துக்கத்தின் மத்தியில் நிம்மதியான தூக்கம்

தாவீதின் மகன்களில் அப்சாலோம் லட்சியவாதி, அழகிய தோற்றத்துடன், தந்திரமான புத்திசாலியாகவும் இருந்தான். அவன் மக்கள் மனங்களை திருப்பினான், தாவீதின் அரியணையையும் அபகரித்தான் (2 சாமுவேல் 15–18). தாவீது துரோகம், நிராகரிப்பு மற்றும் மக்கள் விலகும் நிலையை அனுபவிக்க வேண்டியிருந்தது. அது ஒரு மிகுந்த அவமானகரமான சூழ்நிலை; ஏனெனில் மக்கள்: “தாவீதை தேவன் விட்டுவிட்டார்; அவர் இப்போது அவருக்கு உதவ மாட்டார்” என்று கூறினார்கள். அப்சாலோமின் துரோகத்தினால் தாவீது துக்கத்திலும் குழப்பத்திலும், பத்தாயிரம் பேர் தன்னைத் தேடி விரட்டியபோது கூட, வெளிகளில் ஒளிந்துகொண்டு ஓடிக் கொண்டிருந்தார். அந்நிலையிலும் தன்னுடைய எல்லா கவலைகளையும் ஆண்டவரிடம் செலுத்தினார் (1 பேதுரு 5:7). அவர் தேவனில் முழுமையாக நம்பிக்கை வைத்தார். அதனால் அந்த அசாதாரணமான சூழ்நிலையிலும் அவரால் தூங்க இயன்றது. சங்கீதம் 3-இல், தாவீது தேவனுடைய பண்புகளை அறிவிக்கிறார். அவை தான் அவருக்கு நம்பிக்கையைத் தருகின்றன. 

கேடகம்: 
பகைவர் கடுமையாகவும், நிரந்தரமாகவும் தாக்கும் நேரத்தில், பாதுகாப்பு அவசியமாகிறது. அத்தகைய நேரத்தில் தாவீது தேவனின் தெய்வீக பாதுகாப்பை நாடினான். அவர் தேவனை “கேடகமாக” வர்ணிக்கிறான். சாத்தானால் எறியப்படும் அக்கினி அம்புகள் தாவீதை காயப்படுத்த முடியாது, ஏனெனில் தேவன் அவரைச் சுற்றி முழுமையாகக் காக்கும் பரிபூரணமான பாதுகாப்பாக இருந்தார் (எபேசியர் 6:16).

பரிசுத்த மலையிலிருந்து சத்தம் கேட்டல்:
தாவீதைச் சுற்றிலும் மிகுந்த சத்தமும் குழப்பமும் இருந்தபோதிலும், தேவன் தாவீதின் ஜெபங்களை கேட்டார். அவர் அமைதியாகவும், மறைந்தும் ஜெபிக்கக்கூடியிருந்தாலும், வலியோடு, பெருமூச்சோடு ஆண்டவரை நோக்கி ஜெபிக்கத் தேர்ந்தெடுத்தார். அவர் ஜெபங்கள் வெறுமனே சொற்கள் அல்ல, ஏனெனில் தேவன் பரிசுத்த மலைவெளியிலிருந்து கேட்கிறார். தேவன் ஜெபங்களைக் கேட்பது மட்டுமல்லாமல், உதவியையும் அனுப்புகிறார் என்பதில் தாவீது நம்பிக்கை கொண்டிருந்தார் (சங்கீதம் 121:1).

இரட்சிப்பு:
தாவீது தேவனை, தமக்குப் பெருமை தருபவராகவும், தன் தலையை உயர்த்துபவராகவும் விவரிக்கிறான். மக்கள் தாவீதுக்கு தோல்வியையும், வெறுப்பையும், அவமானத்தையும் விரும்பினாலும், தேவன் அவருக்குப் கனத்தை அளிக்கிறார். அதனால் தாவீது தலையைத் தாழ்த்தாமல், உயர்த்தி நடக்க முடிந்தது. அதேபோல், 1 பேதுரு 4:14இல், பேதுருவும் விசுவாசிகளை நோக்கி நீங்கள் வேதனை, துன்புறுத்தல் ஆகியவற்றை சந்திக்கும் போது, “மகிமையின் ஆவி” அவர்கள் மேல் தங்கியிருக்கிறார் என்று எழுதுகிறார். 

சத்துருக்கள் பலமற்றவர்களாகிறார்கள்: 
பலர் எதிரியாக எழும்பும்போது, ஆண்டவரும் அந்த எதிரிகளுக்கு எதிராக எழுந்து நிற்கிறார். அவர்கள் எவ்வளவு அதிகமாக எழும்புகிறார்களோ, அவ்வளவு அதிகமாக தேவன் தம்முடைய பழிவாங்கலை சம அளவில் நிறைவேற்றுவார். தாவீது, தேவன் அந்த பகைவர்களை கன்னத்தில் அறைந்து, அவர்கள் பல்லுகளை முறிக்கும் வகையில் அவர்களைத் துவளச் செய்வார் என்று எழுதுகிறார். இதன் மூலம் அவர்கள் சக்தியற்றவர்களாகிறார்கள். அவர் தன்னை நிராகரித்த இஸ்ரவேலின் மக்களுக்கு எதிராக இல்லை, மாறாக, அவர்களுக்கே ஆசீர்வாதம் வேண்டினார் ( 2 சாமுவேல் 15:13).

தாவீது செய்தது போல் கடினமான சூழ்நிலைகளிலும் நான் கர்த்தரை நம்ப முடியுமா?

Rev. Dr. J.N. Manokaran