திருமணமான ஆண்களையும் பெண்களையும் நேர்காணல் செய்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் நோக்கம், கணவன்-மனைவி உறவில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை அறிவதாகும். ஆய்வின் முடிவு சுவாரசியமாக இருந்தாலும், அது கலாச்சார வழக்கத்தை பிரதிபலித்தது. வேதாகமக் கண்ணோட்டத்தில் திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை உறவாகும்; அதில் இருவர் ஒரே மாம்சமாகி, பிற அனைத்து உறவுகளையும் புதிதாக வரையறுக்கும் ஒரு பந்தமாகும்.
பெற்றோர்:
பொதுவாக ஆண்கள் தங்களின் தாயாருக்கு முன்னுரிமை அளிப்பதுண்டு; பெண்கள் தங்களின் தந்தையருக்கு முன்னுரிமை அளிப்பதுண்டு. சிலருக்கு, பெற்றோர் பூமியில் அவர்களின் கண்கண்ட தெய்வமாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் ‘விட்டுப் பிரிந்து இசைந்திருத்தல்’ என்ற பிரமாணத்தைப் புரிந்து கொள்ளவில்லை. தேவன் ஆதாமின் எலும்பிலிருந்து ஏவாளை உருவாக்கி அவனிடம் கொண்டு வந்தபோது, ஆதாம் பாடல் பாடினான்: “அவள் என் எலும்பிலிருந்து எடுக்கப்பட்ட எலும்பும், என் மாம்சத்திலிருந்து எடுக்கப்பட்ட மாம்சமும் ஆகிறாள்” (ஆதியாகமம் 2:21-24). ஒரு ஆண் கணவனாக ஆகும்போது, தன் பெற்றோரிடமிருந்து விலகி, மனைவியோடு ஒட்டிச் சேர வேண்டும். அதுபோல், ஒரு பெண் மனைவியாக ஆகும்போது, தன் பெற்றோரிடமிருந்து விலகி, கணவனோடு ஒட்டிச் சேர வேண்டும் (சங்கீதம் 45:10-11). பெற்றோர் தங்கள் வாழ்க்கையில் ஆற்றிய பங்களிப்பிற்காக நன்றியுணர்வு கொள்வதும், அவர்களை மதிப்பதும் (யாத்திராகமம் 20:12) மிக முக்கியம். ஆனால், பெற்றோரை மதிப்பது மனைவியையோ கணவனையோ அவமதிப்பதாக இருக்கக் கூடாது. துரதிருஷ்டவசமாக, பல கலாச்சாரங்களில் இது வழக்கமாக உள்ளது.
உடன்பிறந்தோர்:
ஒரு கணவன் தனது மனைவியிடம், “எனது சகோதர சகோதரிகளை நான் 22 ஆண்டுகளாக அறிவேன்; ஆனால், நீ நேற்று தான் வந்தாய். நான் ஏன் உனக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறினான். இது முற்றிலும் மூடத்தனம். திருமணம் என்பது உடன்படிக்கை உறவாகும், அதில் முதலாவது முன்னுரிமை வாழ்க்கைத்துணைக்கு அளிக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக இருக்கும் பிற உறவுகள், திருமண உறவுடன் ஒப்பிடும்போது குறைந்த முன்னுரிமையே பெற வேண்டும். ஆம், குடும்பத்தினரும் நண்பர்களும் முக்கியமானவர்கள் தான்; ஆனால், கணவன்-மனைவி உறவிற்கு அளிக்கப்படும் முன்னுரிமை அதைவிட உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
குழந்தைகள்:
ஒரு குழந்தை பிறந்த பின், சில தாய்மார்கள் தங்கள் வாழ்க்கையில் அந்தக் குழந்தையுடனான உறவையே முதன்மையாகக் கருதுகின்றனர். இதனால் தாய் என்ற பங்கு பெரிதாகி, மனைவி என்ற பங்கு பின்தள்ளப்படுகிறது. இது குடும்பத்திற்கே தீங்காக அமையக்கூடும். தாய் அல்லது தந்தை என்ற பங்கு, மனைவி அல்லது கணவன் என்ற பங்கிற்கு அடுத்ததாக மட்டுமே இருக்க வேண்டும்.
வாழ்க்கைத் துணை:
கணவன் அல்லது மனைவியாக இருப்பதே ஒரு கிறிஸ்தவக் குடும்ப வாழ்க்கையின் முதன்மையான அழைப்பு.
நான் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறேனா அல்லது வேதாகமத்தைப் பின்பற்றுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran