போவோம் நமக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்வோம்

ஒரு அற்புதம், மகிமையான நிகழ்வு அல்லது அதிசயமான அனுபவம் நடைபெறும்போது, அதைப் பார்த்து வியப்பில் நின்று, அதிர்ச்சியடைந்து, அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் நிற்கும் சோதனை மனிதர்களுக்கு உண்டு. ஆனால், அந்த அனுபவங்கள் நம்மை அங்கேயே நிறுத்துவதற்காக அல்ல; விசுவாசத்தில் நிலைத்திருந்து, நம்பிக்கையோடு முன்னேறச் செய்வதற்காகவே தேவன் அனுமதிக்கிறார்.

மேய்ப்பர்கள்:
வயல்வெளியில் இருந்த மேய்ப்பர்களுக்குத் தேவதூதர்கள் காட்சியளித்தனர். அவர்கள் கடவுளிடமிருந்து ஒரு செய்தியையும், பெத்லகேமுக்குச் செல்லவேண்டிய வழிகாட்டுதலையும் பெற்றுக்கொண்டனர். இனி அவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது. "ஆண்டவர் நமக்கு அறிவித்த இந்த நிகழ்வைச் சென்று காண்போம்; வாருங்கள், பெத்லகேமுக்குப் போவோம்" என்று அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர் (லூக்கா 2:15). தேவதூதர்களின் தோற்றம் என்பது ஒரு சிறப்பம்சமே தவிர, அதுவே ஒரு முடிவோ அல்லது நின்றுவிடும் இடமோ அல்ல.

மறுரூப நிகழ்வுக்குப் பிந்தைய சீஷர்கள்:
பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையையும், மோசேயும் எலியாவும் தோன்றிய அதிசயத்தையும் கண்டார்கள். அந்த அனுபவத்தில் மகிழ்ந்த பேதுரு, அங்கேயே கூடாரங்கள் அமைத்து நிரந்தரமாக தங்க விரும்பினார் (மத்தேயு 17:4). ஆனால் அவர்கள் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். ஆவிக்குரிய உயர்ந்த அனுபவங்கள் கிடைக்கலாம்; ஆனால் அந்த நிலையிலேயே எப்போதும் தங்குவது தேவனுடைய திட்டமல்ல.

கெத்செமனேத் தோட்டத்துச் சீஷர்கள்:
கெத்செமனேத் தோட்டத்தில் ஆண்டவரோடு இணைந்து ஜெபிக்கும் பெரும் பாக்கியம் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருக்குக் கிடைத்தது. வருந்தத்தக்க வகையில், அவர்கள் உறங்கிவிட்டனர். அதன்பின், தங்களைக் காட்டிக்கொடுக்க வந்த துரோகியைச் சந்திக்கச் செல்லுமாறு ஆண்டவர் தம் சீஷர்களை அழைத்தார் (மத்தேயு 26:46). ஆண்டவர் ஜெபித்து முடித்திருந்தார்; தம் சொந்த விருப்பத்தைக் தேவனின் கரத்தில் ஒப்புவித்துவிட்டு, மனிதகுலத்தின் மீட்பிற்காகப் பிதாவின் கோபக் கிண்ணத்தை (துன்பங்களை) ஏற்றுக்கொண்டிருந்தார். அதன்பின், தேவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக அவர் நேராகச் சென்றார். அங்கே எவ்விதத் தாமதமோ, தயக்கமோ இருக்கவில்லை; மாறாக, விசுவாசத்தோடு எடுத்துவைத்த ஒரு துணிச்சலான நடைமுறை அங்கே இருந்தது.

ஒலிவமலைச் சீஷர்கள்:
உயிர்த்தெழுந்த பின்பு நாற்பது நாட்கள் கர்த்தர் தமது சீஷர்களுக்குத் தோன்றினார். பின்னர் ஒலிவமலையில் இருந்து பரலோகத்திற்கு ஏறிச் செல்லும் போது, சீஷர்கள் வானத்தை நோக்கி நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது தேவதூதர்கள் அவர்களிடம்; கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை நோக்கி நின்றுகொண்டிருக்கிறீர்கள்? உங்களிடமிருந்து பரலோகத்திற்கெடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசு, நீங்கள் அவரை பரலோகத்திற்குப் போகக் கண்ட விதமாகவே மீண்டும் வருவார்” என்றார்கள் (அப்போஸ்தலர் 1:11).
அதன்பின், கர்த்தர் கட்டளையிட்டபடி அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

நான் பிறரின் கவனத்தையும் புகழையும் நாடும் நபராக இருக்கிறேனா? அல்லது கர்த்தர் வழிநடத்தி இயக்குகிறபடியே முன்னேறிச் செல்லும் நபராக இருக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran