சாதனைக்கான அடிமைத்தனம்

பலவிதமான அடிமைத்தனங்கள் உள்ளன: மதுபானம், போதைப்பொருள், ஆபாசம், திறன்பேசி போன்றவற்றுக்கு அடிமையாவது நாம் அறிந்ததே! அதுபோல, சாதனைகளுக்கே அடிமையாகும் நிலையும் சிலரிடம் காணப்படுகிறது. இதனை உளவியல் மற்றும் நரம்பியல் அடிப்படையில் ஆராயப்படும் ஒரு சிக்கலாகக் கருதுகின்றனர்.
இத்தகைய நிலையில் இருப்பவர், தன்னுடைய சுயமதிப்பை (Self-worth) தான் செய்த சாதனைகள், பெற்ற வெற்றிகள், பதவி, புகழ் போன்ற வெளிப்புற அடைவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கிறார். ஒவ்வொரு சாதனையும் மூளையில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஏற்படுத்தும் டோபமைன் (Dopamine) சுரப்பை அதிகரிக்கலாம். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நிலைத்திருக்காது. விரைவிலேயே அது குறைந்துவிடுவதால், இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற ஏக்கம் உருவாகிறது. இறுதியில், இது மனச்சோர்வு, உடல்–மன சோர்வு (Burnout), உறவுகளில் விரிசல், தூக்கமின்மை, தீவிரமான மன அழுத்தம், ஏன் நரம்பு தளர்ச்சி போன்ற நிலைகளுக்கும் வழிவகுக்கக்கூடும்.

சுயமதிப்பு (Self-worth):
ஒரு மனிதன் என்ன செய்கிறான் அல்லது எவ்வளவு சாதிக்கிறான் என்பதனால் அவனுடைய உண்மையான சுயமதிப்பும் கண்ணியமும் தீர்மானிக்கப்படுவதில்லை.
மனிதனுடைய உண்மையான கண்ணியம், அவன் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவன் என்பதில் உள்ளது. “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்” (ஆதியாகமம் 1:27). 
மேலும், தன் பாவங்களை விட்டு மனந்திரும்பி, விசுவாசத்தினால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்கிறவன், ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளையாகும் சிலாக்கியத்தைப் பெறுகிறான். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12). இரட்சிப்பை நம்முடைய சொந்த முயற்சிகளினாலோ, சாதனைகளினாலோ, நற்செயல்களினாலோ சம்பாதிக்க முடியாது. அது தேவனுடைய கிருபையினால் கிடைக்கும் ஈவு.

எப்போதும் போதாது என்ற மனநிலை (Never-enough syndrome):
சிலருக்கு வாழ்க்கையில் எதிலும் திருப்தி ஏற்படுவதில்லை. “இன்னும் ஏதோ ஒன்று குறைவாக இருக்கிறது” என்ற உணர்வு தொடர்ந்து அவர்களை ஆட்கொள்கிறது. புகழ், செல்வம், அதிகாரம், பதவி, பிறரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், உடல் அல்லது அறிவாற்றலை நிரூபிக்கும் சாதனைகள், திறமைகளை வெளிப்படுத்துதல் இவற்றில் ஏதாவது ஒன்றை அதிகரிக்க வேண்டும்; முடிந்தால் பல மடங்கு பெருக்க வேண்டும் என்ற ஆசை உருவாகிறது. இவ்வாறு “இன்னும் வேண்டும்” என்ற தீராத ஆசை, மனிதனை தொடர்ந்து சாதனைகளைத் தேடும் வாழ்க்கைக்குள் தள்ளுகிறது.

விடுதலை பெறும் வழி:
சாதனைக்கான அளவில்லாத ஏக்கத்திலிருந்து விடுதலை பெற விரும்புகிறவர்கள் பின்வரும் ஆவிக்குரிய ஒழுக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்:
முதலாவது,  நன்றியுள்ள இருதயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். எல்லாக் காரியங்களிலும் தேவனுக்கு நன்றி செலுத்துவது ஒரு ஆவிக்குரிய ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:18). தேவன் நமக்குச் செய்த நன்மைகளைத் தினமும் எண்ணிப் பார்த்து, அவருக்கு நன்றி செலுத்துவதை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக்க வேண்டும்.
இரண்டாவது,  தேவனுடைய அழைப்பையும் நோக்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, அவரவருடைய திறமை, ஆற்றல், வரம்புகள் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ற பணிகளை ஒப்படைக்கிறார். எனவே, பிறருடைய சாதனைகளோடு நம்முடைய வாழ்க்கையை ஒப்பிடாமல், தேவன் நமக்குக் கொடுத்த அழைப்பில் உண்மையுடன் நிலைத்திருக்க வேண்டும்.
மூன்றாவது, தேவபக்தியோடு கூடிய மனநிறைவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
“போதும் என்கிற  மனதுடன் கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” (1 தீமோத்தேயு 6:6).  மனநிறைவு இல்லாத இடத்தில் பேராசை ஆதிக்கம் செலுத்துகிறது. அது இன்னும் அதிகமாகப் பெற வேண்டும், இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது.
நான்காவது,  தன்னைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தைப் பெற வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல், ஒருவர் தன்னைப் பற்றி தகுதிக்கு மிஞ்சிப் பெருமையாக எண்ணக்கூடாது என்று அறிவுறுத்துகிறார். “தன்னைப்பற்றி எண்ணவேண்டியதற்கு அதிகமாக எண்ணாமல், தெளிந்த புத்தியுள்ளவனாயிருக்கும்படி…” (ரோமர் 12:3).  தேவன் நமக்குக் கொடுத்த அழைப்பையும், அவர் நம்மை வைத்திருக்கும் நிலையையும் ஏற்றுக்கொண்டு, அதில் மகிழ்ச்சியுடன் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.
ஐந்தாவது,  தேவனுடைய கிருபையைச் சார்ந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நம்முடைய மதிப்பு நம்முடைய சாதனைகளில் இல்லை; தேவனுடைய கிருபையில் உள்ளது.
தேவனுடைய கிருபை ஒருபோதும் வற்றிப்போவதில்லை. அவரை நேசித்து, அவருக்குச் சேவை செய்கிறவர்களுக்கு அவர் தம்முடைய கிருபையை இலவசமாக அருளுகிறார். எனவே, “நான் இன்னும் என்ன சாதிக்க வேண்டும்?” என்பதற்குப் பதிலாக, “கர்த்தாவே, உமது கிருபையினால் இன்று நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆறாவது, உண்மையான உயர்ந்த சாதனை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
கிறிஸ்துவின் சீஷனுடைய உயர்ந்த சாதனை என்பது உலகத்தின் பார்வையில் பெரிய பதவியை அடைவதோ, புகழைப் பெறுவதோ, செல்வத்தைச் சேர்ப்பதோ அல்ல.
விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருப்பது, பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்வது, தேவனுக்கு உண்மையுடன் ஊழியம் செய்வது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக எப்போதும் ஆயத்தமாக இருப்பது; இதுவே சீஷனுடைய உண்மையான வெற்றியாகும்.

நான் சாதனைக்கு அடிமையாகிவிட்டேனா?

Rev. Dr. J.N. Manokaran