சுவிசேஷத்திற்கான எதிர்ப்பு

கிறிஸ்தவ விசுவாசம் சில இடங்களிலும் பிரதேசங்களிலும் ஒரு காலத்தில் வலிமையாக இருந்தது; பின்னர் அது மற்றொரு இடத்துக்கு நகர்கிறது. நிரந்தரமான கோட்டையோ, நிலையான தளமோ எங்கும் இல்லை. சமீபத்தில், ஒரு மிஷன் தலைவர் சுவிசேஷம் ஊடுருவ முடியாத ஒரு பிரதேசத்தைப் பார்வையிட்டார். பல பெரிய சுவிசேஷகரும் பரிசுத்தவானும் அந்தப் பகுதியில் உழைத்துள்ளனர். கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக பல கிறிஸ்தவ நிறுவங்களும் அங்கே உள்ளன. இருந்தும், அந்தப் பிரதேசத்தில் மிகவும் குறைந்த சீஷர்கள் மட்டுமே உள்ளனர்.

அறிவுசார்ந்த பெருமை:
 இந்தப் பிரதேசம் மனிதகுலத்திற்கு சிறந்த சிந்தனையாளர்களை அளித்துள்ளது. ஆனாலும், அவர்கள் தங்களை மிகுந்த அறிவாளிகள் எனக் கருதி, சத்தியத்தைக் கேட்க மறுக்கின்றனர். கிறிஸ்தவர்கள் அறிவில்லாதவர்கள் அல்லது முட்டாள்கள் எனக் கூட அவர்கள் அவமதிக்கின்றனர். உலகின் பார்வையில் அறிவில்லாதவர்களையும் பலவீனர்களையும் தேர்ந்தெடுத்து, அறிவாளிகளையும் வலுவானவர்களையும் வெட்கப்படுத்துகிறார் என்று தேவன் சொல்லுகிறார் (1 கொரிந்தியர் 1:27).

கலாச்சாரப் பெருமை:
 உலகம் முழுவதும் பலருக்கு, அவர்களின் கலாச்சாரம் மிகச் சிறந்தது, பிறவற்றை விட உயர்ந்தது, சில நேரங்களில் தெய்வீகமும் கூட என நினைப்பதுண்டு. எனவே, தங்கள் கலாசாரத்தின் மீது பெருமை கொள்கிறார்கள்; கலாசாரத்தை ஆராய்ந்து மதிப்பிடும் சுவிசேஷத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு, கலாச்சாரம் சுவிசேஷத்தைவிட, வேதத்தைவிட, தேவனைவிட கூட மேலானது. மேலும், சுவிசேஷம் தங்களின் பாரம்பரிய நம்பிக்கைக்கு வெளிநாட்டுச் செய்தி என அவர்கள் கருதுகின்றனர்.

பூர்விக வழிபாடு:
 பெரும்பாலான கலாச்சாரங்களில் பூர்விக வழிபாடு உள்ளது; ஆனால், இந்தக் கலாச்சாரத்தில் அது இன்னும் அதிகமாக உள்ளது. இறந்தவர்கள் தெய்வங்கள் என மதிக்கப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள், புகழப்படுகிறார்கள், சமாதானப்படுத்தப்படுகிறார்கள், வழிபடப்படுகிறார்கள். பூர்விகர்கள் நம்பியதும் சொன்னதும் புனித நூல் போல் கருதப்படுகிறது. ஆகையால், சுவிசேஷம் வழங்கும் தேவனுடைய புதிய உடன்படிக்கையை அவர்கள் நிராகரிக்கின்றனர்.

இரத்த பலி:
 இந்தக் கலாசாரத்தில் இரத்த பலி மிகவும் சாதாரணமானது. விலங்குகள் ஆராதனையிலும் ஆண்டு விழாக்களிலும் பலியிடப்படுகின்றன. சில தீவிர பக்தர்கள் தங்கள் விரல்களை அறுத்து, மனித இரத்தத்தையும் பலியாக செலுத்துகின்றனர். இப்படிப்பட்ட இரத்த பலி தான் அவர்களுக்கு சொர்க்க வாசலைத் திறக்கும் என அவர்கள் துரதிஷ்டவசமாக நம்புகின்றனர். ஆனால் விலங்குகளின் இரத்தம் பாவங்களை நீக்க முடியாது (எபிரெயர் 10:4). தேவன் தமது குமாரனாகிய கர்த்தர் இயேசுகிறிஸ்துவை அனுப்பி, தம் இரத்தத்தைச் சிந்தி பாவ நிவாரணத்தைச் செய்தார்; அவர் மரித்தார், அடக்கம் செய்யப்பட்டார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். கிறிஸ்துவின் இரத்தமே பாவங்களைப் பூரணமாகச் சுத்திகரிக்கிறது (1 யோவான் 1:7).

கிறிஸ்துவைத் தவிர இரட்சிப்புக்கான வேறு வழி எதுவும் இல்லை என்பதை நான் உண்மையிலேயே உணர்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran