நீதிமொழிகள் புத்தகத்தின் ஆசிரியர், ஞானத்தை உயர்ந்த, அழகிய, உதவிகரமான ஒரு பெண்ணாக உருவகப்படுத்துகிறார் (நீதிமொழிகள் 1:1-3). இது, நீதிமொழிகள் 7ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்படும் மூடத்தனமான, துன்மார்க்கமான, ஒழுக்கக்கேடான, ஆபத்தான பெண்ணுக்கு எதிர்மாறானது (நீதிமொழிகள் 7). இவ்வுருவகம் தீர்க்கதரிசன ரீதியில் கிறிஸ்துவின் மணவாட்டியான திருச்சபையைச் சுட்டிக்காட்டுகிறது. ஞானத்தை ஏற்றுக்கொள்ளவும், விவேகத்தை அணுகவும், புத்தியைப் பெறவும் திருச்சபை மக்களை அழைக்கிறது.
உரத்த குரல்:
ஒரு ஒழுக்கமற்ற பெண் இரவில் மறைவாகச் சஞ்சரித்து, பொய்களைப் பேசிக்கொண்டிருக்கையில்; 'ஞானம்' எனும் பெண் பகிரங்கமாகச் சஞ்சரித்து, உண்மையை நம்பகத்தன்மையுடனும் அதிகாரத்துடனும் பிரகடனப்படுத்துகிறாள். தேவனுடைய மகிமையையும், அவருடைய நீதியையும், சத்தியத்தையும், இரட்சிப்பையும், வல்லமையையும், மகத்துவத்தையும் பிரகடனப்படுத்தவே சபை அழைக்கப்பட்டிருக்கிறது. விசுவாசிக்கிறவர்களின் இரட்சிப்புக்காக, கிறிஸ்துவுக்குள் தேவன் நிறைவேற்றிய முழுமையான கிரியையை நற்செய்தி (சுவிசேஷம்) அறிவிக்கிறது.
உயர்ந்த குன்றின் உச்சி:
சுவிசேஷச் செய்தி எல்லாத் திசைகளிலும் பரவலாக அறிவிக்கப்படுகிறது. கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்போல, திருச்சபை உலகத்திற்கு ஒளியையும், வழிகாட்டுதலையும், திசையையும் அளிக்கிறது. கிறிஸ்தவ சமூகம் தொலைவிலிருந்தும் காணப்படும் மலைமேலுள்ள பட்டணம்போல உள்ளது (மத்தேயு 5:14). ஆவிக்குரிய இருளில் வாழ்பவர்கள் அந்த ஒளியைக் கண்டு, அந்த ஒளியில் நடக்கத் தீர்மானிக்கலாம்.
தெருக்கள்தோறும் ஒலிக்கும் அழைப்பு:
தேவ ஞானம் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானது. அது சாதாரண மக்களையும் உட்பட அனைவருக்குமானது. தேவனுடைய ஞானம் கல்வி அறைகள், நூலகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களுக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை. அது மலைமேல் மட்டும் அறிவிக்கப்பட்டால், பலரால் அந்த உயரத்தை அடைய முடியாது. ஆனால் சுவிசேஷம் எல்லா தெருக்களையும், எல்லா வீடுகளையும் சென்றடைகிறது. “உன்னாலே பூமியின் சகல வம்சங்களும் ஆசீர்வதிக்கப்படும்” என்று தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் அளித்தார் (ஆதியாகமம் 12:3).
கட்டிடங்களுக்குள் மட்டும் முடங்கியதல்ல:
நற்செய்தி சபைக் கட்டிடங்களுக்குள் மட்டும் பிரசங்கிக்கப்படுவதில்லை; அது எங்கும் பிரசங்கிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சபைக் கூட்டங்கள் நடைபெறும்; ஆனால் வாரம் முழுவதும், விசுவாசிகள் தங்கள் சுற்றுப்புறங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் என எங்கும் நிறைந்திருக்கிறார்கள். அருட்பணியாளர்கள் (Missionaries) நற்செய்தியை உலகின் மிகத் தொலைதூர மூலைகளுக்கும் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் அதைப் பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், மலைப்பாங்கான பகுதிகள், பள்ளத்தாக்குகள், நகரங்கள், கிராமங்கள் மற்றும் தீவுகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் கால்நடையாக நடப்பது, மிதிவண்டி ஓட்டுவது, குதிரை சவாரி செய்வது, படகு துடுப்பு போடுவது, கோவேறு கழுதைகள் மீது ஏறி மலைகளில் பயணிப்பது மற்றும் விமானங்களில் பறப்பது எனப் பல்வேறு போக்குவரத்து முறைகள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
சுவிசேஷமாகிய தேவ ஞானத்தை அறிவிப்பதில் நான் ஞானமுள்ள நபராக இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran