வேரோடு பிடுங்கப்படும்

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட புதிய விசுவாசி ஒருவர், தேவனுடைய மக்களுக்கு எதிராக நடைபெறும் கடுமையான துன்புறுத்தல்களைக் கண்டு மனக்கலக்கமடைந்தார். அவர் ஒரு மூத்த கிறிஸ்தவத் தலைவரைச் சந்தித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.
“அவர்கள் நமக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். அப்பாவி மக்களின் மனங்களில் தீவிரவாதச் சிந்தனைகளைத் தூண்டுகிறார்கள்; வன்முறையைத் தூண்டிவிடுகிறார்கள்; இளைஞர்களுக்கு உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் புகட்டுகிறார்கள். நம்மைத் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புகிறார்கள். நம்மைத் துன்புறுத்துவதற்காகப் புதிய சட்டங்களையும் கொண்டுவருகிறார்கள்” என்று அவர் வேதனையுடன் கூறினார். அவர் கூறிய அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட அந்த மூத்த தலைவர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி அமைதியாகப் பதிலளித்தார்; “என் பரமபிதா நடாத செடியெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள்; அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே.” (மத்தேயு 15:13–14).

வேரோடு பிடுங்கப்படும் (Uprooted): 
பல சித்தாந்தங்கள், இயக்கங்கள், பாரம்பரியங்கள், மதங்கள், போலி மதப்பிரிவுகள், கலாச்சார நடைமுறைகள், சமூகக் கோட்பாடுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் ஆகியவை ஆழமான வேர்களையும், அதிகாரத்தையும், வளங்களையும் கொண்டிருக்கலாம். இருப்பினும், தேவனால் நடப்படாதவை அனைத்தும் ஒருநாள் வேரோடு பிடுங்கப்பட்டு அழிந்துபோகும். களைகள் சேகரிக்கப்பட்டு அக்கினியில் எரிக்கப்படுவதுபோல அவற்றின் முடிவும் இருக்கும் (மத்தேயு 13:40). எனவே, தங்களுக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு அரசாங்கத்திற்கோ, அரசியல் கட்சிக்கோ அல்லது சமூக இயக்கத்திற்கோ கிறிஸ்தவர்கள் அஞ்சி விசுவாசத்தில் பின்வாங்கக்கூடாது.

தியானித்தல் (Meditate): 
ஆட்சியாளர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் ஒன்றுகூடி தனக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டும்போதுகூட, அவற்றைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பதையே தான் தெரிந்துகொள்வதாக சங்கீதக்காரன் கூறுகிறார் (சங்கீதம் 119:23). சதி, சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம் மற்றும் வன்முறை ஆகியவை சாத்தானும் அவனுடைய சேனைகளும் பயன்படுத்தும் ஆயுதங்களாகும். ஆனால், ஒரு கிறிஸ்தவனின் மிக முக்கியமான ஆவிக்குரிய ஆயுதம் தேவனுடைய வார்த்தையாகும். சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

தேவன் நகைக்கிறார் (God Laughs): 
ஜாதிகள் கிறிஸ்துவுக்கு விரோதமாகக் கொந்தளிக்கின்றன. மக்கள் அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்; கூட்டணிகளை அமைக்கிறார்கள்; ஆலோசனை செய்கிறார்கள். சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுகிறார்கள். ஆனால், தேவன் அவர்களைப் பார்த்து நகைத்து, அவர்களுடைய வீணான முயற்சிகளைப் பரிகாசம் செய்கிறார் (சங்கீதம் 2:1–5). புல்லைப்போல வாடி அழிந்துபோகும் ஒழுக்கநெறியற்ற மனிதர்கள் தங்களைப் பெரியவர்களாக எண்ணி, அகந்தையுடன் தேவனை எதிர்த்து, அவருடைய மக்களைத் துன்புறுத்துகிறார்கள். ஆனால், தேவனுக்கு எதிரான அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் வீணானவையே. 

தேவனுக்கு விரோதமாகப் போராடுதல் (Fighting Against God): 
கர்த்தராகிய இயேசுவின் சீஷர்களைத் துன்புறுத்திக்கொண்டிருந்த ஆலோசனை சங்கத்தினரிடம் கமாலியேல் ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கினார்.
“இந்த ஆலோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்தால் அழிந்துபோம். தேவனால் உண்டாயிருந்ததேயானால் அதை அழிக்க உங்களால் கூடாது; நீங்கள் தேவனுக்கு விரோதமாகப் போராடுகிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்” (அப்போஸ்தலர் 5:38–39). கமாலியேல் வழங்கிய இந்த ஆலோசனை உண்மையானது. திருச்சபையைத் துன்புறுத்தும் மத மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட எல்லாத் தலைமுறையினருக்கும் இது பொருந்தும். தேவனால் உருவாக்கப்பட்ட திருச்சபையை மனிதர்களால் அழிக்க முடியாது. தேவனுடைய பணியை எதிர்ப்பது என்பது தேவனுக்கே விரோதமாகப் போராடுவதாகும். 

துன்புறுத்தல்களைக் கண்டு நான் பயப்படுகிறேனா? அல்லது அவற்றை தேவனுடைய கண்ணோட்டத்தில் பார்க்கிறேனா?  
 

Rev. Dr. J.N. Manokaran