புதிய முயற்சியைத் தொடங்குவதோ, அல்லது புதிய ஆண்டிற்குள் அடியெடுத்து வைப்பதோ குறித்து, Jurie Kriel அவர்கள் Hitting the Ball You Cannot See என்ற தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். கர்த்தரின் சீஷர்கள் முன்னோடியான (pioneering) ஊழியங்களை செய்ய, விசுவாசத்தோடும் வேதாகம அடிப்படையிலான அறிவுடனும் (discernment) செயல்பட வேண்டும்
(எபிரெயர் 11:1). அவர் எதிர்காலத்தைப் பற்றி ஐந்து விதமான கண்ணோட்டங்களை (Cone of the Future) விளக்குகிறார். சீஷர்கள் சுறுசுறுப்பாக (proactive) செயல்பட்டு, விரும்பத்தக்க எதிர்காலத்தை உருவாக்க அழைக்கப்படுகிறார்கள்.
1. சாத்தியமானது (Possible) (எதிர்கால அறிவு – “நடக்கலாம்”)
இந்த அடுக்கில், கோட்பாட்டில் நிகழக்கூடிய அனைத்தும் அடங்கும். ஆனால் அவை மனித கற்பனை மற்றும் இயற்பியல் விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டவை. புதிய யோசனைகள், தொழில்நுட்பங்கள், சமூக மாற்றங்கள் இன்னும் வளர்ச்சி நிலையிலோ, ஆரம்ப நிலையில் உள்ளவையாகவோ இருக்கலாம். அரசியல் சூழ்நிலைகளும் எதிர்பாராத விதமாக மாறக்கூடும்.
*2. நியாயமான சாத்தியம் (Plausible)
(தற்போதைய அறிவு – “நடக்கக்கூடும்”)*
தற்போதைய உலகைப் பற்றிய நமது புரிதலின் அடிப்படையில் நிகழக்கூடியவை இவை. இவை தர்க்க ரீதியாக சாத்தியமானவையும், நடைமுறைக்கு ஏற்றவையும் ஆகும். பொதுவாக மக்கள் புரிந்து கொள்ளக்கூடியவையாகவும், சமூக ஊடகங்களில் கூட பரவக்கூடியவையாகவும் இருக்கும்.
*3. நிகழக்கூடியது (Probable)
(தற்போதைய போக்குகள் – “நடக்கும் வாய்ப்பு அதிகம்”)*
தற்போதைய போக்குகள் தடையின்றி தொடரும்போது, எதிர்காலத்தில் உருவாகும் வடிவங்களையும் திசைகளையும் அடையாளம் காண முடியும். உதாரணமாக, தினசரி வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பயன்படுத்தப்படுவது ஒரு நிகழக்கூடிய எதிர்காலமாகும். அதனுடன் பயத்தை தூண்டும் கருத்துகளும், ஊகங்களும் தோன்றும். ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற விளக்கங்களை வழங்குவார்கள்.
*4. முன்னறிவிக்கப்பட்டது (Projected)
(இயல்பான கணிப்பு – “மிகவும் நிகழக்கூடியது”)*
போக்குகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும்போது உருவாகும் இயல்பான எதிர்காலமே இது. தற்போதுள்ள தகவல்கள், அறிவு மற்றும் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், சமநிலையான கணிப்பை செய்ய முடியும். இது கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட நியாயமான விளக்கமாகும்.
5. விரும்பத்தக்கது (Preferable)
(விரும்பப்படும் எதிர்காலம் – “நடக்க வேண்டும்”)*
இது கர்த்தரின் சீஷர்கள் விரும்பும் மற்றும் நாடும் எதிர்காலம். இது வெறும் கணிப்பல்ல; செயலில் வெளிப்படும் ஆசையும் இலக்கும் ஆகும். சீஷர்கள் உழைத்து உருவாக்க விரும்பும் சிறந்த விளைவையே இது குறிக்கிறது.
கிறிஸ்தவ தலைவர்கள் “எதிர்கால காரியங்களை” (Cone of the Future) தெளிவாக வழிநடத்த வேண்டும். நிகழக்கூடிய மற்றும் முன்னறிவிக்கப்பட்ட முடிவுகளுக்கு வெறும் எதிர்வினை காட்டாமல், விரும்பத்தக்க எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு நகர வேண்டும்.
இது, சர்வ அதிகாரம் கொண்ட தேவனில் விசுவாசம் வைத்து, அவருடைய சித்தத்தை அறிந்து, காலங்களை விவேகத்தோடு புரிந்து கொண்டு, தைரியமான அடிகளை எடுப்பதன் மூலம் சாத்தியமாகும்.
நான் விசுவாசத்தினால், விரும்பத்தக்க மற்றும் தேவன் விரும்பும் எதிர்காலத்தை நோக்கி உழைக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran