ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியில் வர்ணனையாளர், ஒரு அணியின் முக்கிய வீரர் காயமடைந்திருந்தாலும் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதாகக் கூறினார். தனது அணியின் நலன், வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்காக அவர் வலியைப் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் போராடினார்.
இதேபோல், தேவனுடைய ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் பலரும் உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வேதனை, துக்கம், சோதனைகள் இருந்தபோதிலும், சோர்வில்லாமல் உழைத்து, மகிழ்ச்சியுடன் பிறருக்கு ஊழியம் செய்கிறார்கள். அவர்களுக்குச் சொந்த வாழ்க்கையில் நோய், பலவீனம், வழிதவறிய பிள்ளைகள், புரிந்துகொள்ளாத வாழ்க்கைத்துணை, ஒத்துழைக்காத தலைமை போன்ற சுமைகள் இருந்தாலும், தேவனுடைய பணியைத் தொடர்ந்து செய்கிறார்கள்.
வேதனையிலிருந்து மிகுதியான ஆசீர்வாதம்:
சங்கீதக்காரன் இதை அழகாக விவரிக்கிறான்; "தேவனே, நீர் எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். வலையில் அகப்படுத்தினீர்; எங்கள் முதுகின்மேல் பாரமான சுமையை ஏற்றினீர். மனிதர்கள் எங்கள் தலைமேல் ஏறிச் செல்லும்படி செய்தீர்; நாங்கள் தீயையும் தண்ணீரையையும் கடந்து வந்தோம்; ஆனாலும் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்குக் கொண்டுவந்தீர்" (சங்கீதம் 66:10–12).
சிறிதளவு வேதனை:
உண்மையுள்ள கிறிஸ்தவ ஊழியர்களுக்கு அவர்களுக்காக ஜெபிக்கும் நண்பர்கள் இருக்கலாம்; உற்சாகப்படுத்தும் விசுவாசிகள் இருக்கலாம்; தேவைக்கேற்ற பொருளாதார உதவி கிடைக்கலாம்; பலவீனங்களில் தேவனுடைய கிருபையும் இருக்கலாம். இருந்தபோதிலும், அவர்களுடைய இருதயத்தில் ஒரு சிறிய காயம் அல்லது வலி இருக்கவே செய்கிறது.
பரிசுத்தமாக்கும் தேவனுடைய கருவி:
அந்தக் காயம் அல்லது "முள்ளே" ஒருவரை பரிசுத்தப்படுத்துவதற்கு தேவன் பயன்படுத்தும் கருவியாக இருக்கலாம். அது மனிதனை தன்னையும், மற்றவர்களையும் மட்டுமே நோக்காமல், தேவனை நோக்கிப் பார்ப்பதற்குக் கற்றுக்கொடுக்கிறது. வேதனை என்பது ஒரு உணர்வு மட்டுமே. ஆனால் கிறிஸ்துவின் சீஷன் உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல, தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தின் அடிப்படையில் வாழ்கிறான். பரிசுத்த வேதாகமம் மனித பலவீனங்களின் நடுவிலும் வாக்குத்தத்தம், பெலன், வழிநடத்துதல், ஆறுதல் ஆகியவற்றை வழங்குகிறது.
மீண்டு எழும் மன உறுதி:
தேவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் அசைக்க முடியாத மன உறுதியுடையவர்கள். அவர்கள் பிங்-பாங் (ping-pong) பந்தைப் போன்றவர்கள். எவ்வளவு வலிமையாகத் தாக்கப்பட்டாலும், அதே உற்சாகத்தோடு மீண்டும் எழுந்து முன்னேறுகிறார்கள்.
அன்பு கலந்த ஆறுதல் ஊழியம்:
தேவன் உடைந்த இருதயமுள்ளவர்களையே பிறருக்கு ஆறுதலாகப் பயன்படுத்துகிறார். அவர்கள் பிறரின் வேதனையை உணர்ந்து, அவர்களுக்காக உருக்கத்தோடு ஜெபிக்க முடியும். தங்களுடைய காயம் குணமாக வேண்டும் என்பதையே முதன்மையாக நாடாமல், தேவனுடைய வல்லமையை நம்பி, அவர் அளிக்கும் கிருபையால் தொடர்ந்து ஊழியம் செய்கிறார்கள்.
சிந்தனைக்காக:
நான் காயமடைந்தபோது, ஊழியத்திலிருந்து விலகி ஓய்வு பெறுகிறேனா? அல்லது தேவனுடைய கிருபையில் புதுப்பிக்கப்பட்டு, இன்னும் அதிக வைராக்கியத்தோடு அவருக்காக ஊழியம் செய்யத் தயாராகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran