ஒரு நபர் தான் ஆசீர்வதிக்கப்பட்டவன், தேவன் எப்போதும் தன்னோடு இருக்கிறார் என்று கூறுவான் ஆனால் அவனோ ஒருபோதும் சபைக்கு செல்வதில்லை அல்லது வேதாகமத்தையும் படிப்பதில்லை. அது என்னவென்றால் தேவன் தன்னிடம் நேரடியாகப் பேசுகிறார் ஆகையால் வேதாகமத்தைப் படிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுவான். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான். “ஒருவன் தேவனுடைய போதனைகளைக் கேட்க மறுத்தால், தேவன் அவனது ஜெபங்களையும் கேட்க மறுத்துவிடுவார்” (நீதிமொழிகள் 28:9). வேதாகமம் ஜெபங்களுக்கு அடித்தளமாகும்.
வேதாகமம்:
தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் தம்மை வெளிப்படுத்தியுள்ளார். தேவனை, அவருடைய பண்புகளை, அவருடைய செயல்களை, அவருடைய சித்தத்தை, திட்டங்களை அறிந்துக் கொள்ள, வேதாகமத்தைப் படித்தே ஆக வேண்டும். தேவன் தம்முடைய மக்கள் திறந்த மனதுடனும், மகிழ்ச்சியான மனப்பான்மையுடனும், கீழ்ப்படிதலுள்ள இருதயத்துடனும் தேவனுடைய வார்த்தையைப் படிக்கவும், புரிந்துகொள்ளவும், தியானிக்கவும் எதிர்பார்க்கிறார். ஒருவர் தேவ வார்த்தையைப் புறக்கணித்தால், அவர் தேவனையேப் புறக்கணிப்பதற்கு சமம். சிலர் அவருடைய வார்த்தையைப் புறக்கணிக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியவோ அல்லது அவருடைய கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படியவோ தயாராக இல்லை. நிச்சயமாக, அத்தகைய மக்களின் ஜெபங்கள் தற்காலிக அல்லது சாதாரணமான விஷயங்களுக்காக இருக்கும், ஏனெனில் அது தேவனின் இருதயத்தையும் விருப்பங்களையும் அறியாமல் அல்லவா செய்யப்படுகிறது.
உரையாடல்:
உரையாடல் இருக்கும்போதுதான் ஒரு ஆற்றல்மிக்க உறவு சாத்தியமாகும். தேவனுடனான நெருக்கமான உறவைப் பெற, ஒரு சீஷன் அவருடைய வார்த்தையைக் கேட்க வேண்டும், துதிகளிலும் ஜெபங்களிலும் அவரிடம் பேச வேண்டும். ஜெபிக்கிறவர்கள் வேதாகமத்தைப் படிக்கவோ கேட்கவோ இல்லையென்றால், அவர்கள் வெறுமனே பேச மட்டுமே செய்கிறார்கள். இது வெறும் ஒரு ஓரங்கவுரை (monologue) மாத்திரமே, உரையாடல் அல்ல. இதை ஒரு பைத்தியக்காரன் கூட செய்வானே, தானே பேசிக் கொள்வான் யாருடைய பதிலையும் எதிர்பார்க்க மாட்டான், தேவன் எல்லா ஜெபங்களுக்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை, குறிப்பாக அவருடைய வார்த்தையை வேண்டுமென்றே புறக்கணிப்பவர்களுக்கு அவர் பதிலளிக்க வேண்டியது இல்லை.
அருவருப்பு:
இந்த வார்த்தையின் அர்த்தம் தேவனுக்கும் அவருடைய குணத்திற்கும் எதிரானது, எனவே அவரால் இந்த மோசமான மற்றும் பொல்லாத காரியங்கள் வெறுக்கப்படுகிறது. அந்த நபர் தேவனின் வார்த்தையை கலக மனப்பான்மையோடு புறக்கணித்தால், அவரின் ஜெபங்கள் கூட தேவனுக்கு அருவருப்பானதாக இருக்கலாம். இஸ்ரவேல் புத்திரர் கொண்டு வந்த வீண் காணிக்கைகளில் தேவன் மகிழ்ச்சியடையவில்லை, அவர்களின் மத விழாக்களை வெறுத்தார், அவருக்குப் பிரியமில்லாத தகன பலிகளையும் காணிக்கைகளையும் நிராகரித்தார் (ஏசாயா 1:11-15; ஆமோஸ் 5:21; எரேமியா 6:20).
என் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கும் என்ற வார்த்தையைத் தியானிப்பதில் நான் நேரத்தைச் செலவிடுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran