வதந்திகளால் கொலை செய்யத் தூண்டப்பட்டவர்

இருபத்தைந்து வயதான ராதிகா யாதவ், தேசிய அளவிலான டென்னிஸ் சாம்பியனாக இருந்தார். அவர் ஒரு டென்னிஸ் அகாடமி நடத்தி வந்தார். சமையல் செய்து கொண்டிருந்தபோது, அவரது தந்தையால் சுட்டுக் கொள்ளப்பட்டார். நாற்பத்தொன்பது வயதான தீபக் யாதவ் கூறியதாவது; “எனக்கு மனவருத்தமாகவும், மரியாதை குறைச்சலாகவும் இருந்தது. தினமும் பால் எடுக்க கிராமத்துக்கு போகும் போதெல்லாம், ‘மகளின் சம்பளத்தில் வாழ்கிறான்’ என்று மக்கள் என்னை கேலி செய்தார்கள்,” என்றார். அதனால் தன் மகளான  ராதிகாவை அகாடமியை மூடும்படி கூறியபோது, அவள் மறுத்துவிட்டாள் (என்.டி.வி.,  ஜூலை 11, 2025). பத்துக் கட்டளைகளில் ஒன்று கொலை செய்யாதிருப்பாயாக, ஆம் வேதாகமம் கொலையை தடை செய்கின்றது (யாத்திராகமம் 20:13). 

வதந்தி மற்றும் கேலிச் சொற்கள்:
ஒரு இதிகாசத்தில், நாயகன் எதிரி அரசனால் கடத்தப்பட்ட தனது மனைவியை மீட்டுக் கொண்டு வெற்றியுடன் திரும்புகிறான். ஆனால், கிராமத்து சலவைக்காரர்கள் நாயகனின் மனைவியைப் பற்றி வதந்தி பரப்பினர். இது நாயகனின் மனதைப் புண்படுத்தியது; அவரது அணுகுமுறையினால் மனைவியை பூமி விழுங்கும் நிலைக்கு அழைத்துச் சென்றது. வேதாகமம் இப்படி சொல்லுகிறது; வதந்தி நண்பர்களை பிரிக்கிறது, உறவுகளை சிதைக்கிறது, நல்ல பெயரை களங்கப்படுத்துகிறது, மேலும் அழிவை உண்டாக்கும் கொடிய நஞ்சாகும் (நீதிமொழிகள் 16:28; யாக்கோபு 3:6–8), ஆம் சாவுக்கேதுவான விஷம் தான் வதந்தி. 

கழுதையை சுமந்தவர்கள்:
ஒரு வயதானவரும், அவரது இளம் மகனும், ஒரு கழுதையை சில கிராமங்களின் வழியாக நடத்திச் சென்றனர். முதல் கிராமத்தில், அவர்கள் கழுதை மேல் ஏறாமல் நடந்ததால், மக்கள் அவர்களை “எவ்வளவு முட்டாள்கள்!” என்று கேலி செய்தனர். இரண்டாவது கிராமத்தில், தந்தை கழுதையின் மீது ஏறி, மகன் நடந்து சென்றான். அப்போது மக்கள், “இந்த தந்தை எவ்வளவு சுயநலவாதி! மகனுக்கு ஏற அனுமதிக்கவில்லையே” என்றனர். மூன்றாவது கிராமத்தில், மகன் கழுதையில் ஏறி, தந்தை நடந்து சென்றார். அப்போது அவர்கள், “இந்த மகன் எவ்வளவு இரக்கமற்றவன்! தந்தையை நடக்க அனுமதிக்கிறான்” என்றனர். நான்காவது கிராமத்தில், தந்தையும் மகனும் இருவரும் கழுதையின் மீது ஏறினார்கள். மக்கள், “இவர்கள் இருவரும் எவ்வளவு கொடூரமானவர்கள்! அந்த ஏழை கழுதைக்கு இரக்கம் காட்டாமல் இருக்கிறார்களே” என்றனர். ஐந்தாவது கிராமத்தில், தந்தை, மகன் இருவரும் சேர்ந்து கழுதையை சுமந்து சென்றனர். ஆக வதந்தி, கிசுகிசு, பொய்யான பேச்சுகளில் ஆர்வம் காட்டுவோர் இறுதியில் இந்த “கழுதையை சுமந்தவர்கள்” போல முடிவடைவார்கள்.

தவறான எண்ணம்:
கிராமத்தவர்கள், தந்தை தனது மகளின் வருமானத்தில் வாழ்கிறார் என்று கேலி செய்தனர். சில சமயங்களில் கலாச்சாரம் மற்றும் மரபுகள் இயல்பான, நியாயமான காரியங்களையே அவமதிப்பாகவும் அவமானமாகவும் ஆக்குகின்றன. அதே நேரத்தில், பிறரை ஒடுக்குகின்ற பாவங்களைப் பொருட்படுத்தாமல் விடுகின்றன.

நான் மனிதர்களை மகிழ்விக்க முயற்சிப்பவனாக /  முயற்சிப்பவளாக இருக்கிறேனா, இல்லை தேவனை மகிழ்விக்க முயற்சிப்பவனாக / முயற்சிப்பவளாக இருக்கிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran