2008 ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஒரு அழகான சிறுமி இனிமையான பாடலைப் பாடினார். பின்னர் ஒரு செய்தித்தாள் அந்தச் சிறுமி உண்மையில் பாடவில்லை, வெறுமனே உதடு ஒத்திசைவு தான் அளித்தாள் என்றும் மேடைக்கு பின்னால் இருந்த இன்னொரு சிறுமி தான் பாடினார் என வெளிப்படுத்தியது; மேலும் அப்பெண் ஈர்க்கும் படியாக இல்லாததால் வெளியே காட்டவில்லை எனவும்; மற்றும் மேடையில் பாடியவருக்கு “களங்கமற்ற உருவம்” இருப்பதால் அவரைத் தேர்ந்தெடுத்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
களங்கமற்ற உருவம் – உலகத்தின் பார்வை:
உலகம் வெளிப்புற அழகை மதித்து, குறையற்ற உடல் அமைப்பை கொண்டவர்களை “களங்கமற்றவர்” என போற்றுகிறது. அவர்கள் புகழ், செல்வம், பல சாதனைகள் போன்றவற்றை அடைகிறார்கள். உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள், அழகு சாதனப் பொருட்கள், மேக்கப் பொருட்கள் ஆகியவற்றின் பெரும் வர்த்தகம், உலகம் வெளிப்புற அழகில் மூழ்கியுள்ளது என்பதற்குச் சாட்சி.
அனைத்தும் குறைபாடுடையவை:
ஆனால் வேதாகமம் இப்படியாக கூறுகிறது; அனைவரும் ஆவிக்குரிய ரீதியாக குறையுடையவர்கள். “அனைவரும் பாவம் செய்தார்கள்; தேவனுடைய மகிமைக்கு ஏற்றவர்களல்லர்” (ரோமர் 3:23). யாரும் விதிவிலக்கு அல்ல; அவர்கள் உடல் ரீதியாக அழகாக இருந்தாலும், ஆவிக்குரிய ரீதியில் கண்மூடர்களாகவும், பாவங்களில் மரித்தவர்களாகவும் உள்ளனர் (2 கொரிந்தியர் 4:4; எபேசியர் 2:1). பலர் பரிசேயர் போல் வெளியில் சுத்தமாகத் தோன்றினாலும், உள்ளே அசுத்தம் நிறைந்தவர்களாக (வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக) இருக்கிறார்கள் என்று ஆண்டவர் இயேசு கண்டனம் செய்தார் (மத்தேயு 23:27).
அவமதிப்பு:
இந்தியாவின் ஒரு கிராமத்தில் நிறம் கறுத்த ஒரு இளம்பெண் ஆண்டவரை ஏற்றுக்கொண்டார். அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அதிருப்தியடைந்து அவளை கிண்டல் செய்தார்கள்: “நீ கறுப்பாக இருக்கிறாய்; உன்னை யார் திருமணம் செய்வார்கள்?” அந்த இளம்பெண் மென்மையாகப் பதிலளித்தாள்: “என்னைப் போன்ற கறுப்பு, அழகில்லாத ஒருவரை தேவன் நேசிக்கிறார் என்பது அதிசயமல்லவா? என் பாவங்களுக்காக தேவனுடைய குமாரன் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்தார்.”
இருதயம்:
மனிதர் வெளிப்புறத்தை மட்டுமே பார்க்கிறார்கள்; ஆனால் தேவன் இருதயத்தைப் பார்க்கிறார். பெற்றோரின் அளவுகோலின்படி தாவீது தகுதியற்றவன்; மறக்கப்பட்டவன். ஆனால் சாமுவேல் தொடர்ந்து கேட்டபோது, தாவீதை அழைத்து வந்தார்கள்; தேவன் அவரை அபிஷேகம் செய்யச் சொன்னார் (1 சாமுவேல் 16:7). ஆம், “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனைக் காண்பார்கள்” (மத்தேயு 5:8).
கண்ணியம்:
மனிதனை தேவன் தம்முடைய சாயலில் படைத்தார்; அதுவே ஒவ்வொரு மனிதரின் மதிப்பையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்துகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அனைவருக்காகச் சிலுவையில் மரித்தார்; அதுவே அவருடைய அன்பின் உச்சம். அவரை ஏற்றுக்கொள்ளும் அனைவரும் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகளாகி, தேவ குடும்பத்தின் குறையற்ற நீதிமான்களாகிறார்கள் (யோவான் 1:12).
என் வாழ்க்கை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் ஒத்திசைக்கப்பட்டதா?
Rev. Dr. J.N. Manokaran