2000 ஆம் ஆண்டில், முதல் உலக கிறிஸ்தவ புத்தகக் கண்காட்சி மும்பையில் கிறிஸ்தவ புத்தக விற்பனையாளர்கள் சர்வதேச சங்கத்தால் (Christian Booksellers International Association (CBAI)) ஏற்பாடு செய்யப்பட்டது. அது வெற்றிகரமாக நடந்ததாகக் கூறப்பட்டாலும், சிலர் கடைசி நேரத்தில் தங்களது பங்களிப்பை ரத்து செய்ததால், அதை ஒருங்கிணைத்தவருக்கு பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கு கிறிஸ்துவின் வார்த்தை “வேர்ட் ஆஃப் கிரைஸ்ட்” ஸ்டால் வைத்திருந்தவராக ஜே.டி. ராஜேந்திரன் இருந்தார். அங்கே அவர் பல கிறிஸ்தவ புத்தக வெளியீட்டாளர்களுடன் தொடர்புகளை உருவாக்கினார். ஒரு சர்வதேச வெளியீட்டாளர் மூன்று மாதங்களுக்கு அவரை சோதனை அடிப்படையில் விநியோகஸ்தராக ஏற்கத் தயாராயிருந்தார். அதைப் பெரும் வாய்ப்பாக ஏற்றுக் கொண்டு, ஜே.டி. ராஜேந்திரன் அதனை உழைப்புடன் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அதன் மூலம், “வேர்ட் ஆஃப் கிரைஸ்ட்” முன்னணி கிறிஸ்தவ பதிப்பகங்களில் ஒன்றாக உயர்ந்தது. “ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி” (சங்கீதம் 68:11).
வாசிப்பு பழக்கத்தின் ஒழுக்கம்:
இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எழுத்தறிவில் முன்னிலை பெற்றிருந்தாலும், புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகமாக இல்லை. எல்லா போதகர்களும் பிரசங்க மேடையில் தாங்கள் படித்த ஒரு கிறிஸ்தவ புத்தகத்தை காட்டி, அதன் வாசிப்பைப் பகிர்ந்து, திருச்சபை உறுப்பினர்களை புத்தகம் வாங்கி படிக்க ஊக்குவித்திருந்தால், கிறிஸ்தவ பதிப்புத்துறை வளம் பெற்றிருக்கும். இத்தகைய ஊக்கமும் ஆதரவும் இல்லாததால், கிறிஸ்தவ வெளியீட்டாளர்கள் புதுமை செய்யவும், வாசகர்களை உருவாக்கவும், உள்ளூர் எழுத்தாளர்களை ஆதரிக்கவும் முடியவில்லை. கிறிஸ்தவ இலக்கிய உற்பத்தி பெரும்பாலும் மேற்கு நாடுகளின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களின் மொழிபெயர்ப்புகளாகவே இருந்தது.
உக்கிராணக்காரனின் (Stewardship) குறைவு அல்லது பொறுப்பின்மை:
வருத்தமாக, இந்தியாவில் கிறிஸ்தவ வெளியீட்டுத்துறைகள் செழித்து வளரவில்லை. ஊழியத்தையோ அல்லது அவர்கள்மேல் விழுந்த பொறுப்பையோ பரம்பரையாக பெற்ற சில தலைவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்ததில்லை. வெளியீட்டு அமைப்புகளின் சொத்துக்கள் விற்கப்பட்டன; அச்சு இயந்திரங்கள் விற்கப்பட்டன அல்லது பாழடைந்த கட்டிடத்தில் துருப்பிடிக்க விடப்பட்டன. சுயநலமும் பேராசையும் கொண்ட சில தலைவர்கள், ஊழிய சொத்துகளைத் தங்களது தனிப்பட்ட சொத்துகளாக மாற்றினர்.
உயிர்த்தெழுதலின் வல்லமை:
மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதிசயமான வழிகளில் செயல்படுகிறார். வெளியீட்டு ஊழியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக “மரித்த” போதும், கர்த்தர் தம் விசுவாசமான பணியைத் தொடர புதிய வெளியீட்டாளர்களை எழுப்பினார். தொழிலதிபராக இருந்த ராஜேந்திரனை, கிறிஸ்தவ வெளியீட்டின் பொறுப்பை ஏற்க தேவன் அழைத்தார். பாபு கே. வர்கீஸ், ராஜேந்திரன் பற்றி “இந்தியாவின் வேதாகம மனிதன்; சந்தைத் தளத்திலிருந்து சுவிசேஷத் தளத்திற்கு” எனும் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். ஒவ்வொரு தலைமுறையிலும் தேவன் தம்மைக் குறித்துச் சாட்சி விளங்கப் பண்ணாதிருந்ததில்லை (அப்போஸ்தலர் 14:17).
நான் தேவனின் அழைப்பிற்கும், அவர் கொடுத்த வளங்களுக்கும், வாய்ப்புகளுக்கும் விசுவாசமான உக்கிராணக்காரனாக இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran