ஒரு நீதிமான் பற்றிய விவரக்குறிப்பு

கர்த்தருக்குப் பயப்படும் ஒரு பாக்கியவானின் (நீதிமானின்) வாழ்க்கைப் பயணம் மிகவும் அற்புதமானது. எப்படி நிலா சூரியனின் ஒளியை பிரதிபலிக்கிறதோ அதுபோல, அவர் தேவனின் பண்புகளை பிரதிபலிக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தின் ஒளியாக இருக்கிறார், மேலும் தம்முடைய பிள்ளைகளை உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கும்படி அழைத்திருக்கிறார் (யோவான் 8:12; மத்தேயு 5:14). 

தேவ பயமுள்ளவர்: 
நீதிமான்கள் என்பவர்கள், தேவனை முற்றிலும் மதித்து நடக்கும் மற்றும் அவருக்குப் பயப்படும் மனிதர்களைக் குறிக்கிறது. ஏனெனில், தேவனுக்குப் பயப்படுவது தான் சகல ஞானத்துக்கும் ஆதாரமாகும். அவர்கள் தீமையை முழுமையாக வெறுக்கும் மனப்பான்மையையும் கொண்டிருப்பார்கள் (நீதிமொழிகள் 9:10; சங்கீதம் 112:1).

வேதத்தில் இன்பம் அடைபவர்:
ஒரு பாக்கியவானாகிய மனிதர் அதாவது நீதிமான் கர்த்தரை அன்புடன் நேசிக்கிறார். அதனால் அவர் வேதத்தை ஆர்வத்துடன் தியானிக்கிறார்; அதோடு நிற்காமல் கர்த்தரின் கட்டளைகளுக்கு மகிழ்ச்சியோடு, ஆர்வமோடு கீழ்ப்படிந்து நீதிமானாக உருவாகிறார் (சங்கீதம் 1:1–3; 112:1).

குடும்பத்திற்கு ஆசீர்வாதமானவர்:
நீதிமானின் பிள்ளைகள் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள் (சங்கீதம் 112:2).

செல்வந்தர்:
தேவனுக்கு பயப்படும் நீதிமான், தேவபக்தியுடனும் திருப்தியுடனும் வாழ்கிறதால் உண்மையான நன்மைகளை பெறுகிறார். அவர் விசுவாசத்தில் வளமானவராக, கோடீஸ்வரராக இருக்கிறார் (சங்கீதம் 112:3; யாக்கோபு 2:5).

அன்புள்ளவர், இரக்கமுள்ளவர்:
நீதிமான் கருணையுள்ளவரும், கிருபை நிறைந்தவரும், இரக்கமுள்ளவருமானவர். துன்புறும் மக்களுக்கும், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதலாக இருப்பவர் (சங்கீதம் 112:4).

உதவும் எண்ணமுள்ளவர்:
நீதிமான் தேவையுள்ளவர்களுக்கு தயையுடன் நடந்துகொண்டு, உதவிகரமாக கடனளிப்பவர் (சங்கீதம் 112:5).

பகுத்தறிவாளர்:
நீதிமான் அறிவும் தெளிவும் கொண்டவர். அவருடைய மதிப்புக்கூறு தேவனின் நீதி நியாயமே ஆகும் (சங்கீதம் 112:5; மத்தேயு 6:33).

வலுவானவர்: 
நீதிமான் மனதளவில் தைரியமுள்ளவர், துணிவானவர், வலிமையுள்ளவர், தீமையான விஷயம் கண்டோ அல்லது வீணான பழிச்சொற்களைக் கண்டோ பயப்படமாட்டார் (சங்கீதம் 112:7).

தாராளமான குணமுள்ளவர்: 
நீதிமான்கள் தாராள மனப்பான்மையை கொண்டுள்ளார்கள்; அவர்கள் மிகுதியாக, தியாக மனப்பான்மையோடு உதவி செய்பவர்களாக காணப்படுகிறார்கள் (சங்கீதம் 112:9).

நன்மைக்கான தயையுள்ளவர்: 
நீதிமான்களின் கொம்புகள் உயர்ந்தவை, அவை நன்மை மற்றும் நீதியான செயல்களைச் செய்வதற்கானதாகும் (சங்கீதம் 112:9).

வெறுப்பிற்குள்ளானவர்கள்: 
இருப்பினும், காயீன் நீதிமானான ஆபேலை வெறுத்தது போல, துன்மார்க்கர்கள் பொறாமைப்படுகிறார்கள், நீதிமான்களை வெறுக்கிறார்கள் (சங்கீதம் 112:10).

அசைக்கப்படாதவர்:
நீதிமான்கள் அசைக்கப்படமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் அசைக்க முடியாத ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் (சங்கீதம் 112:6; எபிரெயர் 12:28). நீதிமானின் நீதி என்றென்றும் நிலைத்திருக்கும் (சங்கீதம் 112:3).  

மறக்கப்படாதவர்:
தேவபக்தியுள்ள நீதிமான்கள் மக்களால் நினைவுகூரப்படுவார்கள், சில சமயங்களில் மறக்கப்படுவார்கள், இருப்பினும், தேவன் அவர்களை நினைவுகூருகிறார், அவர்களுக்கு பலன் அளிக்கிறார் (சங்கீதம் 112:6). 

வெற்றியாளர்:
நீதிமான்களுக்கு இறுதி வெற்றி உண்டு; மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்துவுக்குள் வெற்றி சிறந்தவர்கள் நீதிமான்கள் (சங்கீதம் 112:8).

நான் தேவனுக்குப் பயந்து நீதியான வாழ்க்கையை நடத்துகிறேனா?  
 

Rev. Dr. J.N. Manokaran