தேவனுடைய முழு போர்க்கவசம்

கர்த்தருடைய சீஷர்கள் முழு போர்க்கவசம் அணிந்த ரோமப் படைவீரனோடு ஒப்பிடப்படுகிறார்கள். பவுல், விசுவாசிகள் தீவிரமான ஜெபத்தினால் நிரம்பிய ஆவிக்குரிய போர்க்கவசத்தை அணிய வேண்டும் என்று எழுதுகிறார் (எபேசியர் 6:13-18). போர்க்கவசத்தின் ஒரு பகுதியை மட்டும் அதிகமாக வலியுறுத்தினால், அது சமநிலையற்ற மற்றும் பயனற்ற கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

தலைக்கவசம்:
இரட்சிப்பு அல்லது மறுபிறப்பு தலைக்கவசமாக விளக்கப்படுகிறது. வருத்தத்திற்குரியது என்னவெனில், சில சபைகள் மனந்திரும்புதலும் இரட்சிப்பும் பற்றியே போதிக்கின்றன. மக்கள் இரட்சிப்பின் ஆரம்ப அனுபவத்தைத் தாண்டி ஆவிக்குரிய முதிர்ச்சிக்கும் கனியுள்ள வாழ்க்கைக்கும் வளர்வதில்லை.

சத்தியம்:
சில கிறிஸ்தவர்கள், நற்செய்தியாகிய 'சத்தியத்தை' பாதுகாப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், சில சமயங்களில் அதீத பற்றுடனும் (obsession) இருக்கிறார்கள். எனவே, அவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை தர்க்கரீதியாக நிறுவும் கலையான 'Apologetics' (விசுவாசப் பாதுகாப்பு வாதம்) மீது மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, 'பூமிக்கு உப்பாகவும் உலகத்திற்கு ஒளியாகவும்' விளங்கும் நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையை புறக்கணிக்கிறார்கள் 

காலணிகள்:
சில சபைகள் தங்களை 'தேடுவோருக்கு ஏற்ற சபைகளாக' (seeker-sensitive churches) அடையாளப்படுத்திக் கொள்கின்றன. அவை ஏராளமான கிறிஸ்தவரல்லாத மக்களை ஈர்க்கின்றன. அம்மக்கள் சபையின் முன்வாசல் வழியாக உள்ளே வருகிறார்கள்; ஆனால் பின்வாசல் வழியாக வெளியேறிவிடுகிறார்கள்.

கேடயம்:
ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது. இரட்சிப்பை அருளும் விசுவாசம் இல்லாமல், ஒரு நபரால் தேவனுடைய பிள்ளையாக மாற முடியாது. இருப்பினும், ஏரோது ராஜாவைப் போலவே, 'கேட்டவுடனே அற்புதம் நிகழ வேண்டும்' என்று விரும்பும் சில சபைப் பிரிவுகளும் உள்ளன (லூக்கா 23:8). அவர்களுடைய முழு ஆவிக்குரிய வாழ்க்கையும் அற்புதங்கள், அடையாளங்கள் மற்றும் அதிசயங்களை மட்டுமே சார்ந்திருக்கிறது.

மார்புக்கவசம்:
நீதியாகிய மார்புக்கவசம் என்பது நவீன காலத்து 'குண்டு துளைக்காத கவசத்திற்கு' (bulletproof vest) ஒப்பானது. பரிசேயர்களைப் போலவே, சில சபைப் பிரிவுகளும் சட்டவாதப் போக்கைக் (legalistic) கடைப்பிடிப்பவையாக மாறிவிடுகின்றன. "மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் தசமபாகம் கொடுத்து, நியாயப்பிரமாணத்தில் முக்கியமானவைகளாகிய நியாயம், இரக்கம், விசுவாசம் ஆகியவைகளைப் புறக்கணித்துவிட்டீர்கள். மற்றவைகளைப் புறக்கணிக்காமலே இவைகளையும் செய்திருக்கவேண்டியதே"  (மத்தேயு 23:23).

ஆவியின் பட்டயம்:
சிலர் வேதாகமத்தைப் பற்றி மிகுந்த அறிவைக் கொண்டிருக்கிறார்கள்; ஏன், ஒவ்வொரு விஷயத்திற்கும் வேதவசனங்களையே மேற்கோள் காட்டுகிறார்கள். ஆனால், வேதாகமம் போதிக்கும் விதத்தில் அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருப்பதில்லை. அவர்கள் 'வார்த்தையில்' வல்லமை பெற்றிருந்தாலும், 'செயலில்' தவறானவர்களாக இருக்கிறார்கள். சொல்லப்போனால், சிலர் வேதாகமத்தையே ஒரு தெய்வமாக வணங்குகிறார்களே தவிர, அதை வாசித்து அறிந்துகொள்ளவோ, தியானித்து நடைமுறைப்படுத்தவோ முற்படுவதில்லை.

ஜெபம்:
தீவிரமான ஜெபம் முழு போர்க்கவசத்தையும் நிரப்பியிருக்க வேண்டும். எல்லா ஆயுதங்களையும் சரியான முறையில், ஒன்றோடொன்று இணைந்தபடி, இரட்சிப்பின் தலைவராகிய கிறிஸ்துவின் வழிநடத்துதலின் கீழ் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.

நான் தேவனுடைய முழு போர்க்கவசத்தையும் அணிந்திருக்கிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran