மனிதர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் போராட்டங்கள், நோய்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், நம்பிக்கையின்மை, கவலை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றைக் கடந்து செல்கிறார்கள். சிலர் இவற்றால் துவண்டு போகிறார்கள்; மற்றவர்களோ மன உறுதியுடன் தொடர்ந்து பயணிக்கிறார்கள். சிலர் நம்பிக்கை முற்றிலும் இழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குக்கூட செல்கிறார்கள். ஆயினும், ஆண்டவர் அப்படிப்பட்ட மக்களையும் தம்மை நம்பி, தம்மிடம் வரும்படி அழைக்கிறார். இருள் சூழ்ந்த இத்தகைய வேளைகளில் அவருடைய வார்த்தையே நமக்கு வெளிச்சமாக இருக்கிறது.
நொறுங்குண்ட (நெரிந்த) நாணலை அவர் முறியாமலும், மங்கியெரிகிற திரியை அவர் அணைக்காமலும் இருப்பார் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்துத் தேவனுடைய வார்த்தை கூறுகிறது (ஏசாயா 42:3; மத்தேயு 12:20). பலவீனப்பட்டவர்கள், சோர்வடைந்தவர்கள், காயப்பட்டவர்கள் ஆகியோர்மீது ஆண்டவர் கொண்டிருக்கும் இரக்கமும் அன்பும் இந்த வாக்குத்தத்தத்தில் வெளிப்படுகின்றன. விசுவாசம் மிகச் சிறியதாகவும் மங்கலாகவும் இருந்தாலும், அதை ஆண்டவர் புறக்கணிப்பதில்லை; நிராகரிப்பதுமில்லை.
துன்பங்களால் அலைக்கழிக்கப்படுதல் (Battered):
சிலர் பல திசைகளிலிருந்தும் வரும் பிரச்சினைகளாலும் துன்பங்களாலும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். யோபுவின் வாழ்க்கையை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் காணலாம். சாத்தான் அவரைச் சோதிக்க அனுமதிக்கப்பட்டபோது, யோபு தமது குடும்பத்தில் பெரும் இழப்பைச் சந்தித்தார்; அவருடைய பிள்ளைகள் அனைவரும் இறந்துபோனார்கள். தமது செல்வங்களையும் இழந்தார். உடல் முழுவதும் வேதனையளிக்கும் புண்களால் பாதிக்கப்பட்டார். அதுமட்டுமல்ல, அவருக்கு ஆறுதல் கூற வந்த நண்பர்களும் அவருடைய துயரத்தைப் புரிந்துகொள்ளாமல், தங்கள் வார்த்தைகளால் அவருடைய வேதனையை மேலும் அதிகரித்தார்கள். அதனால் அவர்களைத் துன்பந்தரும் தேற்றரவாளர்கள் என்று யோபு குறிப்பிட்டார் (யோபு 16:2). இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டன என்பதற்காக, தேவன் யோபுவை நிராகரித்துவிட்டார் அல்லது கைவிட்டுவிட்டார் என்று அர்த்தமல்ல.
காயப்பட்ட நிலை (Bruised):
சிலர் உடலளவிலும், மனதளவிலும், உணர்வுபூர்வமாகவும், ஆவிக்குரிய நிலையிலும் காயப்பட்டிருக்கிறார்கள். வெளியில் புன்னகையுடன் காணப்பட்டாலும், உள்ளத்தில் துக்கம், வேதனை, குற்றவுணர்வு, பயம், அவமானம், ஏமாற்றம் போன்றவற்றைச் சுமந்துகொண்டிருக்கலாம். நொறுங்குண்ட நாணல் இன்னும் நின்றுகொண்டிருந்தாலும், அது வலுவிழந்து சேதமடைந்த நிலையில் இருக்கும். அதுபோல, காயப்பட்ட மனிதர்களையும் ஆண்டவர் நசுக்குவதில்லை. மாறாக, தமது அன்பினாலும், இரக்கத்தினாலும், சுகமளிக்கும் கிருபையினாலும், பொறுமையினாலும் அவர்களைத் தம்மிடம் நெருங்கி வரச் செய்கிறார்.
மனிதர்கள் நம்முடைய காயங்களைப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்; ஆனால் நம் உள்ளத்தின் வேதனையை ஆண்டவர் அறிவார்.
சோர்வினால் தளர்ந்துபோதல் (Beaten):
பயம், தோல்வி, களைப்பு, விமர்சனங்கள், பொய்க் குற்றச்சாட்டுகள், ஏமாற்றங்கள் மற்றும் தொடர்ச்சியான பின்னடைவுகள் ஆகியவற்றால் பலர் மனதளவில் துவண்டுபோகிறார்கள்.
எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுகிறார்கள். கடந்தகாலத் தோல்விகள் அவர்களைச் செயல்பட முடியாதபடி முடக்குகின்றன. நிகழ்காலச் சோர்வு அவர்களுடைய செயல்திறனைக் குறைக்கிறது. இப்படிப்பட்டவர்களை நம்முடைய நல்ல ஆண்டவர் தம்மிடம் வரும்படி அழைக்கிறார். அவரிடத்தில் இளைப்பாறுதலைப் பெற்று, புத்துணர்ச்சியடைந்து, எதிர்கொள்ள வேண்டிய பெரிய சவால்களைத் தைரியத்துடன் சந்திக்க அவர் நம்மை அழைக்கிறார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று இயேசு அழைக்கிறார் (மத்தேயு 11:28).
முற்றிலும் நொறுங்கிப்போன நிலை (Broken):
முறிந்துபோன ஒரு நாணலை மனித கண்ணோட்டத்தில் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது இயலாததாகத் தோன்றலாம். அது பயனற்றது என்றும், இனி எதற்கும் உதவாது என்றும் மனிதர்கள் கருதலாம். ஆனால், அன்புள்ள தேவனால் நொறுங்கிப்போன வாழ்க்கையையும் மீட்டெடுத்து, மீண்டும் கனிகொடுக்கச் செய்ய முடியும். மனிதர்களின் பார்வையில் சீர்செய்ய முடியாததாகத் தோன்றுவதையும் தேவன் தமது வல்லமையினால் புதுப்பிக்க வல்லவர். அவர் நம்முடைய தரிசனத்தை மீட்டெடுக்கிறார்; பெலத்தைப் புதுப்பிக்கிறார்; வாழ்க்கையின் நோக்கத்தைச் சீரமைக்கிறார்; நம்பிக்கையை மீண்டும் பற்றியெரியச் செய்கிறார்; நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்குகிறார். நொறுங்கிப்போன வாழ்க்கையிலிருந்து தேவனால் மீட்டெடுக்கப்படுகிறவர்கள், முன்பைவிட அதிக விசுவாசமுள்ளவர்களாகவும், தாழ்மையுள்ளவர்களாகவும், அதிக கனிகொடுக்கிறவர்களாகவும் மாற முடியும். நம்முடைய உடைதல் வாழ்க்கையின் முடிவல்ல; தேவனுடைய கரங்களில் அது ஒரு புதிய தொடக்கமாக மாறலாம்.
என்னுடைய விசுவாசம் பலவீனமாக இருந்தாலும், என் வாழ்க்கை ஆண்டவருடைய மகிமைக்காகப் பிரகாசிக்கவும் எரிந்துகொண்டிருக்கவும் முடியும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran