திருட்டு மற்றும் கொலை

ஐந்து பேர் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் மின் கருவிகளைத் திருடி, பாகங்களையெல்லாம் கழற்றி, விற்று வந்தனர். இந்த தீய தொழிலில் அவர்கள் நல்ல பணம் சம்பாதித்தனர். ஒரு நாள் அவர்கள் திருட முயன்றபோது, ​​அவர்களில் ஒருவன் மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருந்தான். மற்ற நால்வரும் மருத்துவ உதவியை வழங்கவோ அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ முன்வரவில்லை. ஏனெனில் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் மற்ற நால்வரும்  பிடிபட்டு தண்டிக்கப்படுவோம் என்று பயந்தனர். அவர்கள் அந்த ஆபத்தான நேரத்திலும் உடன் கூட்டாளிக்கு எதிராக ஒரு சதியை செய்தனர். அவனது கால்களையும் கைகளையும் கட்டி, அவனை தூக்கிச் சென்று ஒரு ஆற்றில் வீசினர், அந்த நபர் நீரில் மூழ்கி இறந்தான் (NDTV நவம்பர் 3, 2024) இறந்தவனின் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தபோது இந்தக் குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.

பத்து கட்டளைகள்:
தேவன் மனிதகுலம் முழுவதற்கும் பத்து கட்டளைகளை வழங்கினார். அவை தேவனின் தரநிலைகள் மற்றும்  எதிர்பார்ப்புகள்.  துரதிர்ஷ்டவசமாக, இஸ்ரவேல் தேசத்தினர் இந்தக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவில்லை, உலகின் பிற நாடுகளுக்கும் கற்பிக்கவில்லை. எந்தவொரு நபரோ, குடும்பமோ, சமூகமோ, ​​தேசமோ தேவனின் சட்டங்களை அறியாதபோது, ​​அவர்கள் அராஜகத்திலும் இருளிலும் மூழ்கிவிடுவார்கள். திருடுவதையும் கொலை செய்வதையும் தடைசெய்யும் கட்டளையை அந்தக் கும்பல் மீறியது (யாத்திராகமம் 20:13; 15). பொது இடங்கள், ஊடகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திருச்சபைகளில் இந்தக் கட்டளைகள் மீண்டும் மீண்டும் கற்பிக்கப்படாவிட்டால், இந்த உலகில் பாவங்கள் பெருகும்.

தப்பித்தல்:
துரதிர்ஷ்டவசமாக, திருடுவதற்கான திட்டமிடல் தவறாகிவிட்டது. அவர்களில் ஒருவன் மீது மின்சாரம் பாய்ந்தது, ஆனாலும் அவன் உயிருடன் தான் இருந்தான், உடனே இறக்கவில்லை. மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தப்பிப்பது அவர்களின் நண்பனும் மற்றும் கூட்டாளியுமானவனின் உயிரை விட முக்கியமானது. ஏனெனில் அவர்கள் தப்பித்தாலும், அந்த நபரை உயிருடன் விட்டு வைத்தல் ஆபத்தானது, ஏனெனில் அவன் கூட்டாளிகள் அனைவரின் பெயரையும் சொல்லி விடுவானே.‌ அது மாத்திரமல்ல அவர்களின் அனைத்து குற்றங்களையும் வேறு ஒப்புக்கொள்வான். எனவே, காயமடைந்த நபரை அவர்கள் சாதுர்யமாக கையாள வேண்டியிருந்தது.

கவலை:
அவர்கள் நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் இருந்தபோதிலும், அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை.  அவர்கள் ஒருவரையொருவர் நம்பவில்லை. அவர்களின் ஒற்றுமை ஒரு தீய விஷயத்திற்காக மட்டுமே இருந்தது, கொள்ளையடிக்கும் வேலையைச் செய்வதற்காக மட்டுமே இணைந்திருந்தனர். அவர்கள் பொதுச் சொத்தைத் திருடியது போல, அவர்கள் மற்றொருவரின் உயிரையும் திருடினர்.

மனிதாபிமான உதவி:
நல்ல சமாரியன் இறக்கும் தருவாயில் இருந்த மனிதனுக்கு உதவினார்; ஆனால் இந்தக் கும்பலோ இறக்கும் தருவாயில் இருந்த மனிதனைக் கொன்றனர்.

நான் பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களுக்கு உதவி செய்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran