மனிதர்களுக்கெல்லாம் வளர்ச்சி அத்தியாவசியமானது. ஆனால் பலர் முழுமையான, சீரான வளர்ச்சியின்றி இருக்கிறார்கள். அதன் விளைவாக அவர்கள் முதிர்ச்சியற்றவர்களாகவும், மனஅழுத்தம் மற்றும் உள்ளார்ந்த குழப்பங்களை அனுபவிப்பவர்களாகவும் காணப்படுகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்து, ஒரு முழுமையான தன்மையுடன் வளர்ந்தார். அவர் ஞானத்திலும், உயரத்திலும், தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாகக் கிருபையிலும் வளர்ந்தார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் (லூக்கா 2:52). இயேசு இந்த பூமியில் மனிதராக வாழ்ந்தபோது வளர்ந்ததுபோல, அவருடைய சீஷர்களும் நான்கு முக்கியமான பரிமாணங்களில் வளர வேண்டும்.
1. ஆவிக்குரிய வளர்ச்சி (Spiritual):
புதிய ஏற்பாட்டில் “கிருபை” என மொழிபெயர்க்கப்படும் சொல்லே favour ஆகும். தேவனுடைய குமாரனாகிய இயேசுவுக்கு இரட்சிப்புக்கான கிருபை தேவையில்லை. ஆயினும், பரலோகப்பிதா அவரில் மகிழ்ந்து, திருப்தியடைந்து, அவரை நேசித்தார் (மத்தேயு 3:17). கர்த்தரை ஏற்றுக்கொள்வோர் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள் (யோவான் 1:12). தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், பிதாவை மகிழ்விப்பவர்களாக வாழ வேண்டும். ஞானமுள்ள தேவனுடைய பிள்ளை பரலோகப்பிதாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறான் (நீதிமொழிகள் 15:20). ஒரு சீஷன் ஒரு பாவியை கிறிஸ்துவிடம் கொண்டு வரும்போது, பரலோகத்தில் தேவதூதர்களின் முன்பாக மகிழ்ச்சி உண்டாகிறது (லூக்கா 15:7).
2. மனநிலை / அறிவு வளர்ச்சி (Mental):
கர்த்தர் ஞானத்தில் வளர்ந்தார்; அது தொடர்ந்து நடைபெறும் ஒரு செயல்முறை. அவருடைய சிறுவயதிலேயே இந்த வளர்ச்சி ஆரம்பித்ததாக வேதாகமம் குறிப்பிடுகிறது (லூக்கா 2:40).
ஒவ்வொரு சீஷனும் மனவலிமை, புரிதல், சிந்தனை மற்றும் மனப்பாங்கில் வளர வேண்டும். அவர்களின் மனம் தேவனுடைய வார்த்தையால் நிரம்பி, புதுப்பிக்கப்பட்டு, வேதாகம அடிப்படையிலான உலகக் கண்ணோட்டம் கொண்டதாக இருக்க வேண்டும்.
3. சரீர வளர்ச்சி (Physical):
கர்த்தர் மற்ற சாதாரண மனிதர்களைப் போலவே சரீர ரீதியாக வளர்ந்தார். அந்த வயதுக்கு இயல்பான முறையில் அவர் பரிபூரணமாக வளர்ந்தார். சரீர வளர்ச்சியும் ஆரோக்கியமும் வயதுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். சரீரம் பரிசுத்த ஆவியானவரின் ஆலயம்; எனவே அது சுத்தமாகவும், தூய்மையாகவும், பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும் (1 கொரிந்தியர் 6:19). பவுலைப் போலவே, சீஷர்களும் தங்கள் சரீரத்தை ஒழுங்குபடுத்தி, தேவனால் நீதியின் கருவிகளாகப் பயன்படுத்தப்பட வேண்டும் (ரோமர் 6:13).
4. உறவு வளர்ச்சி (Relational):
அவர் மனித நட்புகளிலும் சகவாசங்களிலும் வளர்ந்தார். கர்த்தர் எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லா மக்களையும் நேசித்தார். அவர் தொழுநோயாளிகளைத் தொட்டார், பெண்களை கண்ணியத்துடன் நடத்தினார், மக்களை மாற்றினார், மற்றும் பலரை குணப்படுத்தினார். கர்த்தருக்கு மக்களுடனான உறவு அவர்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. சகேயு, சமாரியப் பெண் மற்றும் கர்த்தரைச் சந்தித்த மற்ற பலரும் மாற்றமடைந்தனர்.
நான் ஆவிக்குரிய விதத்திலும், மனதளவிலும், உடலளவிலும், உறவுகளிலும் என இந்த நான்கு பரிமாணங்களிலும் வளர்ந்து வருகிறேனா? நம்மை நாமே கேட்போம்.
Rev. Dr. J.N. Manokaran