யோசேப்பின் கட்டளையை நினைவு கூர்தல்

ஒரு இளைஞனுக்கு கல்வி கற்க வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  அவன் உற்சாகமாகவும் பதட்டமாகவும் இருந்தான்.  விமானம் மற்றும் வெளிநாட்டிற்கு என இது அவனது முதல் பயணம்.  அவன் தனது தனிப்பட்ட உடைமைகள், புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் உன்னிப்பாக ஆயத்தம் செய்தான். விமான நிலையம் அவன் வீட்டிலிருந்து இரண்டு மணி நேர தூரம் என்பதால் அவன் சரியான நேரத்தில் இடத்தை அடைந்தான். ஆனால் விமான நிலையத்திற்குள் நுழைந்தபோதுதான், ​​பாஸ்போர்ட் எடுக்கவில்லை என்பதை உணர்ந்தான்.  துரதிர்ஷ்டவசமாக, அவன் தனது விமானத்தைத் தவறவிட்டான். போக வேண்டிய நேரத்தில் போகாததால் கல்வி கற்கவும் இயலவில்லை. ஆம், கவலை, அவசரம், மன இறுக்கம் போன்றவற்றின் போது மறத்தல் என்பது இயல்பு.

எச்சரிக்கை மற்றும் உணர்வுள்ள தலைவர்:
மோசே மிகவும் திறமையான தலைவராக இருந்தான், அவன் பதட்டமான காலங்களில் கூட, தனது மனதை அமைதியாக வைத்திருக்க முடிந்தது.  பத்தாவது வாதையில் எகிப்தின் முதற்பேறான அனைவரும் கொல்லப்பட்டனர். பார்வோனும் எகிப்தியரும் இஸ்ரவேலர்களை தங்கள் தேசத்திலிருந்து துரத்திக் கொண்டிருந்தனர். அந்த பதட்டமான சூழ்நிலையிலும் தங்களின் மூதாதையரான யோசேப்பின் எலும்புகள் அடங்கிய சவப்பெட்டியை எடுத்துச் செல்வதை மோசே நினைவு கூர்ந்தான் (யாத்திராகமம் 13:19).

வாக்குத்தத்தம்:
"தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்" (ஆதியாகமம் 50:25). அவனுடைய சவப்பெட்டியை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு எடுத்துச் செல்வதாக அவனுடைய சகோதரர்கள் உறுதியளித்தனர்.  சவப்பெட்டி இஸ்ரவேல் சந்ததியினருக்கு அவர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு நிச்சயமாக செல்வார்கள் என்பதற்கு ஒரு மௌன சாட்சியாக அல்லது உத்வேகத்தின் ஆதாரமாக இருந்தது.  நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சீகேமிலே யோசுவாவால் சவப்பெட்டி அடக்கம் செய்யப்படும் வரை, மனிதகுல வரலாற்றில் மிக நீண்ட இறுதி ஊர்வலம் இதுவாக இருக்கலாம் (யோசுவா 24:32).

மறக்கவில்லை:
யோசேப்பின் பங்களிப்பை எகிப்து மறந்து விட்டது.  ஆனால் இஸ்ரவேல் புத்திரர் யோசேப்புக்கு கொடுத்த வாக்கை மறக்கவில்லை. வாக்கு அளித்த தலைமுறை இறந்துவிட்டாலும், அடுத்தடுத்த தலைமுறைகள் வாக்குறுதியை நிறைவேற்றின, ஆம், அதை மறக்கவோ அல்லது புறக்கணிக்கவோ அல்லது அலட்சியப்படுத்தவோ இல்லை.

முக்கியத்துவம்:
மோசேயும், இஸ்ரவேலின் மூப்பர்களும், இஸ்ரவேல் புத்திரரும் சவப்பெட்டியை எடுத்துக்கொள்வதை முக்கியமானதாகக் கருதினர்.  போர் போன்ற சூழ்நிலையில் மக்கள் விரைந்து செல்லும்போது, ​​பெரும்பாலான விஷயங்களைப் புறக்கணித்துவிட்டு, அத்தியாவசியப் பொருட்களை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்.  ஒரு தேசமாக, அவர்கள் இதை எடுத்துக்கொள்வதற்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்தனர். எதை எடுப்பது அல்லது எதை விடுவது என்பது உண்மையில் கடினமான தெரிவே.

 இந்த வாழ்க்கைப் பயணத்தில், நித்திய வாழ்வுக்குத் தேவையானவற்றை நான் எடுக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்