இலக்கற்ற வாழ்க்கையின் ஒடுக்குமுறை உணர்வு

ஜோர்டன் பி. பீட்டர்சன் தனது ‘12 Rules of Life’ என்ற நூலில் இவ்வாறு எழுதுகிறார்; "வால் பகுதியில் காலி டின் டப்பாக்கள் கட்டப்பட்டு ஓடும் நாயைப் போல, கடந்தகாலத்தின் பாரத்தை இழுத்துக்கொண்டு மனிதன் தனது ஆண்டுகளைச் செலவிடுகிறான்". கடந்தகாலத்தின் பாரம், ஒருவர் சரியான திசையில் முன்னேறுவதைத் தடுக்கிறது. அதன் விளைவாக, வாழ்க்கை இலக்கற்ற அலைச்சலாகவும் பயனற்ற பயணமாகவும் மாறிவிடுகிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க கடந்தகாலத்தின் சுமையும் பெருகுகிறது; முன்னேறும் வேகம் குறைகிறது; அடைய வேண்டிய இலக்கும் மங்கலாகத் தோன்றுகிறது. ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் தனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் இதற்கு ஒரு தீர்வை அளிக்கிறார் (பிலிப்பியர் 3:13–14).

ஒரே ஒரு குறிக்கோள்:
தான் செய்ய வேண்டியது "ஒன்றே ஒன்று" என்பதை பவுல் தெளிவாக அறிந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்வில் பல திசைகளில் சிதறிச் செயல்படுவது சிறந்ததல்ல. தன்னுடைய அழைப்பு, திறமைகள், ஆவிக்குரிய வரங்கள், கல்வி, திறன்கள், வாய்ப்புகள் ஆகிய அனைத்தையும் ஒரே நோக்கத்திற்காக அவர் பயன்படுத்தினார். அதாவது, கிறிஸ்துவின் நாமம் இன்னும் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதே அவரது இலக்காக இருந்தது. மற்றொருவர் போட்ட அஸ்திபாரத்தின் மேல் கட்ட விரும்பவில்லை (ரோமர் 15:20).

கடந்த காலத்தை மறத்தல்:
வாலில் கட்டப்பட்ட டின் டப்பாக்களுடன் ஓடும் நாய், அவற்றை நிறுத்தி அவிழ்த்துவிட வேண்டும். ஆனால் அது நிற்காமல் இன்னும் வேகமாக ஓட முயல்கிறது. அதுபோல, பலரால் கடந்தகாலத்தை மறந்து விட்டுவிட முடியாமல் போகிறது. அது வெற்றிகள், சாதனைகள், புகழ்கள் ஆகியவையாக இருந்தாலும் அவை கடந்தவைகளாகவே இருக்க வேண்டும். அதேபோல் தோல்விகள், மனக்காயங்கள், துன்புறுத்தல்கள், வேதனைகள், நோய்கள், இழப்புகள், துக்கங்கள் போன்றவையும் ஒருவரை சிறைப்படுத்தக் கூடாது. யோசேப்பு சிறையிலிருந்து அழைக்கப்பட்டபோது, அவர் உடனே வெளியே வந்தார் (ஆதியாகமம் 41:14).

கர்த்தர் மீது கவனம் செலுத்துதல்:
பவுலின் கண்ணோட்டம் பரலோகத்தில் வீற்றிருக்கும் கர்த்தரின் மேல் நிலைத்திருந்தது. ஆகையால், தன் உதவியும் ஆதரவும் அவரிடமிருந்தே வருகிறது என்று அறிந்து மேல்நோக்கிப் பார்த்தார் (சங்கீதம் 121:1). அவர் உதவியை மட்டுமல்ல, தேவன் அளிக்கும் மேலான அழைப்பிற்குக் கீழ்ப்படிந்தவருக்காக வைத்திருக்கும் வெகுமதியையும் எதிர்நோக்கினார். ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கைக்கும் தேவன் ஒரு மகத்தான நோக்கத்தை வைத்திருக்கிறார். யாரும் பயனற்றவர்கள் அல்ல; ஒவ்வொருவரும் தேவனுடைய ராஜ்யத்தில் மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்ய அழைக்கப்பட்டவர்களே
.
இலக்கை நோக்கி முன்னேறுங்கள்:
முயற்சி, ஒழுக்கம், தியாகம், வேதனை ஆகியவை இல்லாமல் எந்தச் சாதனையும் கிடைக்காது. பவுல் தன் சரீரத்தை அடக்கி, ஆவிக்குக் கீழ்ப்படியும்படி ஒழுக்கப்படுத்தினார் (1 கொரிந்தியர் 9:27). வேதனை இல்லாமல் வெற்றி இல்லை; சிலுவை இல்லாமல் மகிமையும் இல்லை.

நான் இலக்கற்ற வாழ்க்கையிலிருந்து, தேவன் அழைத்திருக்கும் பரலோக இலக்கை நோக்கி உறுதியுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறேனா? சிந்திப்போம்.‌
 

Rev. Dr. J.N. Manokaran