“வெற்றியும் வல்லமையும் நம் தேவனுடைய இராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் இப்போது வந்திருக்கின்றன. ஏனெனில் நமது சகோதரர்கள்மேல் குற்றம் சுமத்தியவன் புறந்தள்ளப்பட்டான். நம் தேவனுக்கு முன்பாக இரவும் பகலும் நம் சகோதரர்கள் மேல் குற்றம் சுமத்தியவன் அவனே ஆவான்” (வெளிப்படுத்துதல் 12:10).
கண்ணிகளும் உத்திகளும்:
பரிசுத்த தேவனின் பிள்ளைகளை வீழ்த்துவதற்காக, சாத்தான் பலவிதமான யுக்திகளையும் வலைகளையும் பயன்படுத்துகிறான் (1 தீமோத்தேயு 3:7; 2 தீமோத்தேயு 2:26; 2 கொரிந்தியர் 2:11). அவன் பயன்படுத்தும் மிக முக்கியமான ஆயுதம் சந்தேகம். அவன் நம் மனங்களில் விதைக்கும் சந்தேகம், தேவனுடைய நன்மை, கிருபை, அன்பு, நம்பிக்கையோடு நிலைத்திருக்கும் தன்மை, பரிசுத்தம், வள்ளல் தன்மை, மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருக்கிறது. “நீக்கமில்லாத அன்போடு உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்கிற தேவனைப் பற்றியே சந்தேகம் கொள்பவர்களாக நம்மை மாற்ற நினைக்கிறான்.
தேவனின் நீதிமன்றம்:
இப்படியாக கற்பனை செய்யலாம்;
பிதாவாகிய தேவன் நியாயாதிபதியாக தன் மகிமை நிறைந்த சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். சாத்தான், நேர்மையான யோபை குற்றம் சாட்டியது போலவே, தேவனுடைய ஜனங்களை குற்றம் சாட்ட அனுமதிக்கப்படுகிறான். இவ்வாறாக அவன் பட்டியலிட்டு கூறுகிறான்;
"இந்த மனிதன் இதைக் செய்தான், அதைச் செய்தான்; இவ்வளவையும் தவற விட்டான்; அவனது உள்ளக் கோரிக்கைகளும் நோக்கங்களும் கூட தூய்மையற்றவை!" அவன் சொல்வதில் உண்மை இருக்கிறது; தேவனுடைய பரிசுத்த சட்டத்தின்படி இந்த மனிதன் ஆழ்ந்த பாவி. பின்னர் பிதாவாகிய தேவன் தனது மகனை பரிசுத்தவான்களின் வக்கீலாகப் பேச அனுமதிக்கிறார். அவர் கூறுகிறார்: “என் கட்சிக்காரர் முற்றிலும் குற்றவாளி. பரிசுத்த சட்டத்தின்படி அவர் மரண தண்டனைக்கு தகுதியானவர் தான்.” இதைச் சாத்தான் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறான், குற்றவாளி தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார்! ஆனால் அடுத்தவேளை, ஆண்டவர் இயேசு மேலும் கூறுகிறார்: "அப்பா, அவர் எனக்குச் சொந்தமானவர். அவர் மீது இருந்த தண்டனையை நான் ஏற்று விட்டேன். அவர் குற்றத்திற்கான பரிகாரத்தையும், மரணதண்டனையையும் என் மேல் எடுத்துக்கொண்டேன். கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டது." அப்போது பிதாவாகிய தேவன் தீர்ப்பு அளிக்கிறார்; "குற்றம் நிரூபிக்கப்பட்டது, ஆனால் தண்டனை முழுமையாக செலுத்தப்பட்டது; நீதி பூரணமாக நிறைவேற்றப்பட்டது; நீதிமான் என்று அறிவிக்கப்படுகிறது!". சாத்தான் கோபத்தில் வெறித்தனமாய்ப் பொங்கி எழுகிறான். அவனது முயற்சி தோல்வியடைந்தது.
நம்பிக்கைக்குரிய தேவனும் நியாயமான தீர்ப்பும்:
பிதாவாகிய தேவன் நம்பிக்கைக்குரியவரும், நியாயமானவரும் ஆவார். யார் இயேசுவின் இரத்தத்தில் நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்களது பாவங்களைத் துடைக்கும் இரட்சிப்புத் திட்டத்தை ஏற்படுத்தினார் (1 யோவான் 1:7). தேவன் தம் வாக்குத்தத்தங்களுக்கும், பரிசுத்த தன்மைக்கும் உண்மையாயிருக்கிறார். அவர் பாவத்துடன் ஒப்புரவாகுதல் இல்லை; தண்டனை இன்றித் தன்னிச்சையாக மன்னிக்கமாட்டார். தேவன் நியாயம் உள்ளவரும், நீதியின் தேவனுமாக இருப்பதால், ஒரே பாவத்திற்கு இருமுறை தண்டனை விதிப்பதில்லை. இயேசு கிறிஸ்து அந்தத் தண்டனையை நமக்குப் பதிலாக ஏற்றுக்கொண்டதால், அவர்மீது நம்பிக்கை வைத்த பாவிக்கு மீண்டும் தண்டனை இல்லை. ஒரு விசுவாசி பரிசுத்தம் நோக்கிய வாழ்க்கையில் தடுமாறினாலும், அவனை மீண்டும் எழும்ப செய்யும் கிருபை வாய்ப்பு உண்டு. ஏனெனில் இயேசு கர்த்தர் தான் நமக்காக பரிசுத்த நியாயாதிபதியாக, பிதாவின் வலப்புறத்தில் இருப்பவர்; நம்முடைய பாவங்களுக்கு பரிகாரமாயும் இருக்கிறார் (1 யோவான் 2:1-2).
சாத்தான் என் மீது குற்றம் சாட்டும்போது நான் எனக்காக வழக்காடுபவருடன் நிற்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran