானத்திற்கு பல பாதைகள் நல்லதாகத் தோன்றலாம்; ஆனால் அவற்றின் முடிவு மரணமாக இருக்கலாம் (நீதிமொழிகள் 14:12).
ஏசாயா தீர்க்கதரிசி, மனிதர்கள் வழிதவறிச் செல்லும் ஆடுகளைப் போன்றவர்கள் என்று கூறுகிறார் (ஏசாயா 53:6). அழிவிற்குக் கொண்டு செல்லும் அகலமான பாதைகள் எப்போதும் இருக்கின்றன (மத்தேயு 7:13). ஆகையால், உலகத்தின் கவர்ச்சிகளால் திசைதிருப்பப்படாமல், ஆபிரகாம் தனது பார்வையை தேவன்மேல் நிலைநிறுத்த வேண்டியிருந்தது.

திசையறியாமை (Directionless):
ஆபிரகாம் எந்தத் திசையில் தனது பயணத்தைத் தொடங்க வேண்டும்?
அவர் சிறந்த சாலைகளையோ, மனிதர்களுக்குத் தெரிந்த வழிகளையோ தேர்ந்தெடுக்க முடியாது. தேவனுடைய வழிநடத்துதலையே அவர் சார்ந்திருந்தார். குழப்பம், திகைப்பு, அடுத்த அடியை எவ்வாறு எடுக்க வேண்டும் என்ற அறியாமை ஆகிய சூழ்நிலைகளில், தேவன் தம்மோடு பேசுவார்; சரியான பாதையைத் தெளிவாகக் காட்டுவார் என்பதை ஆபிரகாம் அறிந்திருந்தார் (ஏசாயா 30:21).

மனச்சோர்வு (Discouraged):
ஆபிரகாம் மனச்சோர்வடைந்திருக்கலாம். அழைப்பு மகத்தானது; வாக்குத்தத்தம் அற்புதமானது; ஆனால் இலக்கு தெளிவாகத் தெரியவில்லை. விசுவாசத்தின் பாதை சில நேரங்களில் தனிமையானதாகவும், மனச்சோர்வை உண்டாக்குவதாகவும் இருக்கலாம். ஆனால் தேவன் ஆபிரகாமுடன் இருந்ததுபோல, நம்முடனும் இருந்து நமது பயணத்தை வெற்றியடையச் செய்கிறார்.

உறுதியான நிலை (Determined):
ஆபிரகாம் தனது விசுவாசத்திலும், தீர்மானத்திலும், உடனடியான கீழ்ப்படிதலிலும் உறுதியாக இருந்தார். அவருடைய விசுவாசப் படிகள் அவரை “விசுவாசத்தின் தந்தை” என்ற பெருமைக்குரிய நிலைக்கு உயர்த்தின.

ஆபிரகாமைப் போல உறுதியான விசுவாசத்துடன் நான் கர்த்தரைப் பின்பற்றுகிறேனா?

Rev. Dr. J.N. Manokaran