ஒரு மனிதர் வழக்கம்போல தனது காரில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டார். ஆனால், பெட்ரோல் நிரப்பிய ஊழியர் மூடியை மீண்டும் போட மறந்து விட்டார். அவர் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, ஒரு சிறிய தீப்பொறி அந்த திறந்த இடம் வழியாக டாங்குக்குள் விழுந்தது. உடனே தீப்பிடித்து, வண்டி வெடித்துச் சிதறியது. அந்த மனிதர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். மறதி ஆபத்தானது; அதிலும் ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகுந்த ஆபத்தானது. வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள் தங்கள் மறதியின் விளைவுகளை அனுபவித்தார்கள் (சங்கீதம் 106:12-15).
மறக்கப்பட்ட வார்த்தைகள்:
முதலில் தேவனுடைய வார்த்தையையும், தேவனிடமிருந்து மோசேயின் வாயிலாக வந்த சட்டத்தையும் கேட்டபோது, அவர்கள் விசுவாசித்தார்கள். ஸ்தோத்திரத்தையும் பாடினார்கள். ஆனால் விரைவிலேயே, அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை மறந்து விட்டார்கள். வேதாகமம் மறக்கப்படும் இடத்தில், உலகம் தரும் போலியான பல்வேறு அறிவுகள் மனதை நிரப்பிவிடும். ஏனெனில், மனம் ஒருபோதும் வெறுமையாக இருக்காது.
மறக்கப்பட்ட செயல்கள்:
தேவனுடைய வார்த்தைகள் மறக்கப்பட்டால், தேவனுடைய கிரியைகளையும் மறந்து விடுவது இயல்பானதே. வேதாகமத்திலும், வரலாற்றிலும், சீஷர்களின் வாழ்க்கையிலும், தேவனுடைய கிரியைகளை அவரது வார்த்தை வெளிப்படுத்துகிறது. அந்த கிரியைகள் மறக்கப்பட்டால், எதிர்கால நம்பிக்கையும் கலைந்து விடுகிறது.
மறக்கப்பட்ட காத்திருப்பு:
வருத்தம் என்னவென்றால், இஸ்ரவேலர்கள் காத்திருந்து தேவனுடைய ஆலோசனையை கேட்கும் ஆற்றலை இழந்து விட்டார்கள். தேவனுடைய திட்டத்திற்கும் சித்தத்திற்கும் காத்திருக்க மறுத்தபோது, அவர்கள் தேவனைச் சோதித்தார்கள். அவருடைய வழிகாட்டுதலைக் கேட்டு, சித்தத்தை அறிந்து கொள்ளாமல், தாங்கள் விரும்பியவற்றைச் செய்வதில் அவசரப்பட்டார்கள். அதைப் போலவே, தேவனுடைய வார்த்தையை தினமும் தியானிக்காத சீஷர்கள், துஷ்டரின் ஆலோசனையில் நடந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். (சங்கீதம் 1:1-3)
தேவையில்லாத ஏக்கம்:
தெய்வீகத்தையும், தேவனுடைய விருப்பங்களையும் மறந்துவிட்டால், தேவையில்லாத ஆசைகள் உருவாகும். அவர்கள் மாம்சம் விரும்பினால், தங்களுடன் இருந்த விலங்கைக் கொன்றிருக்கலாம். ஆனால், ஒரு சீஷனின் நோக்கமற்ற வாழ்க்கை, வீண்போகும் நிலையிலும், உலகின் இன்பங்களையும் செல்வச்செழிப்பையும் விரும்பும் ஆசைகளிலும் முடிந்து விடுகிறது.
நாசம் விளைவிக்கும் நோய்:
இஸ்ரவேலர்கள் விரும்பியதை தேவன் கொடுத்தார்; ஆனால், அவர்களைத் தண்டிப்பதற்காக நாசம் விளைவிக்கும் நோயை அனுப்பினார், பலர் உயிரிழந்தார்கள். அவர்களின் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்து, நோய்களை குணமாக்குவேன் என்று வாக்குத்தத்தம் செய்த அதே தேவன், அவர்களை நோய் தாக்க அனுமதித்தார் (யாத்திராகமம் 23:25-28).
எனது ஆவிக்குரிய வாழ்க்கையில் மறதியால் நான் துன்பப்படுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran