நீதிக்கான உரிமை


பிரான்சின் வரலாற்றில், முதலாம் பிரான்சிஸ் ஆட்சியாளராக இருந்தார்.
ஒரு பெண் அவரை அணுகி, முழங்காலில் விழுந்து, நீதி வேண்டினாள். அதற்கு பிரான்சிஸ் கூறினார்; “நீதியை உனக்கு கொடுக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு; நீதி உனக்குக் கிடைக்கும். ஆனால், நீ கேட்டால் அது கருணையாக இருக்கும்.” ஆம், நீதி என்பது தேவன் மனிதருக்கு கொடுத்த உரிமை; குறிப்பாக துன்புறுத்தப்படுகிறவர்களுக்காகும். ஆனால் அது அதிகாரத்தில் இருப்பவர்களின் தயவு அல்ல
(யோபு 36:6). நீதிமான் தேவ நீதியை நேசிப்பவர். நீதியுள்ள தேவன் .நீதியை விரும்புகிறார்.

கேட்கப்படும் உரிமை:
தேவன் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வைத்தார். அங்கு உள்ள அனைத்தையும் அனுபவிக்க அனுமதி அளித்தார். ஆனால், ஜீவவிருட்சத்தின் கனியைச் சாப்பிடக் கூடாது என்றார். சாத்தான் பாம்பின் மூலம் அவர்களை ஏமாற்றியபோது, அவர்கள் அந்த கனியை உண்டார்கள். தேவன் வழக்கம்போல வந்தபோது, அவர்கள் பயந்து தங்களை மறைத்துக் கொண்டார்கள். நடந்த அனைத்தையும் தேவன் அறிந்திருந்தாலும், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தங்களைத் தாங்களே விளக்கிக் கொள்ள வாய்ப்பைக் கொடுத்தார். இருவரையும் அழித்து, புதிய உலகத்தைத் தோற்றுவிக்க தேவனுக்கு எளிதாக இருந்திருக்குமே. ஆனாலும், தமது சாயலில் படைக்கப்பட்ட ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் அந்த உரிமையை வழங்கினார் (ஆதியாகமம் 3: 8-13). பல நாடுகளில் நீதி இல்லை. யார் வேண்டுமானாலும் காரணமின்றி கைது செய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யாமலும், வழக்கறிஞர் உதவியின்றியும் தண்டிக்கப்படுகிறார்கள்.

நீதிக்கான உரிமை:
பலவீனரும், துன்புறுபவர்களும், ஏழைகளும், புறக்கணிக்கப்படுபவர்களும் நீதிமானாகிய தேவனால் நீதி பெறுகிறார்கள். ஆம், துன்புறுபவர்களுக்கு தேவன் உரிமையையும் நீதியையும் அளிக்கிறார். அவர்களின் கண்ணியமும் உரிமைகளும் துன்மார்க்கர்களால் கொடூரமாகப் பறிக்கப்படலாம். ஆனால், தேவன் அளிக்கும் நீதியை அவர்கள் பறிக்க முடியாது. ஏனெனில், தேவன் அவர்களை ஒருபோதும் கைவிடாமல், அவர்களுக்கு நீதியை அருளுகிறார். நீதி அவர்களுடைய உரிமைதான்; ஏனெனில் அவர்கள் தேவனால் படைக்கப்பட்டவர்கள். எப்பொழுதெல்லாம் ஏழைகளுக்கு நீதி மறுக்கப்பட்டதோ, அப்பொழுதெல்லாம் தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் ஜனங்களை கண்டித்தார்கள்.

ஆவிக்குரிய உரிமைகள்:
எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் மனிதர் அனைவருக்கும் ஒரு சிறப்பு உரிமையை வழங்குகிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு, தேவனுடைய பிள்ளைகளாகும் சிறப்பு உரிமையும் கொடுக்கப்படுகிறது (யோவான் 1:12). ஏனெனில் தேவன் நீதிமானாக இருக்கிறார்; தமது குமாரனில் ஒப்புரவாகும் பாவியை அவர் தண்டிப்பதில்லை. அந்தக் குமாரன் சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்து, என்றென்றைக்கும் வாழ்கிறார். மனந்திரும்பி விசுவாசத்தோடு தேவனை நோக்குகிற பாவிகளை, தேவன் உண்மையுள்ளவரும் நீதியுள்ளவருமாய் மன்னித்து அருளுகிறார். (1 யோவான் 1:9).

நான் நீதியை நேசிக்கிறேனா, நீதியை எளிதாக்குகிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran