ஒரு இளம் கல்லூரி பட்டதாரி, பூமி பல மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று வாதிட்டார். இந்த உலகை யாரும் படைக்கவில்லை; அது தானாகவே உருவானது அல்லது பெருவெடிப்புடன் வந்தது என்றார். வேதாகமத்தைப் பார்க்கும் போது, தேவன் யோபிடம் கேட்டார்: “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி” (யோபு 38:4-7). இந்தக் கேள்வி யோபுக்கு மட்டும் அல்ல, ஒவ்வொரு மனிதருக்கும் உரியது. சிலர் பூமி இப்படித்தான் உருவானது எனக் கற்பனை செய்யக்கூடும்; சிலர் அறிவியல் ஆய்வெனப்படும் கருதுகோள்களை முன்வைக்கலாம். ஆனால், இந்த உலகம் எப்படி தோன்றியது என்பதைக் குறித்து யாருக்கும் முழுமையான அறிவு, எண்ணம், ஞானம் இல்லை. கிருபையுள்ள தேவன் தான் இந்த பூமியை எப்படி படைத்தார் என்பதை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்தினார் (ஆதியாகமம் 1). தேவன் வாக்கு குறித்து சங்கீதகரானவர்: “உமது வார்த்தையிலுள்ள அனைத்தும் செம்மையானவை” எனக் கூறுகிறார் (சங்கீதம் 119:127-128). வேதாகமத்தில் உள்ள சில பகுதிகள் மட்டுமல்ல, முழு வேதாகமும் சரியானது, பரிபூரணமானது, தவறற்றது மற்றும் குற்றமற்றது.
அறுதிஇறுதி ஆசிரியர்:
வேதாகமம் பிதாவின் ஏவுதல், அதன் அறுதிஇறுதி ஆசிரியர் பரிசுத்த ஆவியானவர் (1 தீமோத்தேயு 3:16-17).
வரலாறு:
வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் வரலாற்றுசார் உண்மைகளாகும். அவை தவறானவையோ அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவையோ அல்ல; முற்றிலும் சரியானவையாகும்.
கவிதை:
வேதாகமத்தில் உள்ள கவிதைகள் சரியானதும் உண்மையானதும் ஆகும். அந்தக் கவிஞர்களின் உணர்வுகள், சிந்தனைகள், அனுபவங்கள் அனைத்தும் அவர்களுக்கே உரிய உண்மையானவை. மேலும், அவை மனித அனுபவங்களை பிரதிபலிப்பதால், ஒவ்வொரு வாசகரும் தங்களுக்குள் அதை தொடர்புபடுத்திக் காணலாம்.
தீர்க்கதரிசனம்:
தம்முடைய தீர்க்கதரிசிகளின் மூலம் தேவன் எதிர்கால நிகழ்வுகளை வெளிப்படுத்தினார். அந்தத் தீர்க்கதரிசனங்கள் துல்லியமாகவும், குற்றமற்ற விதமாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் நிறைவேறாத தீர்க்கதரிசனங்களும் இருக்கின்றன; அவையும் தேவனுடைய காலத்தில் நிகழும். வேதாகம அறிஞர்களின் கணிப்புப்படி, சுமார் 3000 தீர்க்கதரிசனங்களில் 2500 தீர்க்கதரிசனங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டன; மீதமுள்ள 500 தீர்க்கதரிசனங்கள் இன்னும் நிறைவேற வேண்டியவையாக உள்ளன. இயேசுவின் பிறப்பு, ஊழியம், வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைப் பற்றிய 200 முதல் 300 வரை தீர்க்கதரிசனங்கள் ஏற்கனவே நிறைவேறியுள்ளன. இத்தனை தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் வேதாகமத்தில் உண்மை மற்றும் தவறற்றதாக இருப்பதற்கான உறுதியான சாட்சியாகும்.
போதனை:
வேதாகமம் அனைத்து மனிதர்களுக்கும் வழிகாட்டுதலும், கட்டளைகளும், விதிகளும், வாழ்க்கையின் நோக்கமும் அர்த்தமும் அளிக்கிறது. வேதாகமத்தின் வார்த்தைக்கேற்ப கீழ்ப்படியும் மனிதர் அமைதியும், செழிப்பும், நித்திய பலன்களையும் பெறுவார்கள்.
கடவுள் - அவரது பண்புகள் மற்றும் கிரியை:
தேவனுடைய பரிசுத்தம், சகலவல்லமை, எல்லா இடங்களிலும் இருக்கிற தன்மை, எல்லாவற்றையும் அறிந்திருக்கும் ஞானம், அன்பு, இரக்கம், கிருபை, நீதி, நியாயம், சத்தியம் போன்ற சுபாவங்கள் வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உலகத்தை படைத்த காரியம், வரலாற்றின் மீது ஆண்டவரின் இறையாண்மை ஆட்சி, மனிதர்களின் வாழ்க்கையில் தலையீடு, இரட்சிப்பு திட்டம், பரலோகம் ஆகிய அனைத்தும் வேதாகமத்தில் எளிமையாகவும் தெளிவாகவும் கற்பிக்கப்படுகின்றன.
பிழையற்ற குறைகளற்ற வேதாகமத்தை நான் முழுமையாக நம்புகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran