வீட்டு ஏக்கம்

ஒரு இளைஞன் தூரத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்பப்பட்டான்.  அவன் பெற்றோர் பல தியாகங்கள் செய்தனர்; வங்கியில் கடன் வாங்கி, அவனை உயர்கல்விக்காக அனுப்பினர்.  ஆனால் பிங்-பாங் பந்தைப் போல, அவன் ஒரே வாரத்திற்குள் வீட்டிற்குத் திரும்பி, பெற்றோரின் கனவுகளை சிதைத்தான்.  அவன் கூறிய காரணம் “வீட்டு ஏக்கம்” (homesickness). அவனுக்கு பழக்கமான உணவு கிடைக்கவில்லை, புதிய நண்பர்களின் முகங்கள் பரிச்சயமில்லாதவை, காலநிலை கடுமையாக இருந்தது, மேலும் அவன் தனிமையாக உணர்ந்தான். வேதாகமத்திலும் கூட சிலர் வீட்டு ஏக்கத்தை (homesickness) உணர்ந்தனர்; ஆனால் தேவன் வழங்கிய அழைப்பையும் ஆணையையும் நிறைவேற்றும் நோக்கத்தால் அதனை வெற்றிக் கொண்டனர்.

அன்புக்குரிய மகன் யோசேப்பு:
தந்தையான யாக்கோபு அன்புப் புதல்வனாகிய யோசேப்புக்கு, பலவர்ண ஆடையை உடுத்தி அவனை அலங்கரித்தார்.  ஆனால் அவனது வாழ்க்கைப் பயணத்தில் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டி வந்தது. பொறாமையால் எரிந்த சகோதரர்கள் அவனைக் கொல்லத் திட்டமிட்டனர்; பின்னர் அவனை அடிமையாக விற்றுவிட்டனர்.  அதன் மூலம் அவன் எகிப்தில், போத்திபார் எனும் அதிகாரியின் வீட்டிற்கு சென்றடைந்தான்.

தேவ தயவு: 
ஒழுக்கம், முயற்சி, மற்றும் கடின உழைப்பின் மூலம், யோசேப்பு ஊழியர்களின் அடுக்கு நிலைகளில் முக்கியமான இடத்தைப் பெற்றான்.  ஒருவேளை, யோசேப்பு போத்திபாரை தன் தந்தை போல நினைத்திருக்கலாம்.  நிலைத்தும் நிம்மதியாகவும் இருந்த அவனது வாழ்க்கை திடீரென ஒரு அதிர்ச்சியை எதிர்கொண்டது.

சிறைச்சாலை: 
யோசேப்பை கவர முயன்ற போத்திபாரின் மனைவி தோல்வியடைந்தபோது, பொய்யான குற்றச்சாட்டை சுமத்தினாள்.  அதன் விளைவாக யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டான்.  அங்கேயும் அவன் தலைவராக இருந்தான்; மேலும் இரு சிறைவாசிகளின் கனவுகளையும் விளக்கினான்.  பார்வோனின் சமையல்காரனும் கைதியாக இருந்தான்.  யோசேப்பு அவனிடம், “நீ உன் பழைய பணிக்கு மீண்டும் நியமிக்கப்படுவாய்” என்று கூறினான்.  மேலும், தன்னை நினைவில் வைத்திருக்குமாறு அவனை கேட்டுக் கொண்டான்; “நான் ஒரு எபிரேயனாக கடத்தப்பட்டவன் (திருடிச் செல்லப்பட்டவன்), என் வீட்டிற்கு திரும்ப விரும்புகிறேன்” எனும் மனக்கசப்புடன் கூறினான்.  வீட்டு ஏக்கம் (homesickness) அவனை வாடவைத்தது (ஆதியாகமம் 40:13–15).
யோசேப்பு இரண்டு ஆண்டுகள் மறக்கப்பட்டவனாக இருந்தான்.

உயிர்களைக் காப்பாற்றுதல்: 
பார்வோனின் கனவுகள், யோசேப்பைப் பற்றி சமையல்காரனுக்குத் நினைவூட்டின.  பார்வோனின் ஆணைப்படி யோசேப்பு அவனின் முன்னிலையில் நிறுத்தப்பட்டான் மற்றும் கனவுகளை விளக்கினான்.  ஆனால், இம்முறை யோசேப்பு தன் வீட்டிற்கு திரும்ப அனுமதி கேட்கவில்லை; மாறாக, ஏழு ஆண்டுகள் வளமுள்ள காலத்தில் தானியங்களை சேகரித்து, பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளில் அவற்றை பகிர்ந்து வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.  மனிதர்களின் உயிர்களை காப்பாற்றும் தேவ நோக்கத்தை புரிந்துக் கொண்டதால், அவன் பதினான்கு ஆண்டுகள் நீண்ட பணி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டான்  (ஆதியாகமம் 41:37–45; 45:5). சிறையில் கழித்த இரண்டு ஆண்டுகள், யோசேப்பின் வீட்டு ஏக்கத்தைக் (homesickness) குணப்படுத்தி, தேவனுடைய சித்தத்தினை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்கத் தயார் ஆக்கின.

நான் பொறுப்புகளை மறந்து வீட்டு ஏக்கத்தில் இருக்கிறேனா அல்லது தேவனின் பணிகளை ஏற்கத் தயாராக இருக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran