சில நேரங்களில் தேவன் செயலற்றவர் போலவும், தூரத்தில் மறைந்திருப்பவர் போலவும் தோன்றுகிறார். அந்த நேரங்களில் துன்மார்க்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் பலவீனர்களுக்கு அல்லது உதவியற்றவர்களுக்கு விரோதமாக நடந்துக் கொள்கிறார்கள். ஆனால் தேவன் அவர்களை நிச்சயமாக நியாயமான முறையில் நியாயந்தீர்ப்பார் (சங்கீதம் 10).
தேவன் இல்லை:
துன்மார்க்கரின் எண்ணங்களில் தேவனுக்கு இடமில்லை. அவர்களின் சிந்தனை முறைகளில், முடிவெடுத்தலில், உறவுகளில், இலக்குகளிலும் என தேவன் இல்லை. தம் அகந்தையால், தேவனைப் பற்றிய புரிதலில் தவறுகிறார்கள். அவர்களின் முகத்தில் அந்த அகந்தை தெளிவாக தெரிகிறது. முதலில், துன்மார்க்கன் தேவனைத் தங்கள் வாழ்க்கையிலிருந்து தள்ளி வைக்கிறார்கள். பாவிகள் என்பதால், தேவ சந்நிதியில் நிற்க முடியாமல் அவரை விட்டு தப்பிக்கிறார்கள்.
இரண்டாவதாக, தேவன் பார்க்கமாட்டார் என்று நினைக்கிறார்கள். கண்களை உருவாக்கிய தேவன் காணமாட்டார் என்பது எவ்வளவு பெரிய மடத்தனம்.
மூன்றாவதாக, தேவன் மறந்து விடுவார் என்றும், தங்கள் செயலை நினைவில் வைக்கமாட்டார் என்றும் நம்புகிறார்கள். நான்காவது, தேவன் பார்க்கவும், நினைவுகூரவும் இயலாதவர், நியாயம் தீர்ப்பதும் முடியாது என்று கருதுகிறார்கள். ஐந்தாவது, அவர்களது வார்த்தைகள் சதி, பொய், வஞ்சகம் மற்றும் சாபங்கள் நிறைந்தவை. ஆறாவது, பலவீனர்களை வேட்டையாடுகிறார்கள்; அவர்களை வலை விரித்துப் பிடிக்க சூட்சுமமாகக் கண்ணியோடு திட்டமிடுகிறார்கள். ஏழாவது, பேராசை, அவர்களை மற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் கூட அதிக லாபம் ஈட்டத் தூண்டுகிறது. எட்டாவது, பலவீனர்களை வெறித்தனமாக துரத்துகிறார்கள். ஒன்பதாவது, குற்றமற்றவர்களை அதாவது அப்பாவிகளைக் கொன்றுவிடுகிறார்கள். பத்தாவது, அவர்கள் "நான் அசைக்கப்படமாட்டேன், அகற்றப்படமாட்டேன்; என் செழிப்பு தொடரும்" என்று பெருமையாகச் சொல்கிறார்கள்.
உதவியற்றவர்கள்:
அத்தகைய ஒடுக்குமுறையின் சூழலில், உதவியற்றவர்களின் எண்ணங்கள் என்ன? வழிகள் என்ன? அவர்கள் இரண்டு முக்கியமான காரியங்களைச் செய்கிறார்கள். முதலில், தேவனை அதிகாரமிக்க அரசராக (தேவனாக) உணர்கிறார்கள். தாங்கள் அவருடைய நீதி நிறைந்த கரங்களுக்குள் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். இரண்டாவதாக, அவர்கள் ஜெபிக்கிறார்கள். அந்த ஜெபத்தின் உள்ளடக்கம் கடுமையானது; “அவர்களுடைய கரங்களை முறித்து விடும்!” என்றும். துன்மார்க்கனின் தீமைகள் அனைத்தையும் தேவன் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எந்தச் செயலும் தேவனின் பார்வையைத் தவிர்க்கக் கூடாது. மேலும், தேவன் ஒரு முன்மாதிரியான தண்டனையை அளிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் மற்றவர்கள் பயந்து, இனி துரோகம் செய்யத் துணிந்து விடக்கூடாதபடி தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் எனவும் ஜெபிக்கிறார்கள்.
தேவன்:
சங்கீதகாரன் தேவனை ஜாதிகளின் ராஜாவாகவும், எல்லா மக்களையும் ஆளும் அதிபதியாகவும் விளக்குகிறார். தேவன் துன்மார்க்கனை நியாயந்தீர்க்கும்போது, ஜனங்கள் அழிந்து போவார்கள். திக்கற்றவர்களின் ஜெபம் வீணாகாது; தேவன் அவர்களது அழுகையைக் கேட்கிறார். அவர்களது விருப்பங்களை நிறைவேற்றுகிறார். நீதியுள்ள தேவன் நியாயத்தை நிலைநிறுத்துவார்.
சுற்றி அநீதியைக் காணும்போது, நான் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து அவருடைய நீதிக்காகக் காத்திருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran