அனதோத் கிராமம்

இஸ்ரவேலில் எருசலேமுக்கு வடகிழக்கே சுமார் மூன்று மைல் தொலைவில் அமைந்திருந்த அனாதோத் கிராமம், தீர்க்கதரிசி எரேமியாவின் பிறப்பிடமாகும் (எரேமியா 1:1). இது லேவியருக்குக் கொடுக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக இருந்தது (யோசுவா 21:18). ஆனால் அந்தக் கிராம மக்கள் எரேமியாவைக் கொலை செய்ய மிரட்டினர்; அதனால் அந்த ஊருக்கு தண்டனை வரும் என்று தேவன் அறிவித்தார்

யோசியாவின் சீர்திருத்தம்:
யூதாவின் அரசனாகிய யோசியாவின் நாட்களில் எரேமியா ஊழியம் செய்தார். அக்காலத்தில் தேசத்தில் ஆவிக்குரிய சீர்திருத்தம் நடைபெற்றது. எருசலேமிலுள்ள தேவாலய பலிபீடத்திற்கு வெளியே, மேடைகளில் (High Places) நடத்தப்பட்ட அனுமதியற்ற பலிகள் நிறுத்தப்பட்டன. அவ்வாறான மேடைகளில் ஒன்று எரேமியா பிறந்த அனாதோத் கிராமத்திலும் இருந்தது. அந்த வழிபாட்டு முறைகளை எதிர்த்து எரேமியா செயல்பட்டதால், அவரது சொந்த ஊர் மக்கள் அவர்மீது கோபமடைந்தனர்.

சத்தியத்தை அறிவித்தல்:
எரேமியா தன் உறவினர்களின் விருப்பத்தைப் பின்பற்றாமல், தேவனுடைய சித்தத்தையே பின்பற்றினார். அனாதோத்தில் வாழ்ந்த லேவியர்கள், தேவன் ஏற்றுக்கொள்ளும் ஆராதனையை விட, தங்களுக்குக் கிடைக்கும் வருமானத்திலேயே அதிக அக்கறை கொண்டிருந்தனர். பலிகளை நடத்துவதன் மூலம் கிடைக்கும் தனிப்பட்ட லாபத்திற்காக, உண்மையைத் தேடுவோரையும் பக்தியுடன் பலி செலுத்துவோரையும் தவறான பாதையில் வழிநடத்தினர். இதனை எரேமியா தீர்க்கதரிசியாகக் கண்டித்து பேசினார். கர்த்தராகிய இயேசு கூறியதுபோல், ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் மதிப்பும் மரியாதையும் பெறுவது அரிது (மாற்கு 6:4).

அச்சுறுத்தல்:
எரேமியாவின் இனத்தாரும், உறவினர்களும், அண்டை வீட்டாருமான கிராம மக்கள் அவரைக் கொல்ல அச்சுறுத்தினர். அவர்கள் எரேமியாவிடம், "கர்த்தருடைய நாமத்தில் தீர்க்கதரிசனம் சொல்லாதே; இல்லையெனில் எங்கள் கையால் சாவாய்" என்று கூறினர். ஒழுங்குமுறைகளையும், பலி செலுத்துவதற்கான விதிமுறைகளையும், எரேமியா அறிவித்த செய்தியையும் அக்கிராம மக்கள் வெறுத்தனர்.

தேவனின் தண்டனை:
"என் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களைத் தொடாதிருங்கள்; என் தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாதிருங்கள்." (சங்கீதம் 105:15) தங்களை எச்சரித்த தேவனின் இந்தக் கட்டளையை அக்கிராம மக்கள் அறிந்திருந்தனர். ஆயினும், அவர்கள் எரேமியாவை அச்சுறுத்தினர். தேவன் ஏளனம் செய்யப்படமாட்டார்;  கிராம மக்கள் எரேமியாவுக்கு எதிராக என்ன திட்டமிட்டார்களோ, அதே தண்டனை அவர்கள் மீதே வந்து சேரும். அந்தத் தண்டனை என்னவென்றால், கிராமத்து வாலிபர்கள் பாபிலோனியர்களின் வாளுக்கு இரையாவார்கள்; படையெடுப்பால் ஏற்படும் பஞ்சத்தினால் அவர்களின் குமாரர்களும் குமாரத்திகளும் மடிந்து போவார்கள்.

துயரம்:
தன் சொந்த ஊருக்கும் மக்களுக்கும் வரப்போகும் தண்டனையை நினைத்து எரேமியா மிகுந்த வேதனை அடைந்திருப்பார். ஒருபுறம் தேவனுடைய பாதுகாப்பிற்காக நன்றியுணர்வுடன் இருந்தாலும், மறுபுறம் தன் ஊர் மக்களுக்காக மனம் உடைந்து ஜெபித்திருப்பார்.

என்னைத் திருத்தி, சத்தியத்தை அறிவிக்கும் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு எதிராக நான் சுயநலத்தினாலும் அகங்காரத்தினாலும் கோபப்படுகிறேனா?

Rev. Dr. J.N. Manokaran