உபத்திரவத்தின் இலக்குகள்

ஞாயிற்றுக்கிழமை காலையில் வேதாகமத்தை எடுத்துக்கொண்டு திருச்சபைக்குச் செல்லும் கிறிஸ்தவர்களை பார்த்த ஒருவர் மிகுந்த எரிச்சலடைந்தார். அவர், “சிலுவையில் மரித்த ஒரு குற்றவாளியை ஏன் நீங்கள் பின்பற்றுகிறீர்கள்?” என்று கேலி செய்தார்.

உலகம் முழுவதும் ஏன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இவ்வளவு வெறுப்பு உள்ளது? காரணமில்லாத வெறுப்பும் துன்புறுத்தலும் தம்முடைய சீஷர்களுக்கு வரும் என்று ஆண்டவர் இயேசு முன்கூட்டியே எச்சரித்தார் (யோவான் 15:25). சுவிசேஷத்தின் குறைந்தது நான்கு அம்சங்கள் துன்புறுத்தலின் முக்கிய இலக்குகளாக உள்ளன.

கிறிஸ்து:
பல மதங்கள் உயர்ந்த தத்துவங்களையும் சிறந்த சிந்தனைகளையும் போதிக்கின்றன. ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போன்ற உன்னதமான நபரை எந்த மதமும் அளிக்கவில்லை. உலகின் எந்த கலாச்சாரத்திலும், உயர்ந்த நற்பண்புகளுடன் வாழும் ஒருவரை மக்கள் கிறிஸ்துவோடு ஒப்பிடுகிறார்கள். இதனால், பிரதான ஆசாரியர்கள் இயேசுவை பார்த்து பொறாமை கொண்டதுபோல, பல மதத்தினரும் தங்களுடைய மதங்களில் கிறிஸ்துவைப் போன்ற நபர் இல்லாததினால் மனக்கசப்பும் பொறாமையும் கொள்கிறார்கள்.

தேவனுடைய திருச்சபை: 
கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறை கூறுபவர்கள் உலகளாவிய சபையைக் கண்டு எரிச்சலடைகிறார்கள். பேரரசுகள் எழுந்து வீழ்ந்தபோதும், பேரரசர்கள் துன்புறுத்தி மரித்தபோதும்; பொருளாதாரங்கள் எழுந்து வீழ்ந்தபோதும், அறிவுஜீவிகள் சபையைக் கண்டிக்க எழுந்து வீழ்ந்தபோதும்; சபை எல்லாவிதமான தாக்குதல்களின் வெள்ளத்திற்கும் மத்தியில் நிற்கிறது. சபையின் மீதான அரசியல், அறிவுசார், மத, கலாச்சார, பொருளாதார, தேசிய, அரசாங்க மற்றும் சமூகத் தாக்குதல்கள் எப்போதும் தோல்வியடைந்தன. பாதாளத்தின் வாசல்கள் சபைக்கு எதிராக மேற்கொள்ள முடியாது (மத்தேயு 16:18) என்பதே உண்மை. 

தேவனுடைய ராஜ்ஜியம்: 
நற்செய்தியானது தேவனுடைய ராஜ்ஜியத்தை, அதாவது தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள், தேசங்கள், கண்டங்கள் மற்றும் பூமி அனைத்தின் மீதும் தேவனுடைய ஆட்சியைப் பிரகடனப்படுத்துகிறது.  ராஜ்யங்கள், சர்வாதிகாரிகள், பேரரசர்கள் மற்றும் மதத் தலைவர்கள் மனிதர்களின் விசுவாசத்திற்காக ஏங்கும்போது, திருச்சபைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஏராளமான மனிதர்கள் வேதாகமத்தின் விழுமியங்களைப் பின்பற்றுகிறார்கள். ராஜ்யத்தின் விழுமியங்கள் நெறிமுறைகளாக மாறிவிடுகின்றன; வேதாகமத்திற்கு எதிரான நாடுகள் அவற்றுக்குத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றன.

 தேவனுடைய நீதி:
அறிவுஜீவிகள் மற்றும் தேசங்கள் உட்படப் பலரும், தேவனின் நீதியை அலட்சியப்படுத்துவதுடன், அதைப் பரிகாசமும் செய்கின்றனர். தேவனின் நீதியான நியமங்களை வேதாகமம் பிரகடனப்படுத்துகிறது; திருச்சபையானது அதை உலகிற்கு அறிவிக்கிறது. நீதியற்ற மத, அரசியல், கலாச்சார மற்றும் சமூகத் தலைவர்கள் தேவ நீதியைக் கண்டு ஒவ்வாமை கொள்கின்றனர்; ஏனெனில் அவர்கள் சுயநலமிக்கவர்களாகவும், சலுகை பெற்றவர்களாகவும், அதிகாரத்தைத் தங்கள் பிடியில் தக்கவைத்துக்கொள்ள விரும்புபவர்களாகவும் இருக்கின்றனர்.

தேவனுடைய ராஜ்யத்திற்கும் அவருடைய நீதிக்கும் முன்னுரிமை கொடுப்பதினால் நான் உபத்திரவப்படுகிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran