மனிதர்களுக்கு கீழ்ப்படிதல் கடினமானது; பெரும்பாலானவர்களுக்கு அது விருப்பமற்ற ஒன்றாகும். ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்பது ஒரு சிறப்பும், மனிதனின் கடமையும் ஆகும். யோனாவின் வாழ்க்கை வரலாற்று நூலில், ஒரு மீன், அதாவது, ஒரு திமிங்கிலம் கீழ்ப்படியும் நிகழ்வு, சீஷர்கள் பின்பற்றத்தக்க அதிசயமான எடுத்துக்காட்டாக உள்ளது. அந்த மீனின் தன்னிச்சையான, துல்லியமான, முழுமையான கீழ்ப்படிதல் மனித புத்திக்குப் புரியாததாகும். எனினும் அது ஆச்சரியமல்ல, ஏனெனில் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் தேவனின் ஆட்சிக்குள் உள்ளது. ஆண்டவரின் ஒவ்வொரு சீஷரும் அந்த திமிங்கிலம் போல் கீழ்ப்படிந்தால், உலகமே மாற்றப்பட்டு ஆசீர்வதிக்கப்படும்.
கப்பலின் அருகாமை:
பலத்த காற்றால் சுழற்றப்பட்டு கொண்டிருந்த கப்பலின் அருகே செல்வதற்கு தேவன் அந்தத் திமிங்கிலத்துக்கு ஆணையிட்டார் (யோனா 1:17). கீழ்ப்படியாத தீர்க்கதரிசியை கடலில் எறிய வேண்டுமென கப்பல் தலைவர் மற்றும் மற்றவர்கள் மனத்துக்கு விருப்பமின்றி முடிவு செய்த அச்சரியான நேரத்தில், அந்தத் திமிங்கிலம் சரியான இடத்திலேயே இருந்தது.
விழுங்குதல்:
யோனாவை விழுங்கும்படி தேவன் அந்த மீனுக்கு ஆணையிட்டார். கீழ்ப்படியும் திமிங்கிலம் யோனாவை விழுங்கியது. அது கடிக்கவில்லை; அதனால் அவர் காயமடையவில்லை. அதற்குப் பதிலாக அது மென்மையாக நடந்துகொண்டது. யோனாவுக்கு எவ்வித காயமும், சிராய்ப்பும் ஏற்படவில்லை. மிருகங்களுக்கு இயல்பான அவிவேகமான, கொடூரமான இயல்பு வெளிப்படவில்லை. யோனா வயிற்றுக்குள் சென்றிருந்தாலும், அங்கு செரிமான சாறு சுரந்து அவரை கரைத்துவிடவில்லை. மூன்று நாட்கள் யோனாவை தன் காவலில் வைத்திருக்க வேண்டியிருந்தது. இது குற்றவாளிகளை நீதித்துறையின் காவலில் வைக்கும் நீதிமுறை நடைமுறைக்கு ஒப்பானதாகும்.
நினிவே கரைகள்:
தேவன் கட்டளையிட்டபடியே அந்த மீன் நினிவேயின் கரைகளுக்குச் சென்று நீந்தியது. அது மத்தியதரைக் கடலில் நோக்கமின்றி அலைந்து திரிந்ததல்ல. தன் இலக்கை அது தேர்ந்தெடுக்கவில்லை; ஆண்டவரே தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அதைத் தேர்ந்தெடுத்தார்.
வாந்தி எடுத்தல்:
யோனாவின் ஜெபங்களையும், தேவனுடைய சித்தத்தை செய்யத் தயங்காமல் ஒப்புக்கொண்ட மனநிலையையும் தேவன் ஏற்றுக்கொண்டார்; அவனது உயிரையும் காப்பாற்றினார். யோனாவை கரைக்குச்சென்று வாந்தியெடுத்து விடும்படி தேவன் அந்த மீனுக்கு ஆணையிட்டார் (யோனா 2:10). ஆண்டவர் கொடுத்த பணி நிறைவேற்றப்பட்டதால், அந்த மீனுக்கு நிம்மதியும் ஆனந்தமும் ஏற்பட்டது. ஒருவேளை யோனாவுக்கு ஒரு நல்ல குளியலும் புதிய உடையும் தேவையாக இருந்திருக்கலாம். நிச்சயமாக, தேவன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஆகவே, யோனா தான் அழைக்கப்பட்ட ஊழியத்தைச் செய்ய முடிந்தது.
நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிதலுள்ள ஒரு ஒழுங்குள்ள சீஷனா?
Rev. Dr. J.N. Manokaran