ஒரு வயதான மனிதர் தனது தோட்டத்தில் ஒரு ஆடும் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் ஒரு வயதான நாய் அமர்ந்திருந்தது, மரப்பலகையின் மீது இருந்த ஆணி குத்திக் கொண்டிருந்ததால் அந்த நாய் வலியால் முனகிக் கொண்டிருந்தது. ஆனாலும் அது அங்கிருந்து நகரவில்லை. அப்போது அந்த வீட்டிற்கு வந்த விருந்தினர், நாய் ஏன் நகரவில்லை என்று முதியவரிடம் கேட்டார். அதற்கு அவர், ஏனென்றால், அது நகரும் அளவுக்கு போதுமான வலியில்லை போலும் என்றார். ஆம், சில சமயங்களில், தேவ பிள்ளைகள் கூட தேவனின் திட்டத்தையும் நோக்கங்களையும் உணரும் வகையில் தேவன் வலி அதிகரிப்பதை அனுமதிக்க வேண்டும்.
தன்னார்வமாகச் செல்வது:
உயிர்த்தெழுந்த கர்த்தர் சுமார் நாற்பது நாட்கள் பலருக்குத் தோன்றினார். பின்னர் அவர் தம்முடைய சீஷர்களிடம் தேவ வல்லமையால் நிரப்பப்படுவதற்காக எருசலேமில் காத்திருக்கச் சொன்னார். “பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவார். வரும்போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். நீங்கள் எனது சாட்சிகளாக இருப்பீர்கள். மக்களுக்கு என்னைப்பற்றிக் கூறுவீர்கள். முதலில் எருசலேமின் மக்களுக்குக் கூறுவீர்கள். பின் யூதேயா முழுவதும். சமாரியாவிலும், உலகத்தின் எல்லாப் பகுதியிலும் நீங்கள் மக்களுக்குக் கூறுவீர்கள்” என்றார்” (அப்போஸ்தலர் 1:8). பெந்தெகொஸ்தே நாளில், அவர்கள் எருசலேமில் சாட்சி கொடுத்தார்கள், மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப்போஸ்தலர் 2:41). அவர்கள் எருசலேமை தங்கள் போதனையால் நிரப்பியதாக பிரதான ஆசாரியர் கூட சாட்சி கொடுத்தார் (அப்போஸ்தலர் 5:28). பின்பு அப்போஸ்தலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், சவுக்கால் அடிக்கப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர். ஆனாலும், அவர்கள் யூதேயா அல்லது சமாரியாவை விட்டு அடுத்த இடங்களுக்கு செல்லவில்லை. ஆம், யூதேயாவிலிருந்து மக்கள் சுவிசேஷத்தைக் கேட்டு குணமடைய எருசலேமுக்கு திரண்டனர் (அப்போஸ்தலர் 5:15). அப்போதும் கூட, அப்போஸ்தலர்கள் அவர்களிடம் செல்லவில்லை, அவர்கள் அங்கேயே இருந்தனர்.
விருப்பமின்றிச் செல்வது:
சங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட உபத்திரவங்கள் அப்போஸ்தலர்களை அசைக்க போதுமானதாக இல்லை. ஸ்தேவானின் இரத்த சாட்சி மரணம் நடந்தது. பின்னர் தேவன் உபத்திரவத்தை அதிகரிக்க அனுமதித்தார், சீஷர்கள் எல்லா திசைகளிலும் சிதறடிக்கப்பட்டனர். சீஷர்கள் எங்கு சென்றாலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள் (அப்போஸ்தலர் 8:1). மூப்பர்களில் ஒருவரான பிலிப்பு சமாரியாவுக்கு நற்செய்தியை எடுத்துச் சென்றார் (அப்போஸ்தலர் 8:5). பிலிப்பு கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததால், தேவன் அவரை எத்தியோப்பிய மந்திரியுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள வழிநடத்தினார், ஒருவேளை சுவிசேஷத்தைக் கேட்ட முதல் தேவ பக்தியுள்ள புறஜாதி இவராக இருக்கலாம் (அப்போஸ்தலர் 8:26-40).
உலகளாவிய பணிகள்:
கிறிஸ்தவர்கள், திருச்சபைகள், போதகர்கள் மற்றும் அருட்பணி தலைவர்களை உலகிற்கு சுவிசேஷம் செய்ய தேவன் மேலும் முன்னேறத் தூண்ட வேண்டும். சில நேரங்களில், உபத்திரவம் என்பது கர்த்தர் பயன்படுத்தும் ஒரு கருவியாகும்.
நான் தானாக முன்வந்து சுவிசேஷப்பணி செய்கிறேனா அல்லது விருப்பமின்றி செய்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran