ஒரு உணவகம் இவ்வாறு விளம்பரம் செய்கிறது: “உங்களுக்கு இன்னும் பெரிய வாய் தேவைப்படும்!” அவர்கள் தயாரிக்கும் உணவு மிகவும் சுவையாக இருக்கும்; ஆரோக்கியமானதாக இல்லாவிட்டாலும், அதைச் சாப்பிடுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய வாய் தேவைப்படும் என்பதே அந்த விளம்பரத்தின் நகைச்சுவையான கருத்து. ஆனால், தேவனுடைய மக்களிடம் வேதாகமம் இவ்வாறு கூறுகிறது; “உன் வாயை விரிவாய்த் திற; நான் அதை நிரப்புவேன்” (சங்கீதம் 81:10). இந்தச் சங்கீதத்தில், இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் தங்களுடைய இரட்சகராகவும், பராமரிப்பவராகவும், போஷிப்பவராகவும் இருந்ததை நினைவுபடுத்துகிறார்.
பெரிய காரியங்களும் உயர்ந்த எதிர்பார்ப்புகளும்:
தேவனுடைய திட்டத்திலும் நோக்கத்திலும் பெரிய காரியங்களை எதிர்பார்க்கவும், பெரிய காரியங்களுக்காக ஜெபிக்கவும் சங்கீதக்காரன் தேவனுடைய மக்களை ஊக்குவிக்கிறார். வில்லியம் கேரி கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள்;
“தேவனுக்காகப் பெரிய காரியங்களை முயற்சி செய்; தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பார்”. தமது பிள்ளைகள் தம்மிடம் பெரிய காரியங்களைக் கேட்பதில் தேவன் பிரியப்படுகிறார். ஆனால் ஆச்சரியமான விதமாக, அநேக விசுவாசிகளின் ஜெப விண்ணப்பங்கள் மிகவும் சிறியதாகவும் குறைவானதாகவும் இருக்கின்றன. விசுவாசமும், தைரியமும், கர்த்தருக்காக மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இல்லாதபோது, நம்முடைய ஜெபங்களும் அற்பமானவையாகிவிடுகின்றன.
தேவன் நமக்குக் கொடுத்த அழைப்பும், அவருடைய ராஜ்யத்திற்கான நோக்கமும் பெரியதாக இருக்கும்போது, நமது ஜெபங்களும் அதற்கேற்றவாறு விசாலமாக இருக்க வேண்டும்.
வாயை விரிவாய்த் திற:
கூட்டில் இருக்கும் குஞ்சுப் பறவைகள், தாய் பறவை தொலைதூரத்திலிருந்து உணவைக் கொண்டு வரும்போது, தங்கள் வாய்களை அகலமாகத் திறக்கின்றன. தாய்ப் பறவை தங்களுக்கு உணவைக் கொண்டுவரும் என்றும், தங்களுடைய தேவையை நிறைவேற்றும் என்றும் அவை முழுமையாக நம்புகின்றன.
அதுபோல, விசுவாசியின் வாய் தேவனிடம் மட்டும் திறக்கப்படக்கூடாது. அது நன்றியுணர்வை வெளிப்படுத்தவும், துதிக்கவும், ஆராதிக்கவும் திறக்கப்பட வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல்;
“எல்லாவற்றிற்கும், எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள்” என்று அறிவுறுத்துகிறார் (1 தெசலோனிக்கேயர் 5:18). எனவே, தேவனிடம் நமது வாயைத் திறப்பது என்பது நமது தேவைகளை மட்டும் பட்டியலிடுவது அல்ல. அது அவர்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய நன்மையை அறிக்கையிட்டு, அவரைத் துதித்து, ஆராதிப்பதுமாகும்.
நிரப்பப்படுதல்:
மனிதனுடைய ஆழமான உள்ளார்ந்த ஏக்கங்களையும் தேவன் திருப்திப்படுத்துகிறார். இது நமது அன்றாட உடல் மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பற்றியது மட்டுமல்ல. ஆம், நாம் தேவனைச் சார்ந்து வாழ வேண்டும் என்றும், “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்றும் ஜெபிக்கும்படி கர்த்தர் கற்றுக்கொடுத்தார் (மத்தேயு 6:11). “ஆகாரம்” என்பது நாம் உயிர்வாழவும், வாழவும், வளரவும் தேவையான மனித மற்றும் பூமிக்குரிய தேவைகளைக் குறிக்கிறது. ஆனால் அதைவிட மேலான ஒரு கொடையை அதாவது அவரையே நமக்குத் தருகிறார்; இயேசு கிறிஸ்து; “நானே ஜீவ அப்பம்” என்றார் (யோவான் 6:35).
வானத்திலிருந்து வந்த மன்னாவைப் போல, கிறிஸ்துவே நமது ஆத்துமாவுக்கு உண்மையான உணவாக இருக்கிறார். விசுவாசிகள் பரிசுத்த இராப்போஜனத்தில் பங்கேற்கும்போது, கிறிஸ்துவே ஜீவ அப்பம் என்பதையும், அவரிலேயே நமக்கு நித்திய ஜீவன் உண்டு என்பதையும் நினைவுகூருகிறோம்.
உலகத்தின் பொருட்கள் நமது வெளிப்புறத் தேவைகளை நிறைவேற்றலாம்; ஆனால் கிறிஸ்து மட்டுமே நமது ஆத்துமாவின் ஆழமான பசியைத் தீர்க்க முடியும்.
வாக்குத்தத்தம்:
தேவனுடைய வாக்குத்தத்தம் நன்மையான காரியங்களுக்கான அவருடைய பரிபூரண ஏற்பாட்டை வெளிப்படுத்துகிறது. தேவன் நல்லவர்; அவர் கொடுக்கும் வரங்களும் நல்லவை, மகத்தானவை. அவருடைய பராமரிப்பு என்பது உடல் மற்றும் பொருள் தேவைகளை மட்டும் சந்திப்பதல்ல. அது நமது உடல், பொருளாதாரம், உணர்வுகள், மனம் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய பரிபூரணமான, இரக்கமுள்ள பராமரிப்பாகும்.
தேவன் அளிக்க விரும்பும் மகத்தான ஆசீர்வாதங்களையும், அவருடைய பரிபூரண ஏற்பாட்டையும் பெற்றுக்கொள்ள நான் என் வாயை விசுவாசத்தோடு போதுமான அளவு விரிவாய்த் திறக்கிறேனா? சிந்திப்போம்.
Rev. Dr. J.N. Manokaran