அறநெறி பரிசுத்தமான தேவனிடமிருந்தே தோன்றுகிறது

சிலர், ஒழுக்கநெறிகளும் நற்பண்புகளும் எல்லா கலாச்சாரங்களிலும், எல்லா மதங்களிலும் காணப்படுகின்றன என்று வாதிடுகின்றனர். ஆனால், உண்மையான ஒழுக்கநெறியும் ஆவிக்குரிய மதிப்புகளும் ஒரே ஆதாரத்திலிருந்தே பிறக்கின்றன. அந்த ஆதாரம் பரலோகத்தையும் பூமியையும் படைத்த பரிசுத்த தேவன் ஆவார். உதாரணமாக, திருமணம் என்பது மனிதன் உருவாக்கிய ஒப்பந்தமல்ல; அது தேவன் ஏற்படுத்திய பரிசுத்த உடன்படிக்கை. இதை (ஆதியாகமம் 2:21–24) தெளிவாகக் கற்பிக்கிறது.

பரிசுத்தமான தேவன்:
தேவனுடைய பரிசுத்த தன்மையே அனைத்து ஒழுக்கநெறிகளுக்கும் அடித்தளமாகும். பரிசுத்த தேவனும், அவருடைய நீதியான தரங்களும் இல்லையெனில், நன்மை–தீமையை அளவிட எந்த நிலையான அளவுகோலும் இருக்காது. அப்போது ஒவ்வொருவரும் தமக்குச் சரி என்று தோன்றுவதைச் செய்வார்கள் (நியாயாதிபதிகள் 21:25). ஒழுக்கநெறி தனிமனித விருப்பத்திற்கேற்ப மாறிவிடும். அதன் விளைவாக, ஒவ்வொருவரும் "என் கண்ணோட்டம் சரி அல்லது என் எண்ணமே சரி" என்று கூறி, தேவனுடைய வார்த்தையையும், சமுதாயத்தின் நெறிகளையும், நாட்டின் சட்டங்களையும் புறக்கணிக்கத் தொடங்குவார்கள்.

பரிசுத்த திருமண உடன்படிக்கை:
திருமணம் என்பது தேவன் நிறுவிய பரிசுத்த உடன்படிக்கை. அதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கணவன்–மனைவியாக இணைக்கப்படுகிறார்கள். அவர்கள் "ஒரே மாம்சம்" ஆகிறார்கள். இது மனித அறிவால் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாத தேவன் ஏற்படுத்திய ஆழமான இரகசியமான ஐக்கியமாகும்.

ஒரே பாலினத் திருமணம்:
சிலர் ஒரே பாலினத் திருமணங்களை ஆதரித்து ஊக்குவிக்கின்றனர். தேவனுடைய திட்டம் அதுவாக இருந்திருந்தால், ஆதாமுக்கு துணையாக மற்றொரு ஆணை அவர் படைத்திருப்பார். ஆனால் வேதாகமம் தெளிவாகக் கற்பிப்பது என்னவென்றால், ஆண் முழுமையடைய தேவன் அவனுக்குத் துணையாக ஒரு பெண்ணைப் படைத்தார் என்பதே.

பலதார மணம்:
சில மதங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட துணைவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சில கலாச்சாரங்களில், ஒரு பெண் பல ஆண்களை மணக்கலாம், அல்லது ஒரு ஆண் பல பெண்களை மணக்கலாம்.

மனைவியை சொத்தாகக் கருதுதல்:
சில மதங்களிலும் சமூகங்களிலும், மனைவி கணவனின் சொத்தாகக் கருதப்படுகிறாள். அவளை ஒரு பொருளைப் போல வாங்கவும் விற்கவும் முடியும் என்ற மனப்பான்மையும் காணப்படுகிறது. ஆனால் வேதாகமம் பெண்ணை தேவனுடைய சாயலின்படி படைக்கப்பட்ட சம மதிப்புடையவராகக் கற்பிக்கிறது.

மனைவியை அடிமையாக நடத்துதல்:
சில மதப் போதனைகளில், "கணவனே தெய்வம்; மனைவி அவனை வணங்க வேண்டும்" என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக, சில பெண்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அவர்களிடம் அளவுக்கு மீறிய வேலை வாங்கப்படுவதும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்படுவதும், அவமதிக்கப்படுவதும் நிகழ்கிறது. ஆனால் கிறிஸ்தவ திருமணத்தில், கணவன் தன் மனைவியை  சபையை நேசித்ததுபோல் அன்புடன் நேசிக்க வேண்டும் என்று வேதாகமம் போதிக்கிறது (எபேசியர் 5:25).

தண்டனையும் நியாயத்தீர்ப்பும்:
பரிசுத்தமான தேவன் 
பரிசுத்த தேவன் மனிதனைப் பொறுப்புக்கூறச் செய்கிறார். மனிதன் ஒழுக்கப் பொறுப்புள்ள படைப்பாக இருப்பதால், தன் வாழ்க்கைக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவன். இவ்வுலகிலும் பாவத்திற்கான விளைவுகள் உண்டு; மரணத்திற்குப் பிறகு தேவனுடைய இறுதி நியாயத்தீர்ப்பும் உண்டு (எபிரெயர் 9:27).

பரிசுத்த வாழ்விற்கான அழைப்பு:
பரிசுத்த தேவனை ஆராதிக்கும் கிறிஸ்தவர்கள், அவரைப் போலவே பரிசுத்தமான வாழ்க்கையை நடத்த அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பரிசுத்தம் என்பது ஒரு விருப்பமல்ல; அது தேவனுடைய பிள்ளைகளின் அழைப்பும் அடையாளமும் ஆகும்.

நான் பரிசுத்த தேவனை உண்மையாக அறிந்திருக்கிறேனா? அவருக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran