ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான ஆயத்தம்

ஒரு புதிய விசுவாசி, தமக்கு வழிகாட்டியாக இருந்த ஒரு மூத்த தேவமனிதரின் வீட்டிற்குச் சென்றார். ஒருநாள் அவர் கேட்டார்:
"ஐயா, உங்கள் வீட்டிலுள்ள அலமாரிகள், குளிர்சாதனப் பெட்டி, புத்தக அலமாரி, உடை அலமாரி, ஏன் உங்கள் பணப்பையும் கூட சில நேரங்களில் நிறைந்திருக்கும்; ஆனால் சில நாட்களில் காலியாகிவிடுகிறது. அதற்கு என்ன காரணம்?". அதற்கு அந்த தேவமனிதர் பதிலளித்தார்; "வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாத அளவிற்கு ஆசீர்வாதங்களை ஊற்றுவேன்” என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் (மல்கியா 3:10). புதிய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு, என்னிடமுள்ளவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து காலியாக்க வேண்டும். அதனால் என்னிடமுள்ளவற்றை தேவையுள்ளவர்களுக்குக் கொடுத்துவிடுகிறேன். தேவனுடைய வாக்குத்தத்தம் ஒருபோதும் பொய்யாகவில்லை.”

கடின இருதயமும் இறுகிய கையும்:
உங்கள் நடுவில் இருக்கும் ஏழைகளுக்கு இரக்கம் இல்லாத கடின இருதயமும், உதவ மறுக்கும் இறுகிய கையும் இருக்கக்கூடாது என்று தேவன் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார் (உபாகமம் 15:7–8).
வேதாகமம் போதிப்பது என்னவென்றால், கஞ்சத்தனம் வறுமைக்கு வழிவகுக்கும்; தாராள மனம் ஆசீர்வாதத்தையும் வளத்தையும் உண்டாக்கும் (நீதிமொழிகள் 11:24–25; 28:22). நன்றியற்றவர்களிடமும் தீயவர்களிடமும் தேவன் தயவாக இருக்கிறார். ஆகையால், கிறிஸ்துவின் சீஷர்களும் தங்கள் பரலோகப் பிதாவைப் போல தாராள மனமுடையவர்களாக இருக்க வேண்டும் (லூக்கா 6:35).

ஒருவரின் குப்பை, மற்றொருவரின் பொக்கிஷம்:
ஒருவருக்குப் பயனற்றதாகத் தோன்றும் பொருள், இன்னொருவரின் அத்தியாவசிய தேவையாக இருக்கலாம். பழைய மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஒருவருக்குக் குப்பையாக இருக்கலாம்; ஆனால் வசதியில்லாத ஒருவருக்கு அது மதிப்புமிக்க பொக்கிஷமாக அமையலாம்.

சீஷர்கள் தேவனுடைய பொறுப்பாளர்கள்:
தாராள மனம் என்பது கிறிஸ்தவ பொறுப்புணர்வின் (Stewardship) வெளிப்பாடாகும். தேவனுடைய அன்பு நம்மில் இருந்தால், நம்மிடமுள்ள உலகப் பொருட்களைத் தேவையுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அது வெளிப்படும் (1 யோவான் 3:17).
அப்போஸ்தலனாகிய பவுல், உழைத்து சம்பாதித்து, உழைக்க இயலாதவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கும்படி விசுவாசிகளை அறிவுறுத்துகிறார் (எபேசியர் 4:28).
உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை என்பது, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஏழைகள், விதவைகள், திக்கற்றோர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு உதவுவதில்தான் வெளிப்படுகிறது.

பெறுவதைவிட கொடுப்பதே பாக்கியம்:
"வாங்குகிறதைவிடக் கொடுக்கிறதே அதிக பாக்கியம்" என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து போதித்தார் (அப்போஸ்தலர் 20:35).
பசியுள்ளவர்களுக்கு உணவளிப்பதும், நோயாளிகளைப் பார்ப்பதும், உடையில்லாதவர்களுக்கு உடையளிப்பதும், சிறையில் இருப்பவர்களைச் சந்திப்பதும் இவை அனைத்தும் தேவனுக்கே செய்யப்படும் ஊழியங்களாகும் (மத்தேயு 25:35–40).

சிந்தனைக்காக:
மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்கான தாராளமான இருதயமும் திறந்த கையும் என்னிடம் இருக்கிறதா?

Rev. Dr. J.N. Manokaran