“லாபத்தா லேடீஸ்” (Lapatha Ladies) என்ற ஒரு சுவாரஸ்யமான இந்தி திரைப்படம் உள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில் பெண்கள் பெரும்பாலான நேரங்களில் முக்காடு அணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். திருமண காலத்தில், சில புதுமணத் தம்பதிகள் தங்களின் இலக்குகளுக்குச் செல்ல ரயிலில் பயணம் செய்தனர். எல்லா மணமகள்களும் சிவப்பு நிறச் சால்வையால் முக்காடிட்டிருந்தனர். ரயில் மிகவும் நெரிசலாக இருந்தது. மணமகள்களும் மணமகன்களும் தூங்கிவிட்டனர். நள்ளிரவில் ஒரு மணமகன் விழித்தபோது, தாம் இறங்க வேண்டிய நிலையத்தை ரயில் எட்டியிருந்தது. இருட்டில், அவர் ஒரு மணமகளை எழுப்பி, ரயிலிலிருந்து இறங்கினார். ரயில் புறப்பட்டது. வீட்டை அடைந்தபின் முக்காட்டை அகற்றியபோது, அவர் அதிர்ச்சியடைந்தார்; அவள் தனது மனைவி அல்ல; வேறு ஒரு பெண் என்பதைக் கண்டுபிடித்தான்.
நோக்கம்:
பல கலாச்சாரங்களில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஆண்களின் முன்னிலையில் மட்டுமல்ல, சில சமயங்களில் வீடுகளிலும், பொது இடங்களிலும் கூட பெண்கள் முக்காடு அணிய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சுயகட்டுப்பாடு இல்லாத ஆண்கள் பெண்களை நம்பாததால், “கலாச்சாரம்” என்ற பெயரில் பெண்களை கட்டுப்படுத்துகிறார்கள். சில கலாச்சாரங்களில், திருமணத்தில் மணமகள் முக்காடு போட்டுக் கொண்டு இருப்பாள். மதகுரு அவர்கள் கணவன் மனைவி என்று அறிவித்த பின், கணவன் தான் அந்த முக்காட்டை அகற்றுவான்.
முக்காடும் வஞ்சனையும்:
யாக்கோபை ஏமாற்ற லாபான் முக்காடை பயன்படுத்தினான். ராகேலை மணப்பதற்காக யாக்கோபு ஏழு ஆண்டுகள் உழைத்தான். ஆனால் திருமண இரவில், ராகேலுக்கு பதிலாக அவளின் மூத்த சகோதரி லேயாளை லாபான் கொடுத்தான். பின்னர் யாக்கோபு ராகேலையும் மணந்தான் (ஆதியாகமம் 29:23–25).
மோசே மற்றும் முக்காடு:
தேவனுடன் சந்தித்து மலையிலிருந்து இறங்கியபோது, மோசேயின் முகம் பிரகாசித்தது. ஜனங்களிடம் பேசும்போது அவர் முக்காடு அணிய வேண்டியிருந்தது; ஆனால் தேவனுடைய சந்நிதியில் செல்லும்போது அந்த முக்காட்டை அகற்றினார் (யாத்திராகமம் 34:29–35).
தவறான புரிதலின் முக்காடு:
பவுல் எழுதுகிறார், சரீரப்பிரகாரமான முக்காட்டைப் போலவே, இஸ்ரவேல் மக்களின் இருதயங்களிலும் ஒரு முக்காடு இருக்கிறது, அதனால் நியாயப்பிரமாணம் வாசிக்கப்படும்போது அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை (2 கொரிந்தியர் 3:15-16).
கிழிக்கப்பட்ட திரை::
தேவாலயத்தில் பிரதான ஆசாரியனைத் தவிர வேறு யாரும் உள்ளே செல்ல முடியாதபடி தடுத்திருந்த திரை, இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது மேலிருந்து கீழ்வரை கிழிக்கப்பட்டது, இது கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய வழியைத் திறந்தது (மத்தேயு 27:51).
எனக்குள்ளும் தவறான புரிதல் அல்லது ஆவிக்குரிய குருட்டுத்தனம் என்ற முக்காடு அல்லது திரை இருக்கிறதா? ஆராய்வோம்.
Rev. Dr. J.N. Manokaran