ஜார்ஜ் விஷார்ட் 17ஆம் நூற்றாண்டில் எடின்பர்க்கில் ஆயராக இருந்தவர். இவர் சுவிசேஷத்தை பிரசங்கித்ததற்காக மரணதண்டனைக்கு தீர்ப்பளிக்கப்பட்டார். மரணத்துக்கு முன் கடைசி ஆசையை கேட்பது, அவருக்காக இசைக்க அல்லது பாட ஒரு சங்கீதத்தைத் தேர்வு செய்யும் மரபும் இருந்தது. அவர், மிக நீண்ட சங்கீதமான சங்கீதம் 119-ஐ தேர்ந்தெடுத்தார். அந்த சங்கீதம் பாடப்பட்டுக் கொண்டிருந்தபோது, மூன்றில் இரண்டு பாகங்கள் முடிவடைந்ததும், அரசாணை வர, அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. இதனால், அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது.
உறங்கிவிடுதல்:
சிலர் இந்த சங்கீதத்தைப் படிக்கும்போது தூக்கம் வந்து உறங்கிவிடுகிறார்கள் அல்லது சலிப்படைகிறார்கள், ஏனெனில் இது 22 பகுதிகளைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு பகுதியிலும் 8 வசனங்கள் உள்ளன. இது ஒரு கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது; தேவனுடைய வசனத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது, போற்றுகிறது, கற்பிக்கிறது. இது வேதாகமத்தின் பின்வரும் பணிகளை முக்கியமாக வலியுறுத்துகிறது:
தூய்மையான வாழ்க்கை:
இளைஞர்களை பரிசுத்தத்தை நோக்கி வழிநடத்துதல், தேவனுடைய பரிசுத்தத்தின் தரத்தை வெளிப்படுத்துவது, பாடுகளிலிருந்து எச்சரிக்கை அளிப்பது, அத்துடன் அசுத்தத்திலிருந்து சுத்திகரிப்பு அளிப்பதையும் உள்ளடக்கியது. இது, உலகில் பரவி உள்ள கடுமையான ஆவிக்குரிய இருட்டில், வழிகாட்டும் ஒளியாகவும் செயல்படுகிறது.
சோதனைகளில் வழிநடத்துதல்:
நாம் உயிருடன் இருக்கும் வரை, நாம் சோதனைகள், உபத்திரவங்கள் மற்றும் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டும். வேதாகமம் நுண்ணறிவை வழங்குகிறது, ஆவிக்குரிய குருட்டுத்தன்மையை நீக்குகிறது, மேலும் துன்பத்தில் ஆறுதலையும் பலத்தையும் வழங்குகிறது.
ஆவிக்குரிய வளர்ச்சி:
இது ஞானம், நிலைத்த தன்மை, நம்பிக்கை மற்றும் தூய்மை போன்ற குணங்களால் நிரம்பிய "விரிந்த இருதயத்திற்கு" வழிகாட்டுகிறது. இதனால் ஒருவர் மனதளவில் பரந்த மனம் கொண்டவராக கிறிஸ்துவின் சரீரமான திருச்சபையை அனைத்து மக்களிலும், அனைத்து பண்பாடுகளிலும், அனைத்து தேசங்களிலும் அங்கீகரித்து அரவணைக்கும் தன்மையைப் பெறுகிறார்.
வழிகாட்டலும் வாழ்வும்:
நீதியிலே போதித்து, பேராசை விடுவித்து, உண்மையான மற்றும் நித்தியமான மதிப்பை வழங்குகிறது. இந்த உலக வாழ்க்கைக்கு அர்த்தம் மற்றும் குறிக்கோளையும் தருகிறது.
வேதத்தின் ஞானத்தின் மூலம் புத்திசாலியான தீர்மானங்களை எடுக்க முடிகிறது.
விடுதலை:
தேவனுடைய வசனத்தை நேசித்து, அதற்கு கீழ்ப்படிந்து வாழ்வதிலேயே உண்மையான விடுதலை இருக்கிறது. இது விசுவாசிகளை பயமின்றி சாட்சியளிக்கச் செய்கிறது. சத்தியம் பாவிகளை விடுவிக்கிறது (யோவான் 8:32). பாவங்கள், மரபுகள், சடங்குகள், முன்அனுமானங்கள், எதிர்மறை எண்ணங்கள், நம்பிக்கையின்மை, விதியின் அடிமைத்தனம் ஆகியவைகளிலிருந்து விடுவிக்கிறது.
ஆறுதலும் வலிமையும்:
துன்பத்திலே ஆறுதலை வழங்கி, நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது. ஆறுதல், உபசாரம், ஆலோசனை ஆகியவற்றின் மூலம் விசுவாசிகளை நிலைத்திருக்கச் செய்து, தூக்கி நிறுத்துகிறது. இது பொன்னைவிட மதிப்புமிக்கது, தேனைவிட இனிமையானது.
மாற்றம்:
இது மனந்திரும்பல், கீழ்ப்படிதலான வாழ்க்கை, சமாதானம், நீதியான வாழ்வு மற்றும் தேவனுடன் ஆழமான உறவை நோக்கி வழிநடத்துகிறது.
புரிந்துகொள்ளுதல்:
இது எளியவர்களுக்கே கூட உள்ளுணர்வையும் ஞானத்தையும் அளிக்கிறது. சாதாரண அல்லது சராசரிக்கும் குறைவான புத்திசாலித்தனமுள்ளவர்களையும் தேவன் தம் மீது நம்பிக்கை வைத்து ஞானத்தைப் பெறச் செயல்படுத்துகிறார்.
நான் வார்த்தையை நேசிக்கிறேனா, கற்றுக்கொள்கிறேனா, வாழ்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran