கர்த்தரிடத்தில் மகிழ்ச்சி

சிறையில் இருந்தபடியே பவுல், “கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருங்கள்” என விசுவாசிகளை உற்சாகப்படுத்துகிறார் (பிலிப்பியர் 4:4). தாவீதும், “கர்த்தரை நம்பி நன்மைசெய்;   கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:3-4) என கூறுகிறார். ஆம், இருவரும் சொல்லுவது ஒரே விஷயம் தான், கர்த்தரிலே மகிழ்ச்சி கொள்ளுங்கள் அதில் வாழ்வின் ஆறுதல், நம்பிக்கை, ஆசீர்வாதங்கள் இருக்கின்றன.

நம்பிக்கை:
கர்த்தரிடம் நம்பிக்கை வைத்தவர்கள் தெளிந்த பார்வையும், ஆழ்ந்த புரிதலும் பெறுகிறார்கள். நிலைமைகள் எப்படி இருந்தாலும், தேவனில் விசுவாசம் வைத்திருக்கும்போது மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம் கிடைக்கிறது. நம்பிக்கை என்பது பயம், பதட்டம், கவலை, சந்தேகம், பொறாமை ஆகியவற்றுக்கான எதிர்வினை மருந்தாகும்.

மகிழ்ச்சி: 
1. முதலில், எல்லா மகிழ்ச்சியும் ஆனந்தமும் கர்த்தரிடமிருந்து வரும் என்று எதிர்பார்ப்பதே தேவனில் வைத்திருக்கும் நம்பிக்கையின் ஆரம்பம். நம்முடைய விசுவாசம் கர்த்தரின் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டதால், அது விசுவாசிக்கு ஆனந்தத்தைத் தருகிறது.

2. இரண்டாவது, நமது உணர்வுகளை தவறான பாதையிலிருந்து திருப்பி, முக்கியமான விஷயங்களை நினைத்தும், செயல்பட்டும் மனநிலையை மாற்றலாம். பவுலும் சீலாவும் தங்களது நிலையை மறந்து பாடினர், துதித்தனர், ஜெபித்தனர் (அப்போஸ்தலர். 16:25-26). தாவீதும் அப்சாலோமுக்காக அழுதும் வருந்தியும் காணப்பட்டாலும், பின்னர் தன்னை கட்டுப்படுத்தி ராஜாவாக செயல்பட்டார் (2 சாமுவேல். 19:1-8).

3. மூன்றாவது, கர்த்தரிலே மகிழ்ச்சி கொள்ள இது ஒரு முயற்சியாகவே இருக்கிறது. பூமிசார் ஆசைகளை விட்டுவிட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிற ஆண்டவரை நோக்கி  மேலானவற்றையே நாட வேண்டும் (கொலோ. 3:1). உலகத்தின் கவலைகள் ஈர்ப்பு சக்திபோல கீழே இழுக்கலாம்; ஆனாலும் பரலோக பார்வையும் தேவவழிப் பயணமும் விசுவாசியை நிலைமைகளை கடந்துபோக உதவும்.

4. நான்காவது, தீயோர் தங்கள் செல்வத்திலே மகிழ்ந்தால், விசுவாசிகள் தேவ பயத்தோடும் திருப்தியோடும் நிலைத்த செல்வத்திலே மகிழ வேண்டும்.

5. ஐந்தாவது, கர்த்தரிலே மகிழ்ச்சி கொள்ளுதல் என்பது, அவருடைய ஆலயத்தில் தங்குதல், அவரது அழகைக் காணுதல், அவரிடமிருந்து கற்றுக் கொள்வதையே அர்த்தமாகக் கொண்டுள்ளது (சங். 27:4).

6. ஆறாவது, தேவன் தன் மக்கள் மீதெல்லாம் சந்தோஷம் கொள்கிறார். அவருக்குப் பிரியமானவர்கள் துக்கித்துக் கொண்டிருக்க முடியுமா? (நீதிமொழிகள் 8:31)

7. ஏழாவது, கர்த்தருடைய வசனத்தில் இரவும் பகலும் தியானிக்கிறவர் மகிழ்ச்சியோடும் ஆசீர்வாதத்தோடும் நிறைந்தவர்கள் ஆகிறார்கள் (சங். 1:1-3).

கர்த்தருடைய பிரசன்னம்:
சாது சுந்தர் சிங்ஒரு முறை இவ்வாறாக கூறினார்; "இயேசு கிறிஸ்து எங்கு இருக்கிறாரோ, அதுதான் பரலோகம். அவர் நரகத்தில் இருந்தாலும், அந்த இடம் பரலோகமாய் மாறிவிடும்." இதனால் ஒரு முக்கியமான உண்மை தெரிகிறது; ஒரு விசுவாசியின் மகிழ்ச்சி சூழ்நிலைகள் மூலம் வருவதல்ல. நரகத்தைப் போல் கஷ்டமான சூழ்நிலையிலும் கூட, அவருடைய உள்ளத்திலுள்ள மகிழ்ச்சியைப் பாதிக்க முடியாது. ஏனெனில், அந்த மகிழ்ச்சி கர்த்தரிடத்தில் வேரூன்றியதாகும்.

நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran