உறுதியான அன்பும் ஜீவனும்

மக்கள் நீண்ட காலம் வாழவும் மற்றும் சிறந்த  தரமான வாழ்க்கையையும் நாடுகிறார்கள். ஆரோக்கியமான மற்றும் வசதியான வாழ்க்கை மட்டும் போதாது. “ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது. என் உதடுகள் உம்மைத் துதிக்கும்” (சங்கீதம் 63:3) என்பதாக தாவீது ராஜா பாடுகிறார்.‌ தாவீதைப் பொறுத்தவரை, தேவனின் மிகுந்த அன்பும் அக்கறையும் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது மற்றும் நோக்கமற்றதாகி விடுகிறது. 

இயற்கையும் அதிசயத்துவமும்:
தாவீதுக்கு வாழ்க்கை இயற்கையானதாக இருந்தாலும், தேவனுடைய அன்பு அதிசயத்துவமானதாக இருந்தது. ஆம், மனிதனின் சரீர வாழ்க்கை தற்காலிகமானது; அது விரைவில் முடிவுக்கு வரும். ஆனால் தேவனுடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. தாழ்மையுடன், விசுவாசத்தோடு அந்த அன்பை ஏற்பவர்கள், அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த தேவனுடைய சமுகத்தில் நித்திய ஜீவனை பெறுவார்கள்.

அனுபவம்:
பொதுவாக மக்கள் வாழ்க்கையை நன்கு அனுபவிக்கவே விரும்புகிறார்கள். ஆனால் தாவீதுக்கு, தன்னுடைய வாழ்நாள்களை ஆட்கொண்டிருந்த தேவனுடைய பெரும் அன்பை அனுபவிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த உலகத்தில் உயிருடன் இருப்பதே ஒரு பெரிய வரமும் வாய்ப்பும் ஆகும். ஆனால் உண்மையாக வாழ்க்கையை அனுபவிக்க தேவனுடைய அன்பு அவசியம். அந்த அன்பே வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் அளிக்கிறது.

மதிப்பு:
பலருக்குத் தங்களுடைய வாழ்க்கையே மிக மதிப்புள்ளதாக இருக்கிறது. ஆனால் தாவீதுக்கு, தனது வாழ்க்கையைவிடவும் தேவனுடைய அன்பே அதிக மதிப்புடையதாக இருந்தது. தேவனுடைய அன்பின்றி மனித வாழ்க்கை துயரம், வேதனை, பாடுகள், நம்பிக்கையில்லாத நிலை ஆகியவையாக மட்டுமே இருக்கும். தேவனுடைய அன்பே வாழ்க்கையின் கண்ணோட்டத்தையும், மதிப்புகளையும் முன்னுரிமைகளையும் மாற்றுகின்றது.

அன்பின் பரிசு:
மற்றவர்களுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிப்பது ஒரு உயரிய செயல். மருத்துவர்கள், ஏழைகள், அநாதைகள் மற்றும் விதவைகள் என தேவைப்படுகிறவர்களுக்கு உதவுவது அவர்களுடைய வாழ்க்கையை மாற்றக்கூடியதாக இருக்கலாம். ஆனால் தாவீதுக்கு, இது போதுமானதாக இல்லை; அவர் தேவனுடைய அன்பை பிறருடன் பகிர விரும்பினார். தற்காலிக தேவைகளை பூர்த்தி செய்வது மட்டும் இல்லாமல், மனிதர்கள் நித்தியத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும். அதற்கான ஒரே வழி; தேவனுடைய அன்பை அவர்களுக்கு அறிவிக்கிறதுதான். எனவே, இந்த பாவத்தாலும் துயரத்தாலும் நிறைந்த உலகத்தில் நற்செய்தியைப் பரப்புவது மிக முக்கியமானதாகும்.

விரக்தி: 
மக்கள் நோயுற்ற போது அல்லது சுவாசிக்க முடியாத நிலைக்கு வந்தால், மிகுந்த மனச்சோர்வை அனுபவிக்கிறார்கள். தங்கள் ஆயுள் குறைந்து விடுமோ என்ற பயத்தால், உடனே மருத்துவரை நாடுகிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், நித்திய ஜீவனை இழக்கப்போகிறோம் என்பதற்காக அவர்கள் சோர்ந்து போவதில்லை. ஆனால் தாவீதுக்கு, தேவனுடைய பேரன்பை உணர முடியாதபோது தான்  மிகுந்த வேதனையில் ஆழ்ந்தார். நல்ல உடல்நிலை மட்டும் போதாது; தேவனுடைய அன்பான பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு விசுவாசிக்கும் அவசியம். 

சமாதானம்:
கர்த்தருடைய அன்பு இல்லாமல் வாழும் மக்கள், உடைந்த இதயங்களுடனும் ஆழ்ந்த உள்பாதிப்புகளுடனும் தினமும் துயரத்தோடு வாழ்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியும் அமைதியும் இல்லை. ஆனால் கர்த்தருக்குள் இருக்கிற சமாதானம், மனித புத்தியால் விளக்க முடியாத அளவுக்கு அல்லது விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதும் அழகானதும் ஆகும். அந்த அன்பும் சமாதானமும் மனதை நிம்மதிக்கும், வாழ்க்கையை நம்பிக்கைக்கும் வழிநடத்தும்.

தேவனின் மகத்தான, உறுதியான அன்பை நான் உணர்ந்து போற்றுகிறேனா?  

Rev. Dr. J.N. Manokaran