நற்செய்தி பலனளிக்கிறது

ஒரு கிறிஸ்தவ சமய அமைப்பு தூர நாட்டிற்கு சில மிஷனரிகளை அனுப்பியது. சுமார் பத்து ஆண்டுகள் அவர்கள் கடினமாக உழைத்தாலும், ஊழியத்தில் எந்தக் கனியும் காணப்படவில்லை. மனம் உடைந்த நிலையில், இன்னும் ஒரு ஆண்டுக்குள் அந்தப் பணியை நிறுத்த தீர்மானித்தார்கள். ஆனால் தேவன் உண்மையுள்ளவர் ஆயிற்றே. அந்த முடிவு செயல்படுத்துவதற்கு முன்பே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒரு பிரபலமான கொள்ளைக்காரன்  மிஷன் வளாகத்திற்குள் வந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டான். அவன் ஒரு கொள்ளைக் குழுவின் தலைவராக இருந்ததால், தன் முழு குழுவினரையும் கிறிஸ்துவைப் பின்பற்றச் சமாதானப்படுத்தினான். அந்தத் தூர நாட்டின் முதல் சபை ஒரு கொள்ளைக் குழுவாகத் துவங்கியது. அவர்கள் உண்மையுள்ள விசுவாசிகளாக இருந்து சபையின் தூண்களாக ஆனார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அந்த அமைப்பில் முக்கியத் தலைவர்களாக வளர்ந்து சபையை மேலும் விரிவாக்கினர் (கொலோசெயர் 1:6).

மனச்சோர்வு:
மிஷனரிகள் உண்மையுடன் உழைத்தபோதும், புதிய சீஷர்கள் உருவாக்கியதற்கான வெளிப்படையான அடையாளம் காணவில்லை. அந்த அமைப்பின் தலைமையும் அந்த ஊழியத்தை நிறுத்தவேண்டும் என்று முடிவு செய்தது. ஆனால் தேவனுக்கு தனியான திட்டமும் சரியான காலமும் உண்டு. ஊழியம் மூடப்படுவதற்கு முன் சுவிசேஷத்தின் கனிகள் வெளிப்பட்டதற்காக தேவனை ஸ்தோத்திரிப்போம்.

நற்செய்தி: 
சுவிசேஷம் என்பது நற்செய்தி, உண்மையில், மனிதகுலத்திற்கான ஒரே நித்திய நற்செய்தி.  மனமுடைந்த மற்றும் கடின இதயம் கொண்ட ஏராளமான மக்களுக்கு நற்செய்தி தேவை. கொள்ளையர்கள் அல்லது சமூகத்தில் பொல்லாதவர்கள் அல்லது இழிவானவர்கள் என்று கருதப்படும் பிற மக்களுக்கும் நற்செய்தி தேவை. 

மாற்றும் வல்லமை:
மாற்றும் சக்தி சுவிசேஷத்திற்கே உண்டு. மனித அளவுகோலின்படி எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், ஒவ்வொருவரும் மாற்றப்படத் தகுதியுடையவர்கள். அவர்கள் எவ்வளவு நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும், அதற்கும் அதிகமாக தேவனுடைய கிருபை வழங்கப்படும். சமூகத்தால் கண்டிக்கப்பட்டும், குடும்பத்தால் கைவிடப்பட்டும், அரசால் துரத்தப்பட்டும் இருந்த கொள்ளைக் குழு பரிசுத்த ஜனங்களின் சபையாக மாறியது. உலக ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் ஞானமில்லாதவர்களையும், இகழப்பட்டவர்களையும், தாழ்ந்தவர்களையும் தேர்ந்தெடுத்து மாற்றுகிறார் (1 கொரிந்தியர் 1:26–28).

நீதிமான்கள்: 
கொள்ளைக்காரர்கள் நன்மை செய்பவர்களாக மாறி, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் நலனிற்கும் பங்காற்றினர். ஆம், சுயநலமுள்ள மனிதர்கள் சிலுவையின் தியாகச் சேவகர்களாக அல்லது ஊழியர்களாக ஆனார்கள்.

சுவிசேஷத்தின் மாற்றும் வல்லமையை நான் உணருகிறேனா? அறிகிறேனா? அனுபவிக்கிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran