தாவீது ஆண்டவரை இவ்வாறாக; “கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்” (சங்கீதம் 30:1) என்று பாடினான். தாழ்வு மனப்பான்மை மற்றும் பொறாமையால் சவுல் ராஜா தாவீதைக் கொடுமைப்படுத்தி தொடர்ந்து துரத்தினான். தாவீது குகைகளில் வாழ்ந்து பல இடங்களில் ஒளிந்து தஞ்சமடைந்தான். இறுதியில், தேவன் அவனுக்கு வெற்றி அளித்து, எருசலேமில் அவனுடைய சிங்காசனத்தை நிலைநிறுத்தினார். தனக்கென வீட்டைக் கட்டிய போது, தன் மகிமையை உயர்த்தாமல், தேவனின் மகத்துவத்திற்கே மகிமை அளித்தான். தாவீதின் அரண்மனை கட்டுவதற்கு, தீரு ராஜாவான ஈராம் தேவதாரு மரங்கள், தச்சர்கள் மற்றும் கற்சிற்பிகளை அனுப்பி உதவி செய்தான் (2 சாமுவேல் 5:11-12; 1 நாளாகமம் 14:1-2). தேவனை உயர்த்திப் புகழ்ந்ததன்மூலம், தாவீது மூன்று தலைமைப் பாடங்களை கற்றுக் கொடுக்கிறான்.
தம்மை நிலைநிறுத்திய தேவனை உயர்த்திப் புகழ்ந்தான்:
ஒரு ஆட்டுக் கூட்டத்தை மேய்த்துக் கொண்டிருந்த தாவீதைக் கொண்டு, தேவன் தமது ஜனங்களை மேய்க்கும் மேய்ப்பராக்கி அழைத்தார் (சங்கீதம் 78:70-72). போர்வீரனாக எந்த விதமான முறையான பயிற்சியும் இல்லாதிருந்தாலும், கோலியாத் உட்பட சத்துருக்களுடன் போராட, அவனது விரல்களையும் கரங்களையும் தேவன் தாமே பயிற்றுவித்தார் (சங்கீதம் 144:1). தேவனே மனிதனை தலைமைக்கு அழைக்கிறார்; பெற்றோர்களாலும் ஜனங்களாலும் ஒருவன் நியமிக்கப்படுவதில்லை. தேவன் தாமே தேர்ந்தெடுத்து, அழைத்து, ஊழியத்திற்கு நியமித்தவர்களைத் தேவையான அனைத்தாலும் சீர்ப்படுத்துகிறார்.
தம் ராஜ்யத்திற்காக தேவனை உயர்த்திப் புகழ்ந்தான்:
ராஜ்யம் தமக்கல்ல, கர்த்தருக்கே சேர்ந்தது என்பதற்காக தாவீது தேவனை உயர்த்திப் புகழ்ந்தான். தேவனே முழு பூமியின் பரம அதிகாரம் உடைய ஆட்சியாளர். எல்லா ராஜ்யங்களும் அவருக்கே சொந்தம். தலைவர்களை நியமிப்பது அவரது சுய அதிகாரம். தலைவர்கள் தேவனுக்காக ஊழியம் செய்யும் தற்காலிக நிர்வாகிகள் மட்டுமே. திருச்சபை மேய்ப்பர்கள் மற்றும் ஊழியத் தலைவர்கள், திராட்சைத்தோட்டமும் ராஜ்யமும் உள்ளூர் ஊழியமும் அனைத்தும் தேவனுக்கே சொந்தம் என்பதை உணர வேண்டும். தேவனுடைய ராஜ்யத்தில் உள்ள நிர்வாகிகள், உரிமையாளர்கள் அல்ல; அவர்கள் ஊழியர்களும் அடிமைகளும் ஆவர்.
தம்மை பயன்படுத்திய தேவனை உயர்த்திப் புகழ்ந்தான்:
நீதிக்கான கருவியாகவும், தேவனுடைய ஜனங்களுக்கு ஆசீர்வாதமாகவும், தேவனுடைய ராஜ்யத்திற்கு பங்களிப்பாகவும் தன்னை பயன்படுத்தியதற்காக தாவீது திருப்தியுடன், நன்றியுடன், ஆனந்தத்துடன் இருந்தார். தேவன் தமது ராஜ்யத்திற்கும் மகிமைக்குமே தனக்கு திறமைகள், வளங்கள், வரங்கள், வாய்ப்புகள், தொடர்புகள், திறந்த கதவுகள் ஆகியவற்றை அருளினார். அவை தனிப்பட்ட பெருமைக்காகவோ அல்லது சுய மகிமைக்காகவோ அல்ல. இந்த அழைப்பு மற்றும் ஆசீர்வாதங்கள் சபையை கட்டியெழுப்பவும், சபையை விரிவுபடுத்தவும், தேவனுடைய ராஜ்யத்தை விரிவாக்கவும் கொடுக்கப்பட்டவையே.
தாவீதைப் போலவே, அவருடைய ராஜ்யத்திற்காக நம்மைத் தேர்ந்தெடுத்து, ஆசீர்வாதங்களின் வாய்க்காலாக உருவாக்கியதற்காக நான் தேவனைப் போற்றுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran